Tamil News
Home செய்திகள் முழு இராணுவ மயமாகும் நாட்டின் சிவில் நிர்வாகம் – ஹக்கீம் எச்சரிக்கை

முழு இராணுவ மயமாகும் நாட்டின் சிவில் நிர்வாகம் – ஹக்கீம் எச்சரிக்கை

நாட்டின் சிவில் நிர்வாகத்துறை முழுமையான இராணுவ மயமாகும் நிலையில் சென்றுகொண்டிருக்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்று தடுப்பு விடயங்களைக் கையாள்வதற்கு மாவட்ட ரீதியாக இராணுவ அதிகரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னரான சூழலில் நாட்டின் சிவில் நிர்வாகத்துறையில் முப்படைகளையும் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப் பட்டனர். நாட்டின் பாதுகாப்புத்துறை தவிர்ந்த வெளிவிவகாரம், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவ்விதமான படை அதிகரிகள் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் என்று பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் ஜனாதிபதி படை அதிகாரிகளைப் பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் நடைமுறைச்சாத்தியமாக்கலாம் அல்லது அவர்களுடன் பணியாற்றுவது தனக்கு இலகுவானது என்று கருதமுடியும். அதற்காக சிவில் நிர்வாகத்தில் மேலும் படை அதிகரிகளை இணைத்துக்கொள்கின்றமை நாட்டில் படைத்துறையை மையப் படுத்திய நிர்வாகமொன்று விரைவில் ஏற்படும் அபாயத்தை உருவாக்குவதாகவுள்ளது.

விசேடமாக கொரோனா நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு, முப்படைகளின் தளபதி தலைமையிலான தேசிய செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை ஓரளவிற்கேனும் ஏற்றுக்கொண்டாலும், அதன் பின்னர் சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகரியை நியமித்தமை தற்போது மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக இராணுவ அதிகாரிகளை நியமித்தமை பேரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

விசேடமாக கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கருத்தில்கொள்ளப்படாது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றது. இதனால் தமக்கான அடிப்படை உரிமையைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம் சமூகத்திடமிருந்து வெகுஜனப் போராட்டங்கள் வாயிலாக ஆதங்கங்கள் நாடளாவிய ரீதியில் வெளிக்கிளம்பியுள்ளன.

இத்தகையதொரு சூழலில் மாவட்ட ரீதியாக கொரோனா விடயங்களை கையாள இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளமையானது அவர்களின் நியாயமான கோரிக்கையை இராணுவத்தைப் பயன்படுத்தி அடக்குமுறை மூலம் முடிவுக்குக் கொண்டுவருதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்துள்ளதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

எனவே, முஸ்லிம்களின் உணர்வுரீதியான விடயங்களில் தொடர்ந்து காண்பிக்கப்படும் பாரபட்சங்களால் அந்த மக்கள் கொதித்துப்போயுள்ள நிலையில் இராணுவத்தின் மூலம் அவர்களின் வெளிப்பாடுகளை கட்டுப்படுத்த முனைவதானது மிகத்தவறானதொரு அணுகுமுறையாகும். அதுமட்டுமன்றி ஜனநாயக விரோதச் செயல்பாடுமாகும். எனவே இவ்விதமான சர்வாதிகார இராணுவ ஆட்சியை நோக்கிய போக்கை உடன் கைவிட வேண்டியது அவசியம்” என்றார்.

Exit mobile version