Home ஆய்வுகள் தொல்பொருள் என்ற போர்வையில் மத சுதந்திரத்துக்கும் தடையா? – திருமலையான்

தொல்பொருள் என்ற போர்வையில் மத சுதந்திரத்துக்கும் தடையா? – திருமலையான்

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராமமே தென்னைமரவாடி.இக் கிராமத்தில் தமிழ் பேசும் மக்கள் தங்களது ஜீவனாம்சத்தை அன்றாட கூலி தொழில் மூலமே வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இருந்த போதிலும் அண்மையில்  தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று  (23.02.2024) அன்று மாலை இடம் பெற்றுள்ளது.

Thennamaravadi trinco தொல்பொருள் என்ற போர்வையில் மத சுதந்திரத்துக்கும் தடையா? - திருமலையான்திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவடி கிராமத்தில் உள்ள மிகப்பழமையான கந்தசாமிமலை முருகன் ஆலயத்தில் மாதாந்தம் கிராம மக்களால் பௌர்ணமிதின பொங்கல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில்  குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெருகல், மூதூர், திருகோணமலையைச் சேர்ந்த 50க்கு மேற்பட்ட பொது மக்கள் வருகைதந்திருந்திருந்தனர். இதன்போது அப்பகுதியில் 400க்கு மேற்பட்ட பொலிசார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதிக்குள் நுழையவிடாது பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த  பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, சமூக செயற்பாட்டாளர் நவரெத்தினராசா அஞ்சலி, ஆலய தலைவர் வைரமுத்து விஜயநாயகம் உட்பட அகம் அமைப்பின் அங்கத்தவர்கள், எல்லா அங்கத்தவ தமிழ் தேசிய மக்களும் என குறிப்பிட்டு புல்மோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் தடையுத்தரவு வழங்கப்பட்டதுடன் ஏனைய பொதுமக்களும் தடுக்கப்பட்டனர்.

இதன்போது குறித்த இடம் பௌத்த விகாரைக்கு உரியது எனவும்  நீநிமன்ற தடை இருப்பதன் காரணமாக எவரையும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்து பொதுமக்களை பொலிசார்  திருப்பி அனுப்பினர்.

இவ்வாறு சிறுபான்மை சமூகத்தை தொல்பொருள் என்ற போர்வைக்குள்ளும் அடக்கி ஒடுக்க முனைகின்றனர்.புல்மோட்டை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஊடான தடை உத்தரவை பெற்று குறித்த இடமானது தொல்லியல் பிரதேசம் எனவும் யாரும் அங்கு செல்லவோ எதுவும் செய்தவோ முடியாது எனவும் குறித்த பகுதி சங்கமலை புராதன விகாரைக்கு சொந்தமான தொல்லியல் பிரதேசம் எனவும் கூறி மதக் கடமைகளை செய்ய விடாது தடுத்து நிறுத்தினர். இது தொடர்பில் அப் பகுதி பிரதேச வாசி ஒருவர் இவ்வாறு தெரிவித்தார் ” 1980க்கு முன் இருந்து வாழ்ந்து இடம் பெயர்ந்து இந்த பூமியில் பூசை நடாத்துதல் முதல் நேர்ச்சை வைப்பது தொடக்கம் கதிர்காம யாத்திரையின் போதான அன்னதானமும் செய்து வந்தோம் .ஒவ்வொரு பருவத்துக்கும் வேளாண்மை செய்கையின் போது பொங்கல் பூசை உட்பட அன்னதானம் என சகல விடயங்களையும் செய்து வருகிறோம். தற்போது தடை விதிக்கின்றனர்” என்றார்.

தமிழ் மக்களின் அடையாளமாக காணப்படும் இந்த இடம் அவர்களது மதக் கடமைகளை செய்ய விடாது தடுத்து நிறுத்துமளவுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதுடன் சுதந்திரம் பறிக்கப்படுகிறது எந்த அரசாங்கம் ஆட்சிக்கு மாறி மாறி வந்தாலும் சிறுபான்மை சமூகத்தின் மீதான பார்வை வித்தியாசமானதாகவே ஆக்கிக் கொள்கின்றனர். இலங்கை அரசியல் அமைப்பில் உரிமைகள் மற்றும் மதச் சுதந்திரம் தொடர்பில் தெளிவாக சொல்லப்பட்ட போதிலும் இங்கு நடை முறையில் அவ்வாறு இல்லை அதனை மாற்றியே நடை முறைப்படுத்துகின்றனர் .

“இந்த பூமி தற்போது புத்தர் பூமியாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாம் என பொலிஸார் கூறுகின்றனர். இதை விட்டு போங்க என்று பொலிஸார் கூறுகின்றனர் இங்கு இரானுவம், புலனாய்வுத் துறையாளர்கள், விசேட அதிரடிப்படையினர்  வந்துள்ளனர். ஒவ்வொரு பருவத்திலும் பூசை செய்வது வழக்கம் இப்போது மாத்திரம் ஏன் தடை போடுகின்றனர் எங்கள் கடவுளை வழிப்படவும் பௌர்ணமி பொங்களை செய்யவும் விடாது தடுக்கின்றனர் ” என அக் கிராமத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு பல சிறுபான்மை சமூகத்தின் காணிகள் தொல்பொருள் என்ற போர்வையில் கபளீகரம் செய்கின்றனர். காலம காலமாக மத வழிபாடுகளை மேற்கொண்ட இக் கிராம மக்கள் யுத்தத்தின் பின் 2010 ல் மீளக்குடியேறி இவ் ஆலயத்தில் அவர்களது மதச் சடங்குகளை செய்தே வந்தனர் ஆனால் அப்பட்டமான தடை உத்தரவை விதித்து அவர்கள் மீது சேறு பூச முனைகின்றனர்.

மஹிந்த ராஜபக்ச காலம் தொடக்கம் எந்த ஜனாதிபதி வந்தாலும் காணி அபகரிப்புக்கு தீர்வில்லாமலையே சிறுபான்மை சமூகம் ஏங்கித் தவிக்கின்றனர். சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அரசியல் துறை சார் மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து மக்களின் இது போன்ற உரிமை விடயத்தில் சாதகமான முடிவுகளை பெற கைகோர்த்து நிற்க வேண்டும்.

“கந்தசாமி மலையில் பொங்களுக்கு தடை விதிக்கின்றனர் இது எங்கள் பூமி இதனால் மனம் வருந்துகிறோம் 2010ல் இருந்து இங்கு தற்போது வரை வாழ்ந்து வருகிறோம்.இங்கு பொங்குவது முதல் நேர்த்தி வைத்து எல்லா விடயங்களையும் முன்னெடுப்பது வழமை “அக் கிராமத்தை சேர்ந்த ஒருவர் இதன் போது ஆதங்கத்தை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார் .

இப் பகுதியை அண்டிய பல காணிகள் அரிசி மலையை அண்மித்தும் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது கடந்த காலங்களில் இது இடம் பெற்றுள்ளதுடன் தற்போதும் இடம் பெறுகிறது அரிசி மலையை அண்டிய பௌத்த விகாரையின் விகாராதிபதி இது விடயத்தில் மக்களது விவசாய பூமியை அவர்களை விவசாயம் செய்ய விடாது தடுத்து நிறுத்தியுள்ளார். இவ்வாறு அடாவடித்தனத்தில் காணிகளை கபளீகரம் செய்து சிறுபான்மை மக்கள் மீதுள்ள நம்பிக்கையை மழுங்கடிக்கச் செய்து சமூக சமய நல்லிணக்கம் இதன் மூலமாக சீர்குலைக்கப்படுகிறது.

ஒட்டு மொத்த தமிழ் பேசும் சமூகமும் இதன் மூலம் தங்களது விவசாய காணிகள் குடியிருப்பு காணிகள் மதஸ் தளங்களுக்கு சொந்தமான காணிகள் என பல ஏக்கர் நிலங்கள் தொல்பொருள் என்ற போர்வையில் அபகரிக்கின்றனர். இவ்வாறான நிலையில் இருந்து விடுபட சமமான உரிமைகளை அனைவருக்கும் வழங்க வேண்டும் ஆட்சியாளர்கள் இதற்காக சிறுபான்மை இனத்தை பாதுகாக்க முடியாமல் போகாது ஒன்றினைத்து கொண்டு செல்ல வேண்டும்.

“எங்களது அம்மா, அப்பா காலம் தொட்டு இங்கு நேர்த்தி பூசை என செய்கிறோம் எனது 30 நாள் குழந்தையுடன் இங்கு வந்து யுத்த காலத்தில் இருந்து மூன்று நாள் தங்கியிருந்ததுடன் இதன் வழியாக வந்து பிள்ளையார் தான் காப்பாற்றினார். எங்கள் மண் இது இதனை விட்டுக் கொடுக்க முடியாது”என தாய் ஒருவர் தென்னை மரவாடியின் வரலாறு தொடர்பில் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

எனவே தான் இம் மக்களின் மதசுதந்திரத்தை தடுக்காது உரிமைகளோடும் சுதந்திரத்தோடும் வாழ வழிசமைத்துக் கொடுக்க வேண்டும்.

 

Exit mobile version