Tamil News
Home உலகச் செய்திகள் பிரித்தானியா நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு மகாராணியிடம் கோரிக்கை

பிரித்தானியா நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு மகாராணியிடம் கோரிக்கை

பிரித்தானியாவின் நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்துமாறு பிரித்தானியா அரசு மாகாராணியிடம் இன்று (28) கோரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிச் செல்வதற்கு சில வாரங்கள் உள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்ரம்பர் மாதம் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் நாள் பிரித்தானியா மகாரணியின் உரை இடம்பெறவுள்ளதாகவும், அது மிகவும் ஆச்சரியமுள்ள நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கும் எனவும் பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஜோன்சனின் இந்த முயற்சியானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதை தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.

இதனிடையே, அரசின் இந்த முடிவு தவறானது எனவும், இதனை நடைமுறைப்படுத்தினால் தாம் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதுடன் அரசையும் பதவியில் இருந்து நீக்க முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டொமினிக் கிறீவ் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாட்டின் நலன்கருதியே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், பிரக்சிட் இற்கு முன்னர் நாம் எமது நாட்டின் நலன் தொடர்பில் சிந்திக்க வேண்டும் எனவும் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version