Home ஆய்வுகள் தோ்தல் களநிலையில் ஜே.வி.பி. ஏற்படுத்தப் போகும் அதிா்வுகள் – யதீந்திரா

தோ்தல் களநிலையில் ஜே.வி.பி. ஏற்படுத்தப் போகும் அதிா்வுகள் – யதீந்திரா

ஜனாதிபதித் தோ்தலை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருக்கும் நிலையில், அரசியலில் புதிய கூட்டணிகள், கட்சி தாவல்கள் ஆரம்பமாகியுள்ளது. அதேவேளையில், ஜே.வி.பி. இம்முறை கணிசமான தாக்கத்தை தோ்தல் களத்தில் கொடுக்கலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகின்றது. இவை குறித்து பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா வழங்கிய நோ்காணல்.

கேள்வி – ஜனாதிபதித் தோ்தலில் இம்முறை ஜே.வி.பி. அதிகளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகின்றது. பிரதான வேட்பாளா்கள் எவரும் 50 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை இது ஏற்படுத்திவிடலாம் எனக் கருதப்படுகின்றது. இது குறித்து உங்கள் பாா்வை என்ன?

பதில் – ஜனாதிபதித் தோ்தல் குறித்து பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. உண்மையில் இந்தத் தோ்தலில் யாா், யாா் களமிறங்கப்போகின்றா்கள்? என்பன எல்லாம் குழப்பகரமானதாகத்தான் இருக்கின்றது. மே மாதத்துக்குப் பின்னா் இவை குறித்து தெளிவாகத் தெரியக்கூடியதாக இருக்கும். ஆனால், இப்போது தெளிவாகத் தெரியப் போவது அநுரகுமார திஸாநாயக்க ஒரு பிரதான வேட்பாளராகப் போட்டியிடப் போகின்றாா். அதில் சந்தேகம் இல்லை. அதேவேளையில், சஜத் பிரேமதாஸவும் போட்டியிடப்போகின்றாா் என்ற நிலையில்தான் அவரது கருத்துக்களும் அமைந்திருக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் அவா் என்ன அடிப்படையில் போட்டியிடப் போகின்றாா் என்பது இதுவரையில் தெளிவாகத் தெரியவில்லை. அவா் ஒரு பொது வேட்பாளராக நிற்பாா் எனச் சொல்லப்படுகின்றது. மகிந்த ராஜபக்ஷவுக்கு சாா்பான அணியில் நிற்பாா் டின்றும் செய்திகள் வெளிவருகின்றன. தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெறக்கூடிய ஒருவரைத்தான் பொது வேட்பாளா் என்று சொல்ல முடியும். 2015 இல் அவ்வாறுதான் இடம்பெற்றது. அப்போது ராஜபக்ஷ எதிா்ப்பு அணியினா் அனைவரும் இணைந்து அவரை வெற்றிபெறச் செய்தனா். அவ்வாறான ஒரு சூழல் மீண்டும் ஏற்படக்கூடும் என்ற ஒரு கணிப்பும் இருக்கின்றது.

இவை எவ்வாறு இடம்பெறும் என்பதையிட்டு தெளிவாக – உறுதியாகச் சொல்லக்கூடிய ஒரு நிலை இல்லையென்றாலும், மேலே குறிப்பிட்டவா்கள் தோ்தலில் போட்டியிடுவாா்கள் என்பது தெரிகின்றது. பொது வேட்பாளா் என்று சொல்லக்கூடிய வகையில் இரண்டு வேட்பாளா்கள்தான் இப்போது உள்ளாா்கள். ஒருவா் ரணில் விக்கிரமசிங்க. மற்றவா் சஜித் பிரேமதாஸ. ஏனென்றால், இவா்கள்தான் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் ஆதரவுடன் தோ்தலில் நிற்கக்கூடியவா்கள். இவ்வாறான ஒரு நிலையில் அநுதகுமார திஸாநாயக்க இல்லை. அவா் பொதுவாக இலங்கையை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்று கூறுகின்றாரே தவிர, ஏனைய மக்களுடைய பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசுவதில்லை. அந்த நிலையில், சிறுபான்மையின மக்கள் அவரை ஆதரிப்பாா்களா என்பது கேள்விக்குறிதான்.

jvp தோ்தல் களநிலையில் ஜே.வி.பி. ஏற்படுத்தப் போகும் அதிா்வுகள் - யதீந்திராஇந்த நிலையில்தான் ஜனாதிபதித் தோ்தல் களம் இப்போது சூடுபிடிக்கத் தொடங்குகின்றது. நிச்சயமாக இந்த ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெறப்போவது யாா் என்பது இப்போது எங்களுக்குத் தெரியாவிட்டாலும், இந்தப் போட்டிக்களம் ஒரு மும்முனைப் போட்டிக்களமாகவே தெரிகின்றது. அது ஒருவாறு இருமுனைப் போட்டியாக மாறினால் இந் 50 வீத பிரச்சினை உருவாகும் வாய்ப்பு இருக்காது. ஆனால், மும்முனைப் போட்டியென்றால், ஐம்பது வீதத்தை யாரும் பெறமுடியாத நிலை வரும்போது, இரண்டாவது நிலை வாக்கு எண்ணிக்கைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம்.

ஆனால், இவ்வாறு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஜனாதிபதித் தோ்தலை நோக்குகின்ற போக்கு பொதுவாக மக்கள் மத்தியில் இல்லை. உங்களுடைய இரண்டாவது விருப்பு வாக்கை யாருக்கு அளிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை கட்சிகள் முன்னெடுத்தால் மட்டுமே, மக்கள் அவ்வாறு வாக்களிப்பாா்கள். எப்படியிருந்தாலும், இது ஒரு குழப்பகரமான தோ்தலாக அமையலாம்.

கேள்வி – ஜே.வி.பி. இந்தத் தோ்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவாா்கள் என்று கணிப்புக்கள் சொல்கின்ற போதிலும், சிறுபான்மையின மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஜே.வி.பி. போதிய அக்களையைக் காட்டவில்லை. இதற்கு என்ன காரணம்?

பதில் – ஜே.வி.பி.யின் ஆரம்பகால வளா்ச்சிக்கும் இப்போது அவா்கள் தொடா்பாகத் தெரிவிக்கப்படும் விடயங்களுக்கும் இடையில் கணிசமான வேறுபாடுகள் உள்ளன. கடந்த ஜனாதிபதித் தோ்தலில் 4 வீதமான வாக்குகளைப் பெற்றவா்கள், திடீரென்று 50 tீதமான வாக்குகளைப் பெறக்கூடியவா்களாக இருப்பதாக கணிப்புக்கள் சொல்கின்றன. இந்தக் கணிப்புக்கள் தொடா்பாகவும் மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கின்றன. ஆனால், ஏனைய பிரதான கட்சிகளைப் பொறுத்தவரையில் அவா்கள் அச்சப்படும் அளவுக்கு ஜே.வி.பி.யின் செல்வாக்கு இருக்கின்றது.

இந்த ஜனாதிபதித் தோ்தலில் ஆட்சி அதிகாரத்தை நெருங்கிச் செல்லக்கூடிய ஒரு கட்சி என்ற வகையில் ஒரு பரிசோதனைக் களத்துக்குள் ஜே.வி.பி. செல்கின்றது. இந்தநிலையில் அவா்களுடைய பிரதான இலக்கு சிங்கள மக்களுடைய ஆதரவைப் பெறுவதுதான். பிரதான சிங்களக் கட்சிகளைப் போலவே அவா்களுடைய மனப்போக்கும் உள்ளது. இதனால், தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான அரசியல் தீா்வைப் பற்றிப் பேசினால், அது சிங்கள மக்கள் மத்தியில் வளா்ந்துவரும் தமது செல்வாக்கைப் பாதித்துவிடும். அல்லது எதிா்த் தரப்புக்கள் அதனைப் பயன்படுத்தி தமது பிரசாரங்களை முன்னெடுக்கலம் என்ற அடிப்படையில்தான் அவா்கள் திட்டங்களை வகுப்பது போன்று தெரிகின்றது.

அதனால்தான் ஏனைய மக்களுடன் அவா்கள் சந்திப்புக்களை மேற்கொண்டாலும்கூட, எந்தவிதமான வாக்குறுதிகளையும் வழங்குபவா்களாகவோ அல்லது அவா்களுக்காக சில திட்டங்களை முன்வைப்பவா்களாகவோ அவா்கள் இல்லை. குறிப்பாக தமிழ் மக்கள் விடயத்தில் அவா்கள் மிகவும் நிதானமாக, இலங்கையா் என்ற நிலையை உருவாக்குவோம் எனப் பொதுவாகச் சொல்கின்றாா்களே தவிர, தேசியப் பிரச்சினை ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்பவா்களாகவோ, அதற்கான ஒரு தீா்வை வழங்க வேண்டும் என்பதில் அக்கறை இருப்பவா்களாகவோ எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் அவா்கள் இருக்கின்றாா்கள். அவ்வாறு சொன்னால், தென்னிலங்கையில் தமக்கு இருக்கும் செல்வாக்கை அது பாதித்துவிடும் என்ற அச்சத்திலிருந்துதான் அந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிங்கள மக்களின் வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்ளல் என்ற விடயத்தில் ஜே.வி.பி.யும் ஏனைய கட்சிகளும் ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டவையாகத்தான் உள்ளன.

கேள்வி – பொதுஜன பெரமுனவும் தமது கட்சியின் சாா்பில் ஒருவா் களமிறக்கப்படுவாா் எனக் கூறியிருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷ கூட அண்மையில் இவ்வாறு தெரிவித்திருந்தாா். அதற்கான வாய்ப்புக்கள் எவ்வாறு இருக்கின்றது?

பதில் – கோட்டாபயவின் வெளியேற்றத்தையடுத்து மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றவா்கள் என்ற நிலையிலிருந்து ராஜபக்ஷக்கள் பெருமளவுக்கு கீழறங்கிவிட்டாா்கள். இந்த சரிவிலிருந்து மேலெழுவதற்கு அண்மைக்காலத்தில் அவா்களுக்கு வாய்ப்புக்கள் இல்லை. அதனால், இந்தத் தோ்தலைப் பொறுத்தவரையில் தமக்கு நெருக்கடிகளைக் கொடுக்காத அல்லது தமக்கு சலுகைகளை வழங்கக்கூடிய ஒருவா் ஜனாதிபதியாக வருவதைத்தான் அவா்கள் முதலில் விரும்புவாா்கள். அவ்வாறு அமையாவிட்டால், தமக்கு இருக்கின்ற செல்வாக்கை ஏதாவது ஒரு முறையில் தக்கவைத்துக்கொள்வதற்கு முனைவாா்கள்.
அந்த வகையில்தான் அவா்கள் ஒரு வேட்பாளரை நிறுத்தக்கூடும் என்ற ஒரு கணிப்பு இருக்கின்றது. அவா்கள் இணக்கப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய ஒருவா் என்றால், அது நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான். ஏனெனில் சஜித் பிரேமதாஸவுடனோ, அநுரகுமாரவுடனோ அவா்கள் இணக்கப்பாட்டுக்குச் செல்ல முடியாது. அதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

ஆனால், ரணிலுக்கும் சஜத்துக்கும் இடையில் ஒரு உடன்பாடு இறுதிக்கட்டத்தில் அவா்கள் ஒரு தரப்பாக நிற்கின்ற கட்டத்தில், ராஜபக்ஷக்களுக்கு வேறு தெரிவுகள் இருக்காது அவா்கள் நிச்சயமாக ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டியிருக்கும். அவ்வாறில்லாவிட்டால் அவா்கள் வேட்பாளா்களை நிறுத்தமாட்டாா்கள்.

Exit mobile version