Tamil News
Home செய்திகள் படையினரை காட்டிக்கொடுக்கவா இந்த ஆணைக்குழு? சிங்கள அமைப்பு சீற்றம்

படையினரை காட்டிக்கொடுக்கவா இந்த ஆணைக்குழு? சிங்கள அமைப்பு சீற்றம்

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பது படையினரைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். எனவே, இது தொடர்பான சட்டமூலத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கக்கூடாது என கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்படி ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கலாநிதி வசந்த பண்டார இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இச்சட்டமூலத்தை ஆதரித்தால் அதனை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அல்ல அவர்களின் ஏழு பரம்பரைகளுக்கும் இடி விழும். அதுமட்டுமல்ல மக்கள் கல்வீச்சு தாக்குதலையும் நடத்துவார்கள். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சமமாக கவனிக்கப்பட வேண்டும் என இமயமலைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது தமிழ் மக்களுக்கு தற்போது இரண்டாம்பட்ச கவனிப்பே இடம்பெறுகின்றது என்ற தகவலையே இதன்மூலம் சர்வதேசத்துக்கு வழங்க முற்படுகின்றனர். யாழில் உள்ள விகாரையொன்றுக்கு பௌத்த மக்களுக்கு செல்வதற்கு வேண்டுமானால் தடை இருக்கலாம். ஆனால் இந்த நாட்டில் தமிழர்களுக்கு எந்த பகுதியிலும் அவர்களின் வணக்கஸ்தலங்களுக்கு செல்வதற்கு எந்த இடையூறும் இல்லை என்பதே உண்மை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்துவதற்கு மகாசங்கத்தினரும் தயார் என்ற விம்பத்தையும் இமயமலை பிரகடனம் ஊடாக உருவாக்குவதற்கு முற்படுகின்றனர். அதேபோல பொறுப்புகூறல் பற்றியும் இமயமலைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. படையினருக்கு எதிராக செயற்பட்ட தரப்பினரே இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் சுரேன் உள்ளிட்டவர்கள் ஆதரவாக நிற்கின்றனர். பிரிவினைவாதிகளை அன்றும் திருப்திப்படுத்த ரணில் விக்கிரமசிங்க முற்பட்டார். இன்றும் முயல்கின்றார்.

தமிழ்க் கட்சிகளுடனான சந்திப்பின்போது, உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஜனவரியில் நிறுவப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இந்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவானது, தென்னாபிரிக்காவில்போன்று உண்மையை கண்டறியும் ஆணைக்குழு மட்டும் அல்ல, பொறுப்புகூறல், இழப்பீடு வழங்கல், மீள நிகழாமை போன்ற விடயங்களும் இடம்பெறவுள்ளன.

இந்த பொறிமுறையை உருவாக்கிய பின்னர், சர்வதேச கண்காணிப்புக்கு இடமளிக்கலாம். ஒரு சில இராணுவத்தினரை போலியான சாட்சிகளுக்கு பயன்படுத்தலாம். எனவே, இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவானது காட்டிக்கொடுப்பு நடவடிக்கையாகும்.

இது தொடர்பில் மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு என்ன? கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்தில் இல்லாவிட்டாலும் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

மொட்டு கட்சி ஆதரித்தால் அக்கட்சியின் இறுதி பயணமாக அது அமையும். ஆதரிக்கும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வீதியில் இறங்க முடியாத நிலை ஏற்படும்.

அத்துடன், இமயமலை பிரகடனத்தை ஜேவிபி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நிராகரிக்க வேண்டும். அமரபுரபீடம்போல் ஏனைய பீடங்களும் நிராகரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Exit mobile version