Home ஆய்வுகள் மாடுகளை கொல்லுவோர் நாளை மனிதர்களையும் கொல்லுவார்கள் – மட்டு.நகரான்

மாடுகளை கொல்லுவோர் நாளை மனிதர்களையும் கொல்லுவார்கள் – மட்டு.நகரான்

எங்கள் உயிர் இருக்கும் வரையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியை யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம். அந்த பகுதி எங்கள் சொத்து. அதனை யாரும் அபகரிக்க விடமாட்டோம் என்று மட்டக்களப்பின் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களின் குடும்ப உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நாங்கள் எங்கள் உறவுகளின் போராட்டத்திற்கு என்று உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவிக்கின்றனர்.

batti cattle மாடுகளை கொல்லுவோர் நாளை மனிதர்களையும் கொல்லுவார்கள் - மட்டு.நகரான்வடகிழக்கில் இதுவரையில் நடைபெற்ற போராட்டங்கள் எல்லாம் ஏதாவொரு வகையில் தனிப்பட்டவர்கள் இணைந்து அல்லது கிராமங்கள் இணைந்து அல்லது தமிழ் தேசியவாதிகள் இணைந்து என பல்வேறு தரப்பினர் இணைந்து முன்னெடுத்த போராட்டமாகவேயிருந்துவந்தது.

ஆனால் முதன்முறையாக மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு கோரி முன்னெடுக்கப்படும் போராட்டமானது கால்நடை பண்ணையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் போராட்டமாக மாற்றம் பெற்று நிற்கின்றது.

இந்த நிலையில் 90 நாளை பூர்த்திசெய்துள்ள கால்நடை பண்ணையாளர்களின் போராட்டமானது தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. பொலிஸ்துறை, நீதித்துறை, அரச துறை உட்பட அனைத்து துறைகளும் பண்ணையாளர்களை கண்டுகொள்ளாத நிலையிலேயே இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறான நிலையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் தொடர்ச்சியான அத்துமீறிய காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.தற்போது வரைக்கும் அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட அத்துமீறிய காணி அபகரிப்பாளர்கள் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கையில் ஈடுபடும் நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பாதுகாக்கமுடியாத திண்டாட்ட நிலைமை ஏற்பட்டுள்ளது.

தாங்கள் போராட்டம் நடாத்தி தொடங்கி இன்றுடன் 90 நாட்கள் கடந்துள்ள நிலையில் 190க்கும் மேற்பட்ட மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் அத்துமீறிய குடியேற்றக்காரர்களினால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு முறையிடச்சென்றால் முறைப்பாட்டை பண்ணையாளர்களுக்கு எதிராக திருப்பிவிடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் இங்கு பணிக்கு அமர்த்தப்பட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளிலிருந்து சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்கள் வரையில் தீவிர இனவாத நிலையிலிருக்கும் பொலிஸாரே கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நீண்டகால திட்டமிடலில் இந்த திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரணுக்கு சுமார் 15பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் கடும்போக்குக்கொண்ட சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.எவ்வளவோ தமிழ் பொலிஸார் உள்ளபோதிலும் சிங்கள பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் கால்நடை பண்ணையாளர்களுக்கு பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் கடந்த காலத்தில் வனஇலாகாவினராலும் பொலிஸாரினாலும் செய்யப்பட்டுள்ளது.காடுகள் வெட்டியது,தமது கால்நடை பண்ணைகளில் கத்திகளை பைத்திருந்ததது என சிறிய சிறிய செயல்களுக்கு எல்லாம் வழக்கு தாக்கல் செய்தவர்கள் இதுவரையில் அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுபோருக்கு எதிராக ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லையென்பதே வேடிக்கையான விடயமாகவுள்ளது.

இவ்வாறான நிலையில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் கால்நடை பண்iயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கால்நடை பண்ணையாளர்களின் குடும்ப உறவினர்கள்,கால்நடை பண்ணையாளர் சங்கத்தினர் தமது உள்ளக்கிடங்கைகளை எம்மிடம் வெளிப்படுத்தினார்கள், மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கால்நடைகளை வைத்து வாழ்வாதாரத்தினை முன்கொண்டுசெல்லும் இரண்டு கால்நடையாளர்களின் தாயான வேலாயுதம் குமாரத்தி அவர்களும் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் தொடர்ச்சியாக பங்கெடுத்துவருகின்றார்.

அவர் தெரிவித்ததாவது, “மயிலத்தமடு, மாதவனை பகுதி எங்கட சொத்து.எங்க அப்பாட அப்பா என்ட கணவர் என்ட பிள்ளைகள் அங்கதான் மாடுகட்டி வாறாங்க.இன்டைக்கு என்ட பிள்ளைகள்ட மாடுகள் சுடப்படுது.நாளைக்கு என்ட பிள்ளைகளுக்கும் ஏதும் நடந்திடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கின்றது.மாடுகளை கடத்திச்செல்வதும், கொலைசெய்வதும்,  அநியாயங்கள்தான் நடக்கின்றது.

இந்த நிலைமையிலிருந்து எங்களுக்கு எப்போது விமோச்சனம் கிடைக்கும். இப்படி நடந்தால் எங்களது வாழ்வாதாரத்தை எப்படி கொண்டுசெல்லப்போகின்றோம். மாடுகளை இப்படிக்கொல்லுவோர் நாளை மனிதர்களையும் இப்படி கொல்லுவார்கள்.எங்களுக்கு இந்த நாட்டில நீதி இல்லையா?இவ்வளவு காலமாக எவ்வளவோ கஸ்டத்தின் மத்தியில்தான் இந்த கால்நடைகளை நாங்கள் வளர்த்துவருகின்றோம்.இந்த நாட்டில் எங்களுக்கு எந்த உரிமையும் இல்லையா.நாங்கள் தமிழன் என்டா இந்த நாட்டில் வாழமுடியாத நிலையா எங்களுக்கு இருக்கு.இந்த நாட்டில நாங்கள் பிறக்கலயா,இந்த நாட்டில் எங்களுக்கு உரிமை இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

இதேபோன்று தனது கால்நடை பண்ணை வைத்து கால்நடை வளர்ப்பில் மயிலத்தமனை பகுதியில் ஈடுபடும் கால்நடை பண்ணையாளரின் மனைவி சுரேந்திரன் நிர்மலா என்பவர் கண்ணீருடன் பல விடயங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார், “90 நாட்களுக்கும் மேலாகியும் எங்களுக்கு எந்த தீர்வும் இல்லை.எங்களது மூன்று மாடுகள் கொல்லப்பட்டுள்ளது.இந்த அரசாங்கம் எங்களை ஏளனமாக பார்க்கின்றது.நாங்கள் இந்த நாட்டில் தமிழர்களாக பிறந்ததற்கு இந்த நிலைமையாகவுள்ளதா?தேர்தல்கள் காலத்தில் மட்டும் வாக்குக்காக வருவோர் பின்னர் எங்களை கவனத்தில் கொள்வதில்லை.எனக்கு மூன்று பெண்பிள்ளைகள்.

அந்த கால்நடைகளை நம்பியே எனது குடும்பம் உள்ளது.நாங்கள் கடும் கஸ்டங்கள் ஏற்படும்போதே எங்களது மாடுகளை விற்பனை செய்வதில்லை.இன்று சிங்களவர்கள் எங்களது மாடுகளை சுட்டுக்கொலைசெய்துவிட்டு செல்கின்றனர்.ஒரு மாட்டை கொலைசெய்து இறைச்சியை கொண்டுசென்றுள்ளனர்.நாங்கள் இது தொடர்பில் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டாலும் எந்த தீர்வும் கிடைக்குதில்லை.எத்தனையோ முறைப்பாடுகளை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்தாலும் எந்த முறைப்பாட்டுக்கும் எந்த தீர்வும் கிடைப்பதில்லை.

இந்த கடும் மழைக்கு மத்தியிலும் எங்கள் கணவன்மார்கள்,சகோதரர்களுடன் குழந்தைகளுடன் இந்த சின்ன கொட்டிலுக்குள் நாங்கள் 90 நாட்களுக்கு மேலாக போராடிவருகின்றோம்.அரசாங்கம் எங்களை கண்கொண்டு பார்க்கும்போது எங்களது கஸ்டம் புரியவில்லையா? நாங்கள் தமிழர்கள் என்ற காரணத்திற்காகவா எங்களை இவ்வளவு வதைசெய்கின்றீர்கள்?மாடுகளுக்கும் நிம்மதியில்லாத நிலைமை,மனிசனுக்கும் நிம்மதியில்லாத நிலையே இருக்குது.மனிசர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் இவ்வாறுதான் கண்மூடிக்கொண்டிருப்பீர்கள்,எங்களுக்கு எங்கே நீதி கிடைக்கப்போகின்றது.நூறு நாட்களுக்குள் எங்களுக்கான நீதி கிடைக்கவேண்டும்” என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் காலத்தில் மயிலத்தமடு,மாதவனைக்கு கால்நடைகளை கொண்டுசெல்வதற்கான தீர்மானங்கள் மாவட்ட மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் மாவட்ட அரசாங்க அதிபர்கள்,பிரதேச செயலாளர்கள்,பொலிஸார்,வனஇலாகா,விவசாய திணைக்களங்கள் இணைந்து நடாத்தும் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.ஆனால் அங்கு கொண்டுசெல்லப்படும் கால்நடைகளுக்கு ஒரு பிரச்சினையென்றாலும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை,அது தொடர்பில் கண்டும் காணாமல் இருக்கும் நிலைமையே காணப்படுவதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சங்க தலைவர் சி.நிமலன் தெரிவிக்கின்றார்.

“நாங்கள் அறவழி போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரையில் 192 மாடுகள் கொல்லப்பட்டுள்ளது.மின்சாரம்,வாய்வெடி,துப்பாக்கிசூடு என பல்வேறு வழிகளில் மாடுகள் கொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பில் கரடியானறு பொலிஸ் நிலையம்,வாழைச்சேலை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவுசெய்தும் சுட்டவர்கள் குறித்தும் முறைப்பாடுகளை பதிவுசெய்தபோது முறைப்பாடு பதிவுசெய்யச்சென்றவர்கள் மீதே வழக்குதாக்கல் செய்துள்ளனர்.

கிருஸ்ணபிள்ளை என்பரின் எட்டு மாடுகள் கொல்லப்பட்டுள்ளன.ஆனால் அவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.நாங்கள் கொல்லப்பட்ட மாடுகளுக்கு வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பில் அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள்,மனித உரிமைகள் ஆணைக்குழு,விவசாய திணைக்களம்,பொலிஸ்மா அதிபர்,ஜனாதிபதி என அனைவருக்கும் கடிதங்க்ள மூலம் அறிவித்திருக்கின்றோம்.

இதுவரைக்கும் எங்களுக்கு எந்த பதிலும் வழங்கப்படவில்லை.இது தொடர்பில் பிரதேச செயலாளர்கள்,அரசாங்க அதிபரை தொடர்புகொண்டு கூறினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.கரடினாறு பொலிஸ் நிலையத்தில் எனது மாடு கொல்லப்பட்டது தொடர்பில் முறைப்பாடு செய்யச்சென்றபோது அங்கிருந்த பொறுப்பதிகாரி என்னை மாடுகளை சரியாக பார்க்குமாறு கூறுகின்றார்.நாங்கள் மாடுகள் வளர்த்த இடத்தில் அத்துமீறி விவசாயம் செய்கின்றனர்.காடுகளுக்குள் மாடுகளை கொண்டுசென்றால் யானைகள்,காற்றும் மழையும் வந்தால் மாடுகள் அங்கு நிற்காது.எங்களது மாடுகள் வரும்போது சுடுகின்றார்கள், வெட்டிக் கொல்லுகின்றார்கள்.

அவர்களுக்கு மட்டுமே சட்டமும் நீதியும்.விவசாய நடவடிக்கை காலத்தில் கட்டாயம் மாடுகளை கொண்டுசெல்லுமாறு பொலிஸாரும் அதிகாரிகளும் வற்புறுத்தும்போது அதற்கான பாதுகாப்பினை வழங்குவதில்லை.சட்ட விரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்றுமாறு ஏறாவூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை இன்னும் பொலிஸாரோ அதிகாரிகளோ நடைமுறைப்படுத்தவில்லை.ஆனால் பண்ணையாளர்களுக்கு எதிராக ஏதும் நடவடிக்கையெடுப்பது என்றால் உடனடியாக செய்வார்கள்.

இந்த நாட்டில் சிங்களர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டம் என்பதையே கால்நடை பண்ணையாளர்களின் விடயத்தில் அரசாங்கம் காட்டிவருகின்றது.எங்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் நாங்கள் ஓயப்போவதில்லை.சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் எங்கள் நிலைமையினை கவனத்தில் கொண்டு இந்த அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.இன்று சர்வதேச நாணய நிதியம் காசு கொடுக்கின்றது.அதனை கொண்டு இந்த நாட்டில் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு பதிலான இவ்வாறான அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கே பயன்படுத்துவார்கள். எங்களது பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

 

Exit mobile version