Tamil News
Home செய்திகள் நினைவேந்தல் தடை உத்தரவை உடன் நீக்க வேண்டும், அரசு நழுவ முடியாது; மாவை வலியுறுத்து

நினைவேந்தல் தடை உத்தரவை உடன் நீக்க வேண்டும், அரசு நழுவ முடியாது; மாவை வலியுறுத்து

“நினைவேந்தல் தடை உத்தரவுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகளில் ஜனாதிபதி தலையிடமாட்டார் எனவும் சாக்குப் போக்குக் கதைகள் கூறி ராஜபக்ஷ அரச தரப்பினர் நழுவமுடியாது. நினைவேந்தல் தடை யுத்தரவுகளை உடன் நீக்கவேண்டும்” என வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா.

“தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புக்களுக்கும் பெரும் நன்றிகளைக்கூறுகின்றோம். ராஜபக்ஷ அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். தடை நீக்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்பவேண்டும்” எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நினைவேந்தலுக்கான தடைகளை நீக்கக் கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசிடம் தமிழ்க் கட்சிகள் ஓரணியில் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை வரவேற்றுள்ள ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய சோசலிசக் கட்சி, விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சி உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள் ஆகியவற்றுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடின் நாம் முன்னெடுக்கவுள்ள சாத்வீகப் போராட்டங்களுக்கும் மேற்படி கட்சிகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளமையையிட்டு நாம் பெருமகிழ்வு அடைகின்றோம். நாட்டிலுள்ள ஏனைய ஜனநாயகக் கட்சிகள், முற்போக்கு சக்திகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவையும் நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.

அதேவேளை, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் எமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரையாற்ற வேண்டும் என்றும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

Exit mobile version