Tamil News
Home உலகச் செய்திகள் மியான்மரில் இராணுவப்புரட்சி – அரச அதிகாரிகள் சிறை பிடிப்பு

மியான்மரில் இராணுவப்புரட்சி – அரச அதிகாரிகள் சிறை பிடிப்பு

மியான்மரில் தலைவர் அங் சன் சூகி உட்பட பல உயர்மட்ட தலைவர்களை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக அந்த நாட்டின் பேச்சாளர் மையோ நியன்ட் சி.என்.என் ஊடகத்திற்கு இன்று  தெரிவித்துள்ளார்.

தலைநகரை இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவே தெரிகின்றது. பெருமளவானோர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில நாட்களாக நாட்டின் பலம் பொருந்திய படையினருக்கும் அரசுக்குமிடையில் முறுகல்நிலை ஏற்பட்டிருந்தது. அங்கு இடம்பெற்ற தேர்தல் முறைகேடானது என இராணுவம் தெரிவித்திருந்தது.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் என்.எல்.டி கட்சி வெற்றி பெற்றிருந்தது. 2015 ஆம் ஆண்டு அங்கு இராணுவ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெற்ற இரண்டாவது தேர்தல் இது.

ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றுமாறு மியான்மார் இராணுவத்திற்கு 16 அனைத்துலக அமைப்புக்கள் கடந்த 29 ஆம் நாள் கோரிக்கை விடுத்திருந்தன.

ஜனநாயக வழிமுறைகளில் இடம்பெற்ற தேர்தல்களில் மாற்றங்கள் ஏற்படுவதை தாம் எதிர்ப்பதாகவும், அங்குள்ள மக்களின் அமைதியான வாழ்வுக்காக இணைந்து பணியாற்றப் போவதாகவும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தன.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற அங் சன் சூகி ஜனநாயகத்தின் தலைவியாக பார்க்கப்பட்டாலும், பின்னர் ரோகிங்கியா பகுதியில் இடம்பெற்ற இனஅழிப்பு நடவடிக்கையால் அவரின் பெயர் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது.

Exit mobile version