Tamil News
Home செய்திகள் புதிய தீர்மானம் வேண்டும் – தமிழ் கட்சிகள் வலியுறுத்தல்

புதிய தீர்மானம் வேண்டும் – தமிழ் கட்சிகள் வலியுறுத்தல்

எதிர்வரும் வாரம் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர்பில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என தமிழ்க் கட்சிகளும், பொது அமைப்புக்களும் ஐ.நா இணைத்தலைமை நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பரிந்துரைத்தது போல இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த வேண்டும்.

அதற்கான தீர்மானம் 51 ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்டு அதனை நிறைவேற்றும் அதிகாரம் ஐ.நா பாதுகாப்புச்சபைக்கு வழங்கப்பட வேண்டும். அனைத்துலக நீதிமன்னறத்தின் விசாரணையையே தமிழ் மக்கள் நம்புகின்றனர். சூடான் மற்றும் வடகொரியா தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்ட போது சீனா அவற்றின் நட்பு நாடாக இருந்தபோதும் பாதுகாப்புச்சபையில் அதனை எதிர்க்கவில்லை.

இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் மூலம் எதிர்ப்பதாக எந்த நாடும் கூறவில்லை. ஆனால் அனைத்துலக நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதை தவிர்ப்பது என்பது அவர்களை பாதுகாக்கும் செயலாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version