Tamil News
Home உலகச் செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிப்பு: தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிப்பு: தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்ச சகோதரர்கள் அரசின் உத்தரவால், 2019இல் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் கூடினர். இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நினைவிடம் தகர்க்கப்படுவதை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர் தாக்குதலுக்கு உள்ளானார்.

பல்கலைக்கழக வாளகத்தைச் சுற்றி, சிறப்பு அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இலங்கை அரசின் நடவடிக்கைக்கும், அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எதிராக மாணவர்கள் உள்ளிட்டோர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. எனினும் எதற்கும் செவிசாய்க்காத இலங்கை அரசு, நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூணை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது.

இந்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம்,

“ஈழப்பேரழிவைச் சந்தித்து ஆறா ரணத்தையும், கொடும் பேரிழப்பையும் சந்தித்து நிற்கும் தமிழர்களைச் சீண்டும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப் படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இன அழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது. முள்ளிவாய்க்கால் நிலத்தில் போர் மௌனிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட்ட நினைவிடத்தை இடித்திருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. ஈழத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றுமுடித்து, அந்தப் இழப்புக்கு நீண்டகாலமாய் நீதிகேட்டு உலகத்தமிழர்கள் உள்ளம் குமுறிக்கொண்டிருக்கையில், வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலச் சிங்களப் பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கும் இக்கோரச்சம்பவம் ஏற்றுக்கொள்ளவே முடியாத வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒரு இனத்தைப் பேரழிவுக்குள் தள்ளி, இரண்டு இலட்சம் தமிழர்களைத் துள்ள துடிக்கப் படுகொலை செய்து, தமிழர்களின் வீட்டையும், நாட்டையும் அழித்து, நிலங்களை அபகரித்து, தமிழ்ப்பெண்களைச் சூறையாடி, தமிழர்களை அடையாளமற்று அழித்து முடித்து, மொத்த நாட்டையும் தங்களுடையதாக மாற்றிக் கொண்டுவிட்ட பிறகும், தமிழர்கள் மீதான வன்மமும், ஆத்திரமும் துளியளவும் சிங்களப்பேரினவாதிகளுக்குக் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. போர் முடிந்து, அங்கு அமைதி திரும்பி விட்டது என்றுரைத்தவர்கள் இத்தகைய அடையாள அழிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அன்றைக்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்டது; இன்றைக்கு யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள நினைவு மண்டபம் அழிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் தொடர்ச்சியே. ஒற்றை இலங்கைக்குள் சிங்களர்களோடு இணைந்து தமிழர்கள் வாழ்கிறவரை, சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கீழ் இருக்கிற வரை எத்தனை ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு இதுதான் நிலை என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உலகத்தார் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் பண்டிகையைக் கொண்டாடும் மாதமான தை மாதத்தில் இனப்படுகொலையாளன் ராஜபக்சே அரசு தமிழர்களுக்குப் பொங்கல் பரிசாக இந்த இடிப்பை நிகழ்த்தியிருக்கிறது.

எங்கள் மொழியைச் சிதைக்கலாம்; இனத்தை அழிக்கலாம். உரிமைகளைப் பறிக்கலாம். நிலங்களை ஆக்கிரமிக்கலாம். அடக்குமுறையை ஏவலாம். ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடலாம். பயங்கரவாதிகளெனப் பழி சுமத்தலாம். ஆனால், எங்கள் விடுதலை உணர்வுகளை எந்த வல்லாதிக்கத்தாலும், பேரினவாதத்தாலும் விளங்கிட முடியாது. அடக்கி ஒடுக்க முற்படுகிறபோதெல்லாம் சினம்கொண்டு திமிறி எழும் பேருணர்ச்சியைக் கொண்டு தமிழ்த்தேசிய இன மக்கள் நாங்கள் மீண்டெழுவோம். இந்திய வல்லாதிக்கமும், பன்னாட்டுச்சமூகமும் எங்களை வஞ்சிக்கலாம். துரோகம் விளைவிக்கலாம். ஒருநாள் இந்நிலை மாறும். களமும், காலமும் எங்கள் கைகள் வரப்பெறும். அன்றைக்கு எங்கள் நாட்டை நாங்கள் மீளப்பெறுவோம்.

அறம் தோற்றால் மறம் பிறக்கும்; மறம் தோற்றால் மீண்டும் அறமே தழைக்கும் எனும் இயற்கை நியதிகளுக்கேற்ப, அறவழியில் எங்களது தாயக விடுதலைக்காகவும், எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் உலகரங்கில் குரலெழுப்பிக் கொண்டிருக்கிறோம். ஒருநாள் நாங்கள் அதிகார அடுக்குகளை அடைவோம். இனவழிப்புக்கு உள்ளாகி  நிர்கதியற்று  நிற்கிற வேளையில், கட்டிவைத்த நினைவிடம் கூடச் சிங்கள அரசாங்கத்தை நிம்மதியாய் உறங்கவிடவில்லை. இன்றைக்கு எதை எண்ணி  அச்சப்பட்டு ஈழத்தமிழ் மக்களை அச்சுறுத்தி  அம்மண்ணில் இருந்த ஒற்றை நினைவிடத்தையும் சிங்களப் பேரினவாதம் அழித்து முடித்ததோ, ஒருநாள் அதே மண்ணைத் தமிழர்கள் நாங்கள் ஆளுகை செய்வோம். எங்கள் தாயகத்தை மீள்கட்டுமானம் செய்வோம். அன்றைக்கு எங்களது வெற்றிச்சின்னத்தை இதே யாழ் பல்கலைக்கழகத்தில் கட்டியெழுப்புவோம். எங்கள் நாடும், எங்கள் மண்ணும் கைவரப்பெறும் நாள் வரை ஓயோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் தனது ருவிற்றர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ள இலங்கை இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன், தமிழனத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாக சிதைக்கும், சிங்களர்களின் ஆதிக்கத்தை தகர்ப்போம் என்றும், தமிழர் அடையாளம் காப்போம் என்றும் அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version