Tamil News
Home செய்திகள் சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும் – யாழ் அரசாங்க அதிபர்

சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும் – யாழ் அரசாங்க அதிபர்

தற்போதைய காலகட்டத்தில் சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கொரோனா  ஒழிப்பு செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

“வடமாகாணத்தின் covid 19 தொடர்பான மாகாணமட்ட கூட்டம்,  ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலே பொதுவாக மாவட்டங்களுடைய நிலைமைகள் ஆராயப்பட்டு அதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்து அறியப்பட்டதோடு அங்குள்ள தொற்று நிலைமைகளுக்கு ஏற்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டது.

மேலும் பொதுவான நடைமுறைகளை எமது சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள covid 19 தொடர்பான சட்டரீதியான ஏற்பாடுகளை பொருத்தமான வகையில் அமுல்படுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டது. அதே போன்று அந்த சட்டரீதியான ஏற்பாடுகளை பின்பற்றாதவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகளை உரிய தரப்பினர் எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. பொதுவாக ஊடகங்கள் பொறுப்புமிக்க வகையிலே covid 19 தொடர்பான செய்திகளை வெளிப்படுத்த வேண்டும் என கோரப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 226 குடும்பங்களைச் சேர்ந்த 424 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். அத்தோடு 14 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்கள் .

மேலும் யாழ் மாவட்டத்தில் மருதங்கேணி சிகிச்சை நிலையம் தற்போது இயங்கி வருகின்றது. இதனைவிட விடத்தல் பளை மற்றும் கோப்பாய் கல்வியல் கல்லூரி போன்ற இடங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் covid 19 தொற்று உறுதிப் படுத்தப் பட்டவர்கள் யாழ் மாவட்டத்தில் நான்காக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இரண்டு பேர் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏனையோர் சாவகச்சேரி மற்றும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் போக்குவரத்து நிலைமைகள் மற்றும் ஏனைய இயல்பு நிலைமைகள் பாதிக்காத வண்ணம் சுகாதார நடைமுறை வர்த்தமானி அறிவுறுத்தலை பின்பற்றி சகலரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது ஒரு தீர்மானமாக இன்றைய தினம் எடுக்கப்பட்டது.

வர்த்தகமானி தீர்மானங்களை மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் பட்சத்தில் மாவட்டத்தில் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும். மேலும் பொதுவாக அரசாங்கம் அலுவலகங்களில் கடமையாற்றுபவர்களுடைய விபரங்களை அவர்களுடைய முகவரிகள் அவர்களின் தொடர்பு இலக்கங்கள் போன்றவற்றை தொகுத்து வைத்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் எந்த பிரதேசத்திலாவது தொற்று ஏற்படும் போது அவர்களை இலகுவாக தனிமைப் படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இந்த சுகாதார நடைமுறைகள் அனைத்தும் மக்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன இவை மக்களை அசௌகரிய படுத்துவதற்கான நடைமுறைகள் அல்ல. எனவே இதனுடைய விளைவுகளை உணர்ந்த வகையிலே எங்களுடைய மக்கள் தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

தற்பொழுது கூடுமானவரையில் அவசியமற்ற தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து அத்தோடு அவ்வாறு செல்பவர்கள் கூட எங்கெங்கு செல்கின்றார்கள் போன்ற விடயங்களை தரவுகளாக சேர்த்து வைப்பதன் மூலம் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். அத்தோடு வெளி மாவட்டத்திலிருந்து வந்து இங்கே கடமையாற்றுவோர் தொடர்பில் இங்கே பிரதேச செயலாளர் ஊடாக தரவுகள் சேகரிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அவ்வாறு கோரப்பட்டவர்களின் விபரங்கள் தேவைப்படும் போது உரிய சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக வெளியிடங்களிலிருந்து யாழ் மாவட்டத்திற்கு வந்து கடமையாற்றுபவர்கள் தமது பதிவுகளை மேற்கொள்வது கட்டாயமான ஒரு விடயமாகும். எனவே இவ்வாறான முன்னேற்பாடு நடவடிக்கைகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் செயற்படுத்துவதன் மூலம் தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்து கொள்ள முடியும்.

எனினும் யாழ்ப்பாண குடாநாடு ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது ஒரு முன்னேற்றகரமான மாவட்டமாக காணப்படுகின்றது. எனினும் இந்த தொற்றினை தடுப்பதற்கு கூடுமானவரை அனைவரும் ஒத்துழைத்து செயற்படுவதன் மூலம் நமது மாவட்டத்தில் தொடர்ச்சியாக தொற்று அற்ற இந்த நிலைமையினை பேணமுடியும்” என்றார்.

Exit mobile version