Tamil News
Home செய்திகள் முஸ்லிம்கள் மீதான பாரபட்சம் நிறுத்தப்படவில்லை என்றால், நாங்கள் எந்த முகத்துடன் அரசாங்கத்தில் இருப்பது -ஹக்கீம்

முஸ்லிம்கள் மீதான பாரபட்சம் நிறுத்தப்படவில்லை என்றால், நாங்கள் எந்த முகத்துடன் அரசாங்கத்தில் இருப்பது -ஹக்கீம்

 

என்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று கேட்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறாமல் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ‘பிரஜா ஜல அபிமானி’ வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் (23) கண்டி, தெல்தோட்டையில் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது; எங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்து பாவிகள் சிலர் செய்த

பயங்கரவாத செயலினால், அப்பாவிகள் பலர் இன்றும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்று அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற பல விடயங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணாமல் அரசாங்கத்துடன் சேர்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.

பெண்களின் ஆடை விடயத்தில் தேவையில்லாத சுற்றுநிருபத்தை கொண்டுவந்துள்ளதால், அரச தொழில்களில் இருக்கின்ற முஸ்லிம் பெண்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரத்துக்குள் அதை நிவர்த்திசெய்ய வேண்டுமென நாங்கள் அரசாங்கத்திடம் வலுக்கட்டாயமாக சொல்லியிருக்கிறோம்.

குறித்த சுற்றுநிருபம் திருத்தப்பட்டு, முஸ்லிம் பெண்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பது நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஒன்றாகும்.

முஸ்லிம்கள் மீதான பாரபட்சம் நிறுத்தப்படவில்லை என்றால், நாங்கள் எந்த முகத்துடன் அரசாங்கத்தில் இருப்பது என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டிருக்கிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து தீர்வை பெற்றுத்தருவோம் என்ற உத்தரவாதத்துடன்தான் எமது அமைச்சர்கள் இருவர் பதவிகளை மீளப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

Exit mobile version