Tamil News
Home செய்திகள் நினைவுத் தூபி அழிப்புக்கு எதிராக தாயகத்தில் இன்று ஹர்த்தால் – முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு

நினைவுத் தூபி அழிப்புக்கு எதிராக தாயகத்தில் இன்று ஹர்த்தால் – முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிப்புக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகத்தினரும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தமது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இன்றைய ஹர்த்தாலுக்கு வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய கட்சி மற்றும் சர்வமத அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்திருந்தன.

இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட கடற்றொழில் சங்கங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், வர்த்தக சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புகள் என அமைப்புகள் பலவும் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதனிடையே, மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகள், சர்வமத அமைப்புக்கள் ‘யாழ். தூபி இடித்தழிப்பு ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தலானவிடயம். இன்றைய ஹர்த்தாலுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரியுள்ளன.

இதேபோன்று, ரவூப் ஹக்கீம் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம்காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், யாழ். முஸ்லிம் இளைஞர் கழகம் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன. இறந்தோரை நினைவு கூரவும், ஜனாஸாக்கள் எரிப்பைக் கண்டித்தும் இந்தப் போராட்டத்துக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் எம்.பி விடுத்துள்ள ஆதரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, ‘வடக்கு – கிழக்கில் இன்று இடம்பெறும் ஹர்த்தாலுக்கு முஸ்லிம் மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும், என்று ரிஷாத் பதியுதீன் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார். இறுதிப் போரில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி கடந்த வெள்ளிக்கிழமை இரவோடிரவாக இடித்து அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version