Home ஆய்வுகள் பூகோள பிரந்தியப் போட்டியில் புதைந்துபோயுள்ள நாடுகளுக்கு தற்போது தமிழ் மக்களின் வாக்குகள் தேவை –...

பூகோள பிரந்தியப் போட்டியில் புதைந்துபோயுள்ள நாடுகளுக்கு தற்போது தமிழ் மக்களின் வாக்குகள் தேவை – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

தென்னிலங்கையில் சிறீலங்கா அரச தலைவர் தேர்தலுக்கான வேலைகள் இந்த மாதம் முதல் தீவிரம் பெற்றுள்ளது. சிங்கள தேசத்தின் இரு பெரும் கட்சிகளும் தமது வேட்பாளர்கள் தொடர்பில் வேகமாக செயற்பட்டு வருகின்றன. காலம் சென்ற சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் ஆர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசாவை நிறுத்துவது தொடர்பில் ஐ.தே.க சிந்தித்து வருகையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவை நிறுத்துவது தொடர்பில் எதிர்த்தரப்பான மகிந்தா தரப்பு செயற்பட்டு வருகின்றது.

அதற்கு அமைவாக கோத்தபாய தனது அமெரிக்க குடியுரிமையையும் துறந்துள்ளதாக அவரின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்சா தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட அவர் மீது அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்கே அவரின் குடியுரிமையை பறித்துள்ளது.

அதாவது 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான போரை ஆயுதவழிகளில் தோற்கடித்தபோது துட்ட கெமுனுக்காளாக தென்னிலங்கையில் போற்றப்பட்டவர்கள், தற்போது பதவி இழந்து, எதிர்க்கட்சியாகி, அமெரிக்க குடியுரிமை இழந்து தமிழ் மக்களின் வாக்குக்களுக்காக காத்திருக்கின்றனர்.

ஆனால் அவர்களிடம் பேரம்பேசும் தகமையிலோ அல்லது அவர்களை மேலும் தண்டிக்கும் வலுவுடனனோ தமிழ் மக்கள் இல்லை என்பது தான் துன்பமானது. அதற்கான காரணம் சோரம்போன தமிழ் அரசியல் தலைமைகளும், தமக்கிடையே மோதிக்கொள்ளும் புலம்பெயர் அமைப்புக்களும் தான்.

ஆனால் மகிந்த ராஜபக்சாவுக்கும் அவரின் சகோதரர் கோத்தபாயாவுக்கும் இந்த நிலை ஏற்பட்டதற்கு ஒரு சில தமிழ் அமைப்புக்களும், அவர்களுக்கு துணையாக செயலாற்றிய அனைத்துலக அமைப்புக்களும், சிறீலங்காவை மையம்கொண்டுள்ள பூகோள அரசியலுமே காரணம்.

Mannar protest 5 1 பூகோள பிரந்தியப் போட்டியில் புதைந்துபோயுள்ள நாடுகளுக்கு தற்போது தமிழ் மக்களின் வாக்குகள் தேவை - வேல்ஸ் இல் இருந்து அருஷ்தற்போதைய அரச தலைவர் தேர்தல் என்பது இந்த பூகோள அரசியலை மேலும் ஒரு சிக்கலான நிலைக்கு மாற்றவல்லது என்பதை மேற்குலகம் நன்கு அறியும். எனவே தான் கோத்தபாயாவை குறிவைத்துள்ளது அமெரிக்கா, அது மட்டுமல்லாது அடுத்த ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் தறபோதைய அரசின் கைகளை முறுக்கி “சோபா” என்ற படைத்துறை உடன்பாட்டில் கைச்சாத்திட வைக்கவும் அமெரிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னனியும் அதுவே, அதாவது தேர்தலுக்கு முன்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் புதிய அரசு அதனை ஒன்றும் செய்ய முடியாது என்பது அமெரிக்காவின் கணிப்பு. ஆனால் அமெரிக்காவின் கணிப்பை இந்தியா தனது மறைமுக நடவடிக்கை மூலம் முறியடித்துவிட்டது.

தற்போது தேர்தல் நெருக்கிவரும் வேளையில் மகிந்தா தரப்புடன் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது பிரான்ஸ் அரசு. அமெரிக்கா தான் நேரிடையாக இறங்காது பிரான்ஸ் மூலம் ஒரு நகர்வை மேற்கொண்டுள்ளது. அதற்கான காரணம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா அரசு ஆரம்பிக்கவுள்ள இந்துசமுத்திரத்தை கடந்து செல்லும் கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையமாகும்.

இந்த நிலையம் இயங்குமானால் அமெரிக்காவின் உதவியுடன் வளைகுடா பகுதியில் உள்ள துறைமுகங்களின் வர்த்தகம் வீழ்ச்சியடைவதுடன், அவற்றின் முக்கியத்துவமும் குறைந்துவிடும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இடம்பெறும் வர்த்தகப்போரிலும் சீனாவை பணியவைக்க அமெரிக்காவால் முடியவில்லை. மாறாக ஈரானிடம் தனது அதிநவீன உளவு விமானத்தை இழந்த அமெரிக்காவின் நடவடிக்கை தற்போது சீனா-ஈரான்-ரஸ்யா உறவுகளைப் பலப்படுத்தும் வரை சென்றுள்ளது.

இந்த நிலையில் சிறீலங்காவில் அடுத்த ஐந்து ஆண்டுகள் இடம்பெறவுள்ள ஆட்சி என்பது மேற்குலகத்திற்கு முக்கியமானது. ஆபிரிக்கா வரை சீனாவின் அதிகாரம் விரிவாக்கம் பெற்றுவந்தாலும் அதன் இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான பிரவேசம் என்பது முன்னர் மியான்மார் ஊடாக மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது சிறீலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகம் அதனை இலகுவாககியுள்ளது. ஆசியப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளின் பலவீனம் சீனாவின் பணிகளை இலகுவாக்கியுள்ளது.

தற்போது உள்ள இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளை தமக்கு சாதகமாக தென்னிலங்கை அரசியலில் பயன்படுத்தும் வியூகங்கள் பூகோள அரசியல் போட்டியில் புதைந்துபோயுள்ள இந்த நாடுகளிடம் உண்டு. அதற்கு தமிழ் அரசியல்வாதிகளை பயன்படுத்தும் திட்டத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர்.

ஆனால் தென்னிலங்கையில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை, ஆனால் எமது வாக்குகளை கொண்டு எம்மை இந்த நாடுகள் ஏமாற்றுவதை நாம் தடுத்தாக வேண்டும். அதன்மூலம் தான் நாம் எமது அரசியல் பிரசன்னத்தை தென்ஆசியாவில் வெளிப்படுத்த முடியும்.

எனவே எதிர்வரும் அரச தலைவர் தேர்தலையும், அதனைத் தொடர்ந்துவரும் எல்லா அரச தலைவர் தேர்தல்களையும் தமிழ் மக்கள் புறக்கணிக்கும் முடிவை மேற்கொள்ளவேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை தளத்திலும், புலத்திலும் தேசியம் சார்ந்தவர்கள் மேற்கொள்வதுடன், தமிழ் மக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர்கள் ஆரம்பிக்க வேண்டும்.

தமது பிரச்சாரத்திற்கு சமூகவலைத்தளங்களை பயன்படுத்தப்போவதாக மகிந்தாவின் புதல்வர் நாமால் கூறியது போல நாமும் சமூகவலைத்தளங்களில் ஊடாக தற்போதே எமது விழிப்புணர்வு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு ஏதுவான தெளிவான சிந்தனைகளை எமது இளம் தலைமுறைகளிடம் நாம் தற்போதே விதைக்க வேண்டும்.

Exit mobile version