Home ஆய்வுகள் போருக்குள் எகிப்தையும் உள்ளீர்க்க முயற்சிக்கும் இஸ்ரேல் –

போருக்குள் எகிப்தையும் உள்ளீர்க்க முயற்சிக்கும் இஸ்ரேல் –

எகிப்திலிருந்து காஸாவைப் பிரிக்கும் 14 கிலோமீற்றர் நீளமான எல்லைப்புறம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பணம் போன்ற விடயங்களையும் அதே நேரம் ஆட்களையும் கடத்துகின்ற ஒரு பாதையாக பல வருடங்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன், இக்குறிப்பிட்ட பிரதேசத்தை மீண்டும் ஆக்கிரமிப்பது தொடர்பாக இஸ்ரேல் தற்போது பரிசீலனை செய்து வருகிறது.

egypt போருக்குள் எகிப்தையும் உள்ளீர்க்க முயற்சிக்கும் இஸ்ரேல் -மிகவும் குரூரமான வகையில், 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்படக் காரணமாக அமைந்த ஒக்ரோபர் மாதம் 7ம் திகதியன்று, ஹமாஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட, பயங்கரத் தாக்குதலுக்குப் பின்னர், ‘இரும்பு வாட்கள்’  (Iron Swords) என்ற பெயரில் இஸ்ரேல் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, தற்போது 100 நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன.

“இந்தப் படுகொலைக்குக் காரணமானவர்களுக்கான தண்டனையை நிச்சயமாகத் தான் வழங்குவேன்” என்று பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகு, அந்நேரத்தில் சூளுரைத்திருந்தர். மேற்படி தாக்குதலில் 5000 இஸ்ரேலியர்கள் காயங்களுக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கதாகும். காஸாவை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் குழுவினரை முற்றாக அழித்தொழிப்பதாகவும், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அந்தப் பிரதேசத்தின் இராணுவ பலத்தை முற்றாக அழிப்பதாகவும், அந்நேரம் அவர் மேலும் தெரிவித்திருந்தார். ஆனால், ஏற்கனவே மூன்று மாதங்கள் கடந்த நிலையில், தமது இராணுவ நடவடிக்கையின் இலக்குகளை அடைவது எப்படி என்ற கேள்விக்கு மேற்கு ஜெரூசலத்திலுள்ள அதிகாரிகள் இன்னுமே விடைதேடிக் கொண்டிருக்கின்றனர்.

ஜெரூசலத்திலுள்ள அதிகாரிகள் சந்திக்கின்ற முக்கிய சவால் என்னவென்றால், ஆயுதங்கள், தொழில்நுட்ப உதவிகள், பணம் போன்றவை எந்தவித தங்குதடையுமின்றி காஸாவுக்குக் கிடைத்துக்கொண்டிருக்கின்ற காரணத்தினால், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் ஆகிய குழுக்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதை எப்படி எதிர்கொள்வது என்பதாகும். சீனாய்த் தீபகற்பத்திலிருந்து, ‘பிலடெல்விப் பாதை’  (Philadelphi Route) என்று அழைக்கப்படுகின்ற அந்தக் குறிப்பிட்ட பாதையின் ஊடாகவே அனைத்தும் கடத்தப்படுகின்றன என்றே இஸ்ரேல் நம்புகின்றது.

1982ம் ஆண்டில் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே ஒப்பமிடப்பட்ட, அமைதி உடன்படிக்கையையும், அதைத் தொடர்ந்து எல்லைகள் வரையறை செய்யப்பட்ட போது ‘பிலடெல்பிப் பாதை’ என்ற பெயர் அந்தப் பாதைக்குச் சூட்டப்பட்டது. எழுதப்பட்ட அந்த அமைதி உடன்படிக்கையின் படி, இஸ்ரேல், எகிப்து ஆகிய இரு தரப்புகளும், 14 கிலோ மீற்றர் நீளமான அந்த எல்லையின் தத்தமக்குரிய பிரதேசங்களில், துருப்புகளை நிறுத்துவதில் உடன்பாடு எட்டப்பட்டது. உறுதித்தன்மையையும் பாதுகாப்பையும் அந்த முயற்சி ஏற்படுத்தும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல வருடங்கள் கடந்த பின்னர், 1987இல் முதலாவது இன்ரிபாடா  (intifada) ஏற்பட்ட தருணத்தில், இந்த அச்சுக்குக் கீழ் (axis) பாலஸ்தீனியர்களோ சுரங்கப்பாதைகளைத் தோண்டத் தொடங்கினர். இந்தச் சுரங்கப் பாதைகள் ஊடாக பொருட்களையும் ஆயுதங்கள், பணம் என்பவற்றையும் அதே நேரம் போராளிகளையும் அவர்கள் கடத்தத் தொடங்கினார்கள்.

2005ம் ஆண்டளவில், காஸாவில் அமைக்கப்பட்டிருந்த 17 குடியிருப்புகளை அகற்றி, அந்தப் பிரதேசத்தின் அச்சின் கட்டுப்பாட்டை பாலஸ்தீன அதிகாரத்திடம் இஸ்ரேல் கையளித்தது. அந்த நேரமே, பல சுரங்கப்பாதைகள் இஸ்லாமிய குழுவினரால் அங்கே தோண்டப்பட்டிருந்தன. 2007ம் ஆண்டு அந்தப் பிரதேசத்தின் கட்டுப்பாடு ஹமாசின் கைகளுக்கு வந்தபோது, அங்குள்ள சுரங்கப்பாதைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

“இந்தச் சுரங்கப்பாதைகளின் ஊடாக நடைபெற்ற செயற்பாடுகள், எகிப்து, காஸா போன்ற இரு தரப்புகளுக்குமே பல பொருண்மிய நலன்களைத் தந்ததன் காரணத்தினால், ஆரம்பத்தில், பிலடெல்பிப் பாதையூடாக நடைபெற்ற கடத்தலைத் தடுக்க எகிப்திய அரசு முன்வரவில்லை” என்று பயங்கரவாதத்துக்கு எதிரான பன்னாட்டு நிறுவனம் (The International Institute for Counter-Terrorism) என்ற அமைப்பைச் சார்ந்த ஒரு மூத்த ஆய்வு நிபுணரான முனைவர் எலி கார்மன் ( Dr.Ely Karmon) தெரிவித்தார்.

“இந்தக் காலத்திலேயே, ஆயுதங்கள், பணம், தொழில்நுட்பம் போன்றவற்றைக் கடத்திவந்து தமது ஆயுதக்கிடங்குகளை ஹமாஸ் போராளிகள் அதிகரித்தனர். அதுமட்டுமன்றி, அக்காலப் பகுதியில் தான், ஈரானையும் ஹிஸ்பொல்லாவையும் சேர்ந்த நிபுணர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் காஸாவுக்கு வந்து, தமது சொந்த ஆயுதத் தொழிற்சாலைகளை எப்படி ஆரம்பிப்பது என்று அவர்களுக்குக் கற்பித்தனர்” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பின்னர், 2011ம் ஆண்டில் வந்தது அரபு வசந்தம் (Arab Spring) . அப்போது, எகிப்தை மிகவும் நீண்டகாலமாக ஆட்சி புரிந்த வந்த ஹொஸ்னி முபாரக்கின் (Hosni Mabarak) ஆட்சி கவிழ்க்கப்பட்டு, சீனாய் பிரதேசத்திலுள்ள தீவிரவாதக் குழுக்கள் தலைகாட்டத் தொடங்கின. அக்காலத்திலிருந்து, குறிப்பாக 2014ம் ஆண்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் அந்தத் தீபகற்பத்திலிருந்த போராளிக்குழுக்கள் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, ‘விலாயத் சீனாய்’  (Wilayat Sinai) என்று அழைக்கப்பட்ட அமைப்பை உருவாக்கிய போது, பயங்கரவாதத் தாக்குதல்கள் அங்கே அடிக்கடி நடைபெறத் தொடங்கின.

“அதிபர் அப்டெல் வற்றா ஆ-சீசி  (Abdel Fattah A-Sisi) என்பவரின் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசுக்கு, இந்தப் போராளிக் குழுக்கள் அனைத்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தின. இராணுவத்தை இலக்கு வைத்துப் பல தாக்குதல்களை அவர்கள் தொடுத்தது மட்டுமன்றி, நாடு பூராவும் பல அப்பாவிப்பொதுமக்களையும் அவர்களை படுகொலை செய்தனர். இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக ஹமாசுக்கும் அந்தப் பயங்கரவாதிகளுக்கும் இடையே கூட்டுச்செயற்பாடு நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொண்ட எகிப்திய அரசு, அந்தத் தொடர்பை அறுக்க முடிவுசெய்தது” என்று கார்மன் கூறினார்.

சீனாய்ப் பிரதேசத்திலிருந்து வந்துகொண்டிருந்த அச்சுறுத்தல்களை முறியடிக்க, கெய்றோ அதிகாரம் பல்வேறுபட்ட முயற்சிகளை எடுத்து வந்தது. அந்தத் தீபகற்பத்தில் தமது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்த எகிப்து, பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்களை முடுக்கி விட்டதுடன், எகிப்தையும் காஸாவையும் இணைக்கின்ற சுரங்கப்பாதைகளுக்குள் நீரைச் செலுத்தியது. ஆனால் இஸ்ரேலில் உள்ள இது தொடர்பான நிபுணர்களின் கருத்துப்படி, எல்லாச் சுரங்கப்பாதைகளும் இவ்வாறு பயன்படுத்த முடியாததாக மாற்றப்படவில்லை. அதுமட்டுமன்றி அந்தச் சுரங்கப்பாதைகள் ஆயுதங்களையும் தீவிரவாதிகளையும் கடத்த இன்னுமே பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, இஸ்ரேலிய பணயக் கைதிகளைக்கூடக் கடத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் நிலவுகின்றன.

இந்தக் காரணத்தினால் தான், கடந்த சில வாரங்களில் நெத்தன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய அரசியல்வாதிகள் பலர், பிலடெல்பிப் பாதை மீளவும் கைப்பற்றப்பட்டு அந்தப் பிரதேசம் இஸ்ரேலின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்துவருகின்றனர்.

“அந்தப் பிரதேசத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் நோக்கம் இஸ்ரேலுக்கு இல்லை என்பது மட்டுமன்றி, பாதுகாப்பைப் பேணும் நோக்குடன் தனது நாடு அந்தப் பிரதேசத்தில் தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரிக்கும்” என்று கார்மன் சுட்டிக்காட்டுகிறார்.

“அந்தப் பிரதேசத்தை மீளக்கைப்பற்றுவது என்பது மிகவும் கடினமானதாகவே இருக்கும். காரணம் என்னவென்றால் எமக்கும் எகிப்துக்கும் இடையே ஒரு அமைதி உடன்படிக்கை ஒப்பமிடப்பட்டிருக்கிறது. காஸாப் பிரதேசம் ஆக்கிரமிக்கப்படவேண்டும், அல்லது அங்கே குடியிருப்புகள் நிறுவப்படவேண்டும் என்று வலதுசாரி அரசியல்வாதிகளிடமிருந்து அழுத்தங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால், எகிப்துடனான உறவு மூலோபாய ரீதியாக முக்கியமானது என்பதை நெத்தன்யாகு  நன்றாக அறிந்திருக்கிறார். அதனால் அந்த உறவைப் பாதிப்புக்கு உள்ளாக்க அவர் விரும்பப்போவதில்லை” என்று அந்த நிபுணர் வலியுறுத்திக் கூறினார்.

“இது எவ்வாறிருப்பினும் எகிப்திலுள்ள சிலர் இவ்விடயம் தொடர்பாகக் கவலையடைகின்றனர். நெத்தன்யாகு ஒரு விடயத்தைச் சொல்லும் போது அதனை அவர் செயலில் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன” என்று கெய்றோவிலுள்ள,  ஆய்வுக்கும் கற்கைக்குமான அரபு மையம் என்ற அமைப்பின் இயக்குநராக இருக்கின்ற ஹனி சொலிமான் (Hany Soliman) கூறினார்.

காஸாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான எல்லையில், எகிப்துப் பக்கத்தில் ஒரு நிலக்கீழ் சுவரைக் கட்டியெழுப்புவதும் (underground wall) இவற்றுள் ஒன்றாகும். இந்தச் சுவர் ஒரு கிலோ மீற்றர் ஆழம் கொண்டதாகவும், 13 கிலோ மீற்றர் நீளமானதாகவும் அமைக்கப்படவிருக்கிறது. சுரங்கம் தோண்டும் செயற்பாட்டைக் கண்டுபிடிக்கக்கூடிய உணரிகளும் (sensors) ஏனைய தொழில்நுட்பரீதியிலான விடயங்களும் இந்தச் சுவரில் பொருத்தப்படவிருக்கின்றன. இது தீவிரவாதிகளின் செயற்பாடுகளுக்குத் தடையாக அமையும்.

“இவ்வாறான ஒரு திட்டத்துக்கு அமெரிக்கா தேவையான நிதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரம் இவ்வாறான ஒரு  விடயம்  சாத்தியமாவதென்பது, எகிப்து இதை எவ்வளவு தூரம் விரும்புகிறது என்பதில் தான் தங்கியிருக்கிறது. அதனைக் கட்டுவதில் அவர்கள் அவசரம் காட்டப்போவதில்லை” என்று சொலிமான் மேலும் கூறினார்.

“முதலாவதாக, இஸ்ரேலின் உண்மையான நோக்கங்கள் தெளிவற்று இருக்கின்ற ஒரு சூழலிலும், மக்களை இடம் பெயர்க்கும் திட்டத்தை அமுல் நடத்த அவர்கள் முயற்சிக்கின்ற ஒரு சூழலிலும் அரசியல் ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும், எகிப்து அவ்வாறான ஒரு உடன்பாட்டுக்குச் சம்மதிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கின்றது” என்று சொலிமான் விளக்கிக்கூறினார்.

அதே நேரம் பாலஸ்தீன அதிகாரத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது. மேற்குறிப்பிட்ட திட்டத்தை நிராகரிப்பதற்கான முழுமையான உரிமை அந்த அதிகாரத்துக்கு இருக்கிறது. பிலடெல்பி அச்சை ஆக்கிரமிப்பது, ஒஸ்லோ உடன்படிக்கைக்கு எதிரானது என்றும், அது தங்களது இறைமையை மீறுகின்ற செயல் என்றும் அவர்கள் வாதிடலாம்.

அதுமட்டுமன்றி, பொதுமக்களின் கருத்தும் இங்கு முக்கியமானது. ஆய்வுக்கும் கொள்கைக் கற்கைக்குமான அரபு மையத்தால் 16 அரபு நாடுகளில் அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளின் படி, 92 வீதமான மக்கள் பாலஸ்தீனர்களுடன் தங்களை இணைத்துக்கொள்கின்றார்கள். தங்கள் நாடு இஸ்ரேலுடன் ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்தக்கூடாது என்று 89 வீதமானவர்கள் கூறும் அதே நேரம், தங்களது அரசு ஜெரூசலத்திலுள்ள அதிகாரிகளுடன் கொண்டிருக்கும் உறவை முற்றாகத் துண்டிக்க வேண்டுமென்று, 36 வீதமானோர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவ்வாறென்றால், பிலடெல்பிப் பாதையில் இஸ்ரேலும் எகிப்தும் இணைந்து பாதுகாப்பைப் பலப்படுத்தும் விடயத்தை நடைமுறைப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒரு செயற்பாடாக அமையலாம்.

“இந்தச் செயற்பாட்டை மேற்கொள்ளும் முயற்சியை இஸ்ரேல் எடுக்க மாட்டாது என்று இவற்றை வைத்து நாங்கள் கூறிவிட முடியாது. சிரியாவிலிருந்து முதலில் சீனாய்க்குக் கடத்தப்பட்டு, பின்னர்  அங்கிருந்து பிலடெல்பிப் பாதைவழியாகக் காஸாவுக்குக் கடத்திக்கொண்டுவரப்பட்ட பெருமளவான வெடிமருந்துப் பொருட்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கடந்த ஒக்ரோபர் மாதம் கைப்பற்றியிருந்தன. ஒக்ரோபர் மாதம் 7ம் திகதி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் இவ்வாறான ஆயுதங்களும் வெடிபொருட்களும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருந்தன. சர்ச்சைக்குரிய இந்த எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இந்த இஸ்லாமிய குழுவை அழிக்க முடியாது என்ற நிலைப்பாட்டுக்குத் தற்போது இஸ்ரேல் வந்திருக்கிறது.”

“அதே நேரம் எல்லைப்புறத்தில் இஸ்ரேலின் பிரசன்னம் உறுதிப்படுத்தப்படுமானால், அது மிகப் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்” என்று சொலிமான் எச்சரிக்கை செய்தார்.

இரண்டு அரசுகளுக்கும் இடையே ஒப்பமிடப்பட்ட அமைதி உடன்படிக்கை, முற்றுமுழுதாக மீறப்படுவதையே அது குறிக்கும். எல்லைகள் தொடர்பான சர்ச்சைக்குள் எகிப்தையும் உள்ளீர்ப்பதாகவே அது அமையும். அவ்வாறான ஒரு முயற்சி, கெய்றோவுக்கும் பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இடையே ஏற்கனவே எட்டப்பட்டிருக்கும் உடன்பாடுகளைப் பாதிக்கும். இறுதியில் அந்தப் பிரதேசத்தின் அமைதிக்கு அது முற்றுமுழுதான பாதிப்பை ஏற்படுத்தும்.

“இதனால் ஏற்படக்கூடிய சேதம் இராஜீக செயற்பாடுகளுக்குள் மட்டுப்படுத்தப்படும்” என்று எதிர்பார்க்க முடியாது என்று வாதிடுகிறார் சொலிமான். இஸ்ரேலால் காஸாவில் தொடுக்கப்பட்ட போரின் காரணமாக ஒரு மில்லியன் எண்ணிக்கையிலான பாலஸ்தீன மக்கள் தமது இல்லிடங்களைவிட்டு இடம்பெயர வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மக்கள் அனைவரும் எகிப்தின் எல்லைக்கு அருகில் உள்ள றாபா (Rapha) நகருக்கு நகர்ந்திருக்கிறார்கள். எல்லையில் இஸ்ரேலின் இராணுவப் பிரசன்னம் அதிகரிக்குமாயின், போரின் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் அந்த மக்கள் மத்தியில்  அது  பயத்தை  உருவாக்கும். அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுமாயின், எல்லையில் உள்ள கட்டுப்பாடுகளையும் மீறி அந்த மக்கள் வலுக்கட்டாயமாக எகிப்துக்குள் நுழையவே முற்படுவார்கள்.

அவ்வாறான ஒரு சூழலை ‘சிவப்புக் கோடு’ என்று அதிபர் சிசி சித்தரித்திருக்கிறார். அவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்படாமல் தடுக்க பலத்தைப் பயன்படுத்தவும் தாம் தயங்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

“அவ்வாறான ஒரு சூழல் ஏற்படும் பட்சத்தில், இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து, எல்லையைப் பாதுகாப்பதற்காக அதிக துருப்புகள் அங்கு நிலைநிறுத்தப்படுவார்கள். அவ்வாறான ஒரு நடவடிக்கை ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரை மிகவும் ஆபத்தானதும் உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஒரு நிலைக்கும் இட்டுச் சென்று, முறுகல் நிலையை மேலும் அதிகரிக்கும்” என்று எச்சரித்தார் சொலிமான்

இஸ்ரேல் நிபுணரான கார்மன், சொலிமானின் இந்தக் கணிப்புகளை ஏற்றுக்கொள்கிறார். இங்கே குறிப்பிட்ட விடயங்களின் சிக்கலான தன்மையை அவர் புரிந்துகொண்டிருக்கின்ற போதிலும், எதிர்காலம் தொடர்பாக அவர்  நம்பிக்கையை வைத்திருக்கிறார்.

“இந்தப் பிரதேசத்தில் ஒரு உறுதியான நிலையை உருவாக்கும் நோக்குடன் இஸ்ரேல், எகிப்து. அமெரிக்கா போன்று நாடுகளுக்கிடையே தொடர் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன” என்று விளக்கமளிக்கிறார் கார்மன்.

தமிழில்: ஜெயந்திரன்

Exit mobile version