Tamil News
Home உலகச் செய்திகள் ‘நவுறுவில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் மீது தாக்குதல்’

‘நவுறுவில் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் மீது தாக்குதல்’

நவுறு தீவில் உள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வீதியால் சென்ற கார் ஒன்று வேண்டுமென்றே மோதியதையடுத்து குறித்த நபர் கடும் காயங்களுக்கு உள்ளாகியதாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் செவ்வாய் இரவு, 36 வயதான தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த நவுறுவாசிகள் சிலர் அவர் மீது காரை மோதி கீழே விழச்செய்துவிட்டு மோட்டார் சைக்கிளைக் களவாடிக்கொண்டு சென்றதுடன் கீழே விழுந்து கிடந்தவர் மீது காரை ஏற்றிச்சென்றுள்ளனர்.

இதையடுத்து குறித்த நபர் கை, கால், முகம், முதுகு என பல இடங்களில் என்பு முறிவுக்குள்ளாகி ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக சிகிச்சைகளுக்காக இன்றையதினம் அவர் அவுஸ்திரேலியா அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் அனைவரும்  காவல்துறையினரால்  கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளபோதிலும் என்னென்ன பிரிவுகளில் இவர்கள்மீது வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

இதேவேளை இத்தாக்குதல் சம்பவமானது ஒரு கொலைமுயற்சி எனத் தெரிவித்துள்ள Refugee Action Coalition-இன் பேச்சாளர் Ian Rintoul, நவுறு தீவானது அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆபத்தான இடம் எனவும் அவர்கள் தொடர்ச்சியாக பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் நவுறு தீவிலுள்ள சுமார் 127 அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென Ian Rintoul வலியுறுத்தியுள்ளார்.

நன்றி – SBS தமிழ்

Exit mobile version