Home செய்திகள் மன்னார் காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி?

மன்னார் காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி?

birds மன்னார் காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி?மன்னாரில் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி என்ற கருத்து நிலவுவதாக இந்தியாவின் பிரபல நாளிதழான தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் அதானி கிறீன்ஸ் நிறுவனத்தினால் இலங்கையின் வடபகுதியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளது. கரையோர பகுதிகளிலும் வாழ்வாதாரத்திற்கும் இந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சூழலியாளர்களும் உள்ளுர் மக்களும் கரிசனையும் கவலையும் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் வடபகுதியில் காற்றுவளம் அதிகமாக உள்ள இரண்டு பகுதிகளில் 4.2 கோடி டொலரில் இரண்டு காற்றாலை மின்னுற்பத்தி திட்டததை முன்னெடுப்பதற்கு கடந்த வருடம் இலங்கையின் முதலீட்டு சபை அனுமதி வழங்கியிருந்தது.

இலங்கையின் அதிகரிக்கும் எரிசக்தி தேவைகளை எதிர்கொள்வதற்காக 2030ஆண்டுக்குள் இந்த எரிசக்திதேவையின் 70 வீதத்தை மீள்புதுப்பிக்கத்த சக்திவளங்கள் மூலம் பெறுவதற்காக அரசாங்கம் இந்தத் திட்டங்களை முன்னெடுக்கின்றது.

இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு 11.5 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுகின்றது. மீள்புதுப்பித்தக்க சக்திவளங்கள் என்ற விடயத்தில் இலங்கையுடன் நெருங்கிய ஒத்துழைப்பை பேணுவதற்கு இந்தியா இணங்கியுள்ளது. மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளங்கள் தொடர்பான இருநாடுகளிற்கும் இடையிலான செயல்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 11ஆம் திகதி நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை உருவாக்குவதற்காக இந்தியா 11 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதேவேளை, அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தால் பிரதேசத்தின் பல்லுயிர்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கரையோர சூழலுடன் பின்னிப்பிணைந்துள்ள அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சூழலியாளர்களும் பொது மக்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற நிலையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்னெடுத்த பொருளாதார மீட்சி திட்டங்கள் தோல்வியடைந்த நிலையில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கில் பெருமளவு குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

பறவைகள் குறித்த ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்களின் தகவலின் படி மன்னார் மத்திய ஆசியாவின் பறவைகள் பறக்கும் பாதையின் ஒரு முக்கிய பகுதியாகும். உலகின் உள்ள பல நீர்பறவை இனங்களின் முக்கியமான இடம்பெயர் பாதையாக இது காணப்படுகின்றது. இந்த காற்றாலை மின் திட்டம் பறவைகளிற்கு ஒரு மரணப் பொறி என கவலை வெளியிட்டார் கொழும்பு பல்கலைகழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞான பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் சம்பத் செனிவிரட்ன.

Exit mobile version