Home ஆய்வுகள் மாவையின் தலைமைக்கு சோதனை ; மேயர் யார் எனத் தீர்மானித்த டக்ளஸ் – அகிலன்

மாவையின் தலைமைக்கு சோதனை ; மேயர் யார் எனத் தீர்மானித்த டக்ளஸ் – அகிலன்

பொதுத் தேர்தல் முடிவுகளின் பின்னர் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட தலைமைத்துப் போட்டி இப்போது யாழ். மாநகர சபையை இழக்கும் நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. இது மாவை. சேனாதிராஜாவின் தலைமைக்கு ஏற்பட்ட கடும் சோதனை. அதேபோல, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புதிய சவால் ஒன்றைச் சந்தித்திருக்கின்றது. மாநகர சபையில் அதற்கிருந்த 13 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் மணிவண்ணனுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருப்பது கஜேந்திரன்களுக்குப் பலத்த அடியாக விழுந்திருக்கின்றது.

எந்தக் கட்சியிலிருக்கின்றார் என்பதே தெரியாமல் தனித்து நின்ற மணிவண்ணன் யாழ். மாநகரசபையின் திடீர் மேயராகியிருக்கின்றார். தமிழ் அரசியல் பரப்பில் கடந்த வாரம் புதன்கிழமை இடம்பெற்ற முக்கிய அரசியல் விவகாரமாக இதுவே இருப்பதால், இந்த வாரம் இது தொடர்பில் – அதன் பின்னணியில் இடம்பெற்ற அரசியல் குறித்து பார்ப்போம்.

யாழ். மாநகரசபையின் முதல்வர் பதவியை ஆர்னோல்ட் இழந்தமைக்குக் காரணம் அவரால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டமை தான். வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவை தோல்வியடைந்தால் மேயர் பதவி விலக வேண்டும் என்பது விதி. அதேவேளையில், தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கான தார்மீக உரிமையையும் அவர் இழந்து விடுகின்றார். அதனால்தான் ஆர்னோல்டடைத் தவிர்த்து மற்றொருவரை கூட்டமைப்பு மேயர் பதவிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மாவை – சுமந்திரன் மோதல்

Capture 2 மாவையின் தலைமைக்கு சோதனை ; மேயர் யார் எனத் தீர்மானித்த டக்ளஸ் -	அகிலன்

பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த பின்னர் தமது தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மாவை. சேனாதிராஜா முன்னெடுக்கும் அரசியல் நகர்வுகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றது. குறிப்பாக சுமந்திரனை ஓரங்கட்டுவதற்காக அவர் முன்னெடுக்கும் ஒவ்வொரு நகர்வுகளும் சுமந்திரனால் முறியடிக்கப்பட்டே வந்திருக்கின்றது. இதன் உச்சக் கட்டம்தான் மாவை ஆதரித்த ஆர்னோல்ட் தோல்வியடைய மேயர் பதவியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பிரிந்து நிற்கும் மணிவண்ணன் கைப்பற்றியிருக்கின்றார்.

கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கட்சிகளை இணைத்து புதிய அணி ஒன்றை உருவாக்குவதற்கு மாவை எடுத்த முயற்சி அரைகுறையாக நிற்கின்றது. புதிய அரசியலமைப்பு யோசனை, ஜெனீவாவுக்கான பிரேரணை என எல்லாம் அந்த புதிய கூட்டணியின் சார்பில் தயாராகப் போவதாக மாவை பரபரப்பு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவை அனைத்தும் இப்போது கைவிடப்பட்ட நிலை.

இறுதியாக யாழ். மாநகர சபை விவகாரத்தை கைகளில் எடுத்துக்கொண்ட மாவையர் அதனையும் சொதப்பியிருக்கின்றார். மாநகர முதல்வராக இருந்த ஆர்னோல்ட் முன்னர் சுமந்திரனின் வலது கையாகச் செயற்பட்டவர். பொதுத் தேர்தல் விருப்பு வாக்கு வேட்டையில் இருவருக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. சுமந்திரன் அணியிலிருந்து பிரிந்து சென்ற ஆர்னோல்ட், மாவையுடன் இணைந்து கொண்டார். மாவைக்கும் சுமந்திரனைப் பலவீனப்படுத்த ஆர்னோல்ட் போன்ற ஒருவரை தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது.

மாவையின் நகர்வு

யாழ். மாநகர முதல்வர் பதவியை ஆர்னோல்ட் இழந்த உடனடியாகவே சுமந்திரன் காய்நகர்த்த ஆரம்பித்தார். தனக்கு ஆதரவாகச் செயற்படக்கூடிய சொலமன் சிறிலை முதல்வர் பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கான வியூகங்களை அவர் வகுத்தார். தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரான சொலமன் சிறில் முன்னர் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது இலக்கு வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். முதல்வர் பதவிக்கான வேட்பாளராக சொலமன் சிறில்தான் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைத்தான் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் கொண்டிருந்ததாகத் தெரிகின்றது.

ஆனால், சொலமன் சிறிலை நியமிப்பது சுமந்திரன் தரப்பைப் பலப்படுத்துவதாக அமைந்து விடலாம் எனக் கருதிய மாவை, மீண்டும் ஆர்னோல்ட்டை தமிழரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்காக களத்தில் இறக்கினார். இறுதி வேளையில் மாவையும், சி.வி.கே.சிவஞானமும் எடுத்த முடிவுதான் இது என்கின்றன தமிழரசுக் கட்சியின் உள்ளக வட்டாரங்கள். “இரண்டு தடவைகள் வரவு செலவுத் திட்டத்தின் போது தோற்கடிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் களத்தில் இறக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது” என இறுதி வேளையில் மாவைக்கு அனுப்பிய செய்தியில் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

சொலமன் சிறிலை களமிறக்குவது என்ற நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுத்திருந்தால், போட்டியின்றியே அவர் வெற்றிபெற்றிருக்கக் கூடிய சூழ்நிலை இருந்தது. மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கும் மதிப்பும் இருந்தது. ஆனால், ஆர்னோல்ட்டை களமிறக்குவது என மாவை முடிவெடுத்த பின்னர்தான் தானும் களமிறங்குவது என்ற நிலைப்பாட்டை மணிவண்ணன் எடுத்ததாகச் சொல்லப்படுகின்றது. மணிவண்ணனுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது தழிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி.யும் தன்னை ஆதரிக்கும் என்ற நம்பிக்கைதான்.

வாக்கெடுப்பு முடிவு

மாநகரசபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றே கோரியிருந்தனர். இதன்படி மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பகிரங்கமாக நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் ஆர்னோல்ட்டுக்கு 20 வாக்குகளும், மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் உறுப்பினரும் மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினரும் ஆனோல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) 10 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினரும் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினர் என 4 பேர் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தனர்.

இதற்கமைய யாழ். மாநகர சபையின் புதிய மேயராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சபையில் அறிவித்தார்.

டக்ளஸின் நகர்வு

ஆர்னோல்ட் – மணிவண்ணன் பலப்பரீட்சையில் உண்மையில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தவர் டக்ளஸ்தான். டக்ளஸின் ஈ.பி.டி.பி.க்கு மாநகரசபையில் இருந்த பலம்தான் மணிவண்ணனை மாநகர முதல்வராக்கியுள்ளது. ஆர்னோல்ட் சார்பிலும் டக்ளஸிடம் ஆதரவு கோரி தூது அனுப்பப்பட்டதாக தகவல் உள்ளது. இது இரகசியத் தூதாக இருந்தமையால் டக்ளஸ் அதனைக் கணக்கில் எடுக்கவில்லை. எழுத்து மூலமாகக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அதனைப் பரிசீலிக்க தான் தயார் என டக்ளஸ் நிபந்தனை விதித்தார். டக்ளஸிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுவது தமக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்பதால் கூட்டமைப்பு மௌனமாக இருந்துவிட்டது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஈ.பி.டி.பி. தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. மணிவண்ணனை ஆதரிப்பதென இறுதி நேரத்தில் டக்ளஸ் தீர்மானித்தமைக்கு சில அரசியல் காரணங்கள் உள்ளன. இதற்கு கஜேந்திரன்கள் வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டாலும்கூட, இந்த முடிவின் மூலம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை டக்ளஸ் விழுத்தியிருக்கின்றார்.

  1. தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருந்த மாவை அணி – சுமந்திரன் அணி என்ற பிளவை மேலும் தீவிரமாக்கியுள்ளார்.
  2. கஜேந்திரகுமாரைப் பலவீனப்படுத்தியிருப்பதுடன் – முன்னணியில் உருவாகியிருந்த விரிசலை அதிகப்படுத்தியுள்ளார்.
  3. மாநகரசபையில் ஈ.பி.டி.பி. சொல்வதைக் கேட்டுச் செயற்பட வேண்டிய நிலையை புதிய முதல்வருக்கு ஏற்படுத்தியுள்ளார். இந்த மூன்று ஈ.பி.டி.பி.க்கு சார்பானவை. டக்ளஸ் நிதானமாகச் சிந்தித்து செயற்பட்டிருக்கின்றார்.

தீவிரமடையும் முரண்பாடு

யாழ். மாநகர சபை என்பது தமிழ் மக்களின் பிரதானமான அடையாளம். அதனை இழப்பதென்பது தமிழரசுக் கட்சிக்கு உண்மையில் பாரிய ஒரு பின்னடைவுதான். இதற்குக் காரணம் மாவை தான் என சுமந்திரன் வெளியிட்ட அறிக்கையும், அதற்கு மாவை கொடுத்துள்ள  பதிலடியும் தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுப் போர் நடுவீதிக்கு வந்துவிட்டதை உணர்த்துகின்றது.

இந்த மோதல்களுக்கு மத்தியில் 88 வயதான கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  புதுவருடம் பிறந்த போது அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.

அடுத்த தலைமையைக் கைப்பற்றுவதற்கான மாவை – சுமந்திரன் அணிகளின் மோதல் மேலும் தீவிரமடைவதற்கான சூழ்நிலைகள்தான்  காணப்படுகின்றன. யாழ். மாநகரசபை விவகாரம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியிருக்கின்றது. தலைமையைக் கைப்பற்ற இரு தரப்பினரும் வைத்திருக்கும் உபாயங்கள் என்ன என்பதை மற்றொரு வாரத்தில் பார்ப்போம்.

Exit mobile version