Tamil News
Home செய்திகள் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஏப். 27 இல் இலங்கை வருகை – கொழும்பில் முக்கிய பேச்சு

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஏப். 27 இல் இலங்கை வருகை – கொழும்பில் முக்கிய பேச்சு

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்.

இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்r உள்ளிட்ட பாதுகாப்புப் துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்தித்து சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகர் உட்பட முக்கிய சீனப் திட்டங்களையும் ஜெனரல் வெய்ஃபெங் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் போன்று இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்துக்கு விரிவுபடுத்துவது சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய்ஃபெங்கின் இலங்கை விஜயத்தின் முக்கியநோக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இலங்கை விஜயத்துக்கு முன்பதாக கடந்த மார்ச் மாதம் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்திருந்த ஜெனரல் வெய் ஃபெங் அங்கு இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு விரிவாக்கம் தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார். தென் சீனக்கட்லில் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகள் தென் சீனப் கடலுக்கு தமது கடற்படைகளை அனுப்பியும் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐரோப்பா விஜயத்தின் போது அந்த நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்புகள் தொடர்பில்ஜெனரல் வெய் ஃபெங் கவனம் செலுத்தியிருந்தார். குறிப்பாக ஹங்கேரி, செர்பியா, கிரீஸ் மற்றும் வட மாசிடோனியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடனான ஜெனரல் வெய் ஃபெங்கின் சந்திப்புகளின் போது இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது தொடர்பில் மிக ஆர்வமாகப் பேசப்பட்டுள்ளது.

மறுபுறம் தென் சீனப் கடலுக்குள் தமது கடற்படைகளை அனுப்பிய நாடுகள் வடஅட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்று அழைக்கப்படுகின்ற நேட்டோ படைகளையும் குறித்த கடற்பகுதிக்கு அனுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. தென் சீனப் கடலில் இவ்வாறானதொரு பாரிய எதிர்ப்பை எதிர்பாராத சீனா பின்வாங்கியது.

ஆனால் தென் சீன கடலில் தமது திட்டங்களை முன்னெடுக்கும் போது இவ்வாறானதொரு எதிர்ப்பலை மீண்டும் வந்து விடல்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் செயற்படும் வகையிலேயே சீனப் பாதுகாப்பு அமைச்சரின் ஐரோப்பிய விஜயம் அமைந்திருந்தது. ஜெனரல் வெய் ஃபெங்கின் கொழும்பு விஜயமும் இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதுடன் பிராந்தியத்தில் ஏற்படக் கூடிய சவால்களை எதிர்கொள்ளக் கூடிய வகையிலான மூலோபாயத்தை வகுப்பதாகவே அமையும் எனபாதுகாப்பு துறைசார் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக இந்திய மற்றும் பசுபிக் பெருங்கடல்களை சீனாவின் மேலாதிக்கத்தின் கீழ்வராமல் பாதுகாக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய “குவாட்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடற் பிராந்தியத்தில் சீனாவின் தந்திரோபாயம் வெற்றிபெற்று விடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகவே குவாட்காணப்படுகிறது.

குவாட் காரணமாக இந்து சமுத்திரம் மெதுவாக இராணுவமயமாக்கலுக்கு உட்படுவதோடு இங்கு ஏற்படக் கூடிய சவால்களை எதிர்கொள்ள இலங்கை மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுடன் இராணுவ உறவுகளை சீனா வளர்த்துக்கொள்கிறது. பாகிஸ்தானுடனம் மிக பலமான இராணுவ உறவை சீனா கொண்டுள்ளது. இவ்வாறனதொரு பின்னணியில் இலங்கை வரும் ஜெனரல் வெய் ஃபெங்க் இலங்கையின் முன்னெடுக்கவுள்ள பேச்சுகள் முக்கியம் பெறுகின்றன.

Exit mobile version