Tamil News
Home செய்திகள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை -போராட்டம் தொடர்பான ஊடக அறிக்கை

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை -போராட்டம் தொடர்பான ஊடக அறிக்கை

தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு உரிய உணர்வழியியல் வைத்திய நிபுணரை விடுவிக்காமல் இருப்பது புற்று நோயாளரின் நலனை பற்றி அக்கறை இல்லாத செயலாகவே நாம் பார்க்கிறோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் விடுத்துத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எமது கோரிக்கைகளைப் பரிசீலித்து சாதகமான எழுத்து மூலமான உறுதிமொழியினை வழங்கியுள்ளார். ஆயினும் உணர்வழியியல் வைத்திய நிபுணரை எமது வைத்திய சாலைக்கு விடுவிக்கும் திகதி குறித்து தன்னால் அறியத்தர முடியாது என்றும் அந்த முடிவு யாழ் போதனா வைத்தியசாலையினாலேயே எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் உணர்வழியியல் நிபுணரை விடுவிக்க மறுத்துவிட்டார். இங்கு வரவேண்டிய வைத்திய நிபுணருக்கு பதிலீட்டாக இரண்டு வைத்திய நிபுணர்கள் 3 மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்ட போதும் எமக்கான வைத்திய நிபுணரை விடுவிக்காமல் உள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

வடமாகாணத்தில் உள்ள ஒரேயொரு புற்றுநோய் வைத்தியசாலையை கொண்டுள்ள தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு உரிய உணர்வழியியல் வைத்திய நிபுணரை விடுவிக்காமல் இருப்பது புற்று நோயாளரின் நலனை பற்றி அக்கறை இல்லாத செயலாகவே நாம் பார்க்கிறோம்.

வைத்திய நிபுணரை விடுவிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சில் இருந்து கோரப்பட்டும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் அதற்கு செவிசாய்க்க மறுத்துவிட்டார். இவ் வைத்திய நிபுணரின் இடமாற்றமானது பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் வருடாந்த இடமாற்ற நியமனத்திற்கு அமைவாகவே வழங்கப்பட்டுள்ளது.

எனவே எமக்கான உணர்வழியியல் வைத்திய நிபுணரை விடுவிக்குமாறு கோரியே நாளை எமது அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காலை 8 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை நடைபெறவுள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு வைத்தியர் த.சத்தியமூர்த்தி அவர்களே பொறுப்பேற்க வேண்டும். ஆயினும் மக்களின் நலன் கருதி அவசிய சேவைகள் தங்குதடையின்றி நடைபெறும் என்பதனையும் அறியத்தருகின்றோம்” என்றுள்ளது.

Exit mobile version