Tamil News
Home செய்திகள் தமிழ்க் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும் – யாழ்ப்பாண சந்திப்பில் வலியுறுத்திய இந்திய துாதுவா்

தமிழ்க் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும் – யாழ்ப்பாண சந்திப்பில் வலியுறுத்திய இந்திய துாதுவா்

“தமிழ்க் கட்சிகளின் பிளவு வருத்தமளிக்கின்றது என்றும், இந்தக் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் வலியுறுத்தினார்” என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சிலரை நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சி.வி.கே. சிவஞானம் இதனைத் தெரிவித்தாா்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியத் தூதுவருடன் பல விடயங்கள் பற்றி உரையாடி இருந்தோம். குறிப்பாக நெடுந்தீவுக்கான போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினேன். நெடுந்தீவுக்கு அன்பளிப்பாக ஒரு படகு ஒன்றைப் பெற்றுத் தருமாறும் கோரினேன்.

அதற்கான கோரிக்கையைத் தான் சமர்ப்பிப்பார் எனவும், இலங்கை அரசுடன் இது பற்றி தான் பேசவுள்ளார் எனவும் இந்தியத் தூதுவர் உறுதியளித்தார்” என்று சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தாா்

“தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை தொடர்பில் ஏதும் பேசப்பட்டதா?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சி.வி.கே. சிவஞானம், “தமிழ் அரசியல்வாதிகள் ஒவ்வொருடனும் தனித்தனியே இந்தியத் தூதுவர் கலந்துரையாடினார். என்னுடன் கதைக்கும்போது தமிழ்க் கட்சிகளின் பிளவு வருத்தமளிக்கின்றது என்று தூதுவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை பற்றி பேசப்படும் நிலையில் தமிழ்க் கட்சிகள் மேலும் பிளவடைகின்றன. இருக்கின்ற தமிழ்க் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தூதுவர் அறிவுறுத்தினாா்” என்றும் சிவஞானம் தெரிவித்தாா்.

Exit mobile version