Tamil News
Home செய்திகள் சுமணரத்தன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ்

சுமணரத்தன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ்

மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதியான சர்ச்சைக்குரிய அம்பிட்டியே சுமணரத்தன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றத்திற்கு வந்து அல்லது பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் அளிக்கும்படி அவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன எனவும், அதுபற்றி விசாரணை நடத்தும்படியும் சுமணரத்தன தேரர் குரல் எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அந்தப் பிரதேசத்தில் சிலர் நிர்மாணப் பணிகள் அல்லது வேறு பணிகளுக்காக நில அளவையில் ஈடுபட்டபோது அந்தப் பகுதிக்கு விரைந்த தேரர், அங்கிருந்த அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருந்தார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுமணரத்தன தேரர், இறுதியில் அங்கிருந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவர் மீது தாக்குதலையும் நடத்தினார் எனக் கூறப்படும் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version