Tamil News
Home செய்திகள் தமிழக ஆளுநர் மீதான நளினியின் வழக்கு ஒத்திவைப்பு

தமிழக ஆளுநர் மீதான நளினியின் வழக்கு ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்தில் தண்டனை பெற்று வரும் ஏழு பேரையும் விடுதலை செய்வதில், அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றத் தவறிய தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திகதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் கைதிகளான நளினி, முருகன், பேரறிவாளன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய ஏழுபேரையும் விடுதலை செய்ய 2018 செப்டெம்பர் 09ஆம் திகதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமைச்சரவை பரிந்துரை அளித்த பின்னரும் கடந்த 15 மாதங்களாக அதன்மீது எந்தவித முடிவும் எடுக்காமல், அரசியல் சாசன விதிகளை மீறிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும் என சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பா.ஜ.க உறுப்பினராகவும், ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாகவும் இருந்த ஆளுநர், ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், 15 மாதங்களாக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துரைசாமி, அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர், எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது, அரசியல் சாசன அதிகாரங்களுக்கு முரணானது என வாதிட்டார்.

அமைச்சரவை பரிந்துரை மீது முடிவெடுக்க எந்த கால நிர்ணயமும் செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை பதவி நீக்கம் செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எப்படி உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version