Tamil News
Home செய்திகள் மன்னார் வெள்ளாங்குளம் மக்களின் வீட்டுத்திட்டம் தொடர்பில் – அரச அதிகாரிகளும் பிரதேச செயலாளரும் அசமந்தப்போக்கு

மன்னார் வெள்ளாங்குளம் மக்களின் வீட்டுத்திட்டம் தொடர்பில் – அரச அதிகாரிகளும் பிரதேச செயலாளரும் அசமந்தப்போக்கு

மன்னார் மாந்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வெள்ளாங்குளம் சேவா கிராமம் பகுதியை சேர்ந்த மக்கள் குறித்த பகுதியில் குடியேறி 10 வருடங்கள் கடந்தும் இதுவரை அடிப்படைவசதிகள் இன்றியும் காணி உறுதிப்பத்திரங்கள் கூட வழங்கப்படாத நிலையிலும் சொந்த வீடுகளிலேயே அகதிகளாக வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

2012 ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டித்திட்டத்தின் அடிப்படையில் யுத்ததால் பாதிக்கப்பட்ட, கணவனால் கைவிடப்பட்ட, விதவைகள், ஊணமுற்றோர்கள் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிக்குக் காட்டுப் பகுதி ஒன்றை துப்பரவு செய்து இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது.

இருப்பினும் வீடுகள் ஒழுங்கான முறையில் அமைக்கப்படாத காரணத்தால் தற்போது அனேகமான வீடுகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. அது மாத்திரம் இன்றி அடிப்படை வசதிகளான போக்குவரத்து, வீதிகள், வைத்தியசாலை என எதுவுமே 10 வருடங்கள் கடந்த நிலையிலும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த காணிகளுக்கான உறுதிபத்திரத்தினை உடனடியாக மக்களுக்கு வழங்குமாறு மாகாண காணி ஆணையாளரினால் கடிதம் அனுப்பப்பட்ட போதிலும் இதுவரை வீடுகளுக்கான காணி ஆவணங்களோ உறுதி பத்திரங்களோ பிரதேச செயலகத்தினால் வழங்கப்படவில்லை எனவும் இவை தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் மக்களை மதிக்காது செயற்படுவதாகவும் இந்தியன் வீட்டு திட்டம் கணேசபுரம் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாகவும் மக்களுக்கான காணி உரிமைகள் தொடர்பாகவும் இன்றைய தினம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளரும் காணி தொடர்பான நிபுணத்துவ ஆலோசகரும் காணி விசேட மத்தியஸ்தக சபையின் மட்டக்களப்பு மாவட்ட தவிசாளருமான K.குருநாதன் ஊடாக விசேட விளக்கமளிக்கும் கூட்டம் இடம் பெற்றது.

இதன்போது மக்களின் பிரச்சினைகளை தொடர்சியாக அலட்சியம் செய்யும் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு பதிவு செய்வது தொடர்பாகவும், அதே நேரத்தில் மேல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாகவும் மக்களின் முடிவும் பரிசீலிக்கப்பட்டது.

Exit mobile version