Tamil News
Home செய்திகள் தமிழர்கள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் – தென்னிலங்கையில் எவரும் வெற்றிபெற முடியாது என்கிறார் சிறீதரன்

தமிழர்கள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் – தென்னிலங்கையில் எவரும் வெற்றிபெற முடியாது என்கிறார் சிறீதரன்

“ஜனாதிபதித் தேர்தலில் நிற்பவர்கள் யாராக இருந்தாலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வையுங்கள். அது பற்றி பரிசீலிப்போம்” இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமரா பெண்கள் ஒன்றியத்தின் மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இப்போது ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் பேசப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளர் கூட இந்த மண்டபத்தில் ஒரு கூட்டத்தை நடத்திச் சென்றிருக்கின்றார்.

நீண்ட நெடுங்காலமாகக் கடந்த எட்டு சகாப்தங்களுக்கு மேலாக உறுதி தளராது – தனது கொள்கை தளராது இனத்தினுடைய அடிப்படைக் கொள்கைகளை அடிநாதமாகக் கொண்டு தமிழினம் பயணித்து வருகின்றது.

இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் யாராக இருந்தாலும் இனப்பிச்சனைக்கான ஒரு தீர்வை முன்வையுங்கள். நாங்கள் அது பற்றி பரிசீலிப்போம். தமிழர்கள் பொது வேட்பாளர் பற்றிய சிந்தனையையும் கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை எட்டுவதற்காகத் தமிழ் வாக்காளர்கள் ஒன்றுதிரண்டு ஒரு தமிழ் பொது வேட்பாளரை தீர்மானிக்க முனைந்தால் தென்பகுதியில் இருந்து எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெல்ல முடியாத மிகப் பெரும் சங்கடத்தைக் கொடுக்கும். அது பற்றி கூட தமிழர் தரப்பு மிக நுணுக்கமாக ஆராய்கின்றது” என்றார்.

Exit mobile version