Tamil News
Home உலகச் செய்திகள் தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியின் முக்கிய எல்லைகளில் போக்குவரத்து மாற்றம்

தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியின் முக்கிய எல்லைகளில் போக்குவரத்து மாற்றம்

விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன்,  போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம்  82ஆவது  நாளை எட்டியுள்ளது.

இந் நிலையில், எல்லை பகுதிகளை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான வாகனங்களுடன் விவசாயிகள் போராடி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லைகளில் நடைபெறும் போராட்டம் காரணமாக உத்தர பிரதேசம், டெல்லி, அரியானா மாநிலங்களிடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை சரி செய்யும் பொருட்டு போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை  டெல்லி  போக்குவரத்து காவல்துரை பிரிவு செய்துள்ளது. இதன்படி  நொய்டாவிலிருந்து டெல்லிக்கு வரும் முக்கியமான பகுதியான கேரேஜ் வே பாதையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் அந்த பாதை மூடப்பட்டுள்ளது. அதேசமயம் டெல்லியிலிருந்து நொய்டா செல்லும் கேரேஜ் வே வழக்கம் போல செயல்படுகிறது.

காசிப்பூர் எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் உத்தரபிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வரும் வாகன ஓட்டிகள் அந்த பாதையை பயன்படுத்த முடியாது. பயணிகள் டி.என்.டி., கர்காரி மோட் மற்றும் ஷஹாத்ரா வழியாக காசியாபாத் செல்லும்படி போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

டெல்லி-அரியானா இடையிலான போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் லம்பூர் சஃபியாபாத், பல்லா மற்றும் சிங்கு பள்ளி சுங்க வரி எல்லை வழியாக மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Exit mobile version