Tamil News
Home செய்திகள் தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில் கோத்தபயா சிங்கப்பூர் சென்றார்

தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில் கோத்தபயா சிங்கப்பூர் சென்றார்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

வைத்திய பரிசோதனைகளுக்காக இன்று காலை அவர் சிங்கப்பூர் பயணமாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் தனது தந்தைக்கு ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை அமைப்பதற்காக அரச நிதியில் 33.9 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக இந்த வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், கோத்தபயா ராஜபக்ஸ சிங்கப்பூரில் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டமையால் வைத்திய பரிசோதனைகளுக்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திதகி முதல் 12ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக அவரின் சட்டத்தரணி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் நாயகம் திலீப் பீரிஸ் கோத்தபயாவின் குறித்த கோரிக்கைக்கு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில் கோத்தபயா ராஜபக்ஸ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 3ஆம் திகதி தளர்த்தப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ வைத்திய பரிசோதனைகளுக்காக இன்று காலை சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.

 

 

 

 

 

Exit mobile version