Tamil News
Home செய்திகள் மகிந்த அரசு தமிழர்களை காணாமல் ஆக்கியது என்பதற்கு விமல் வீரவன்ச சாட்சி

மகிந்த அரசு தமிழர்களை காணாமல் ஆக்கியது என்பதற்கு விமல் வீரவன்ச சாட்சி

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் வகை தொகையின்றி காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதற்கு விமல் வீரவன்சவே சாட்சி என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காணாமல் போனவர்களை மண்ணுக்குள் தோண்டி பார்க்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர்களின் ஆறாத வடுவாக உள்ள காணாமால் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு காணாமல் தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் ஏமாற்றி வருகின்றது.

இந் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விதியொரங்களில் இன்றும் வலிகளை சுமந்து கண்ணீர் மல்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமது பிள்ளைகள் என்றோ ஒரு நாள் தம்மிடம் வந்து சேராதா என்ற ஏக்கத்துடனோயே அந்த தேடலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான உறவுகளை புலனாய்வு விசாரணைகள் என்றும் சந்தேகப்பார்வையுடனும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வரும் அரசு தற்போது வெந்த புண்ணில் வேலைப்பாச்சுவது போல் காணாமல் போனோரை மண்ணுக்குள் தோண்டிப்பார்க்குமாறு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரான விமல் வீரவன்சவின் இக்கருத்தானது அரசாங்கத்தின் கருத்தாகவே பார்க்க முடிகின்றது.

மகிந்த ஆட்சிக்காலத்தில் போர் முடிவுக்கு வந்தபோது வட்டுவாகல் பாலத்திலும் ஓமந்தை இராணுவ சோதனை சாவடியிலும் நலன்புரி முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வைத்து காணாமல் ஆக்கப்பட்டோரையே இந்த உறவுகள் தேடி அலையும் போது இவ்வாறான கருத்தை விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமையானது அரசாங்கத்தின் உண்மை முகத்தை காட்டியுள்ளது.

எனவே மகிந்த ஆட்சிக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதனை தனது வாக்குமூலமாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமையினால் அவரை உடன் கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் இவ்விடயம் தொடர்பில் சர்வதேசமும் கவனம் செலுத்த வேண்டியதுடன் அடுத்து வரும் ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டில் விமல் வீரவன்சவின் கருத்தினை அவதானித்திற்கு கொண்டு செல்ல நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version