Tamil News
Home செய்திகள் சிறுபான்மையினக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அரசில் இணைய முயற்சி? இரகசியப் பேச்சுக்கள் ஆரம்பம்

சிறுபான்மையினக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அரசில் இணைய முயற்சி? இரகசியப் பேச்சுக்கள் ஆரம்பம்

அரசாங்கத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை எதிர்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆரம்பித்துள்ளனர் என கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர் என இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சிறுபான்மை கட்சியொன்றை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசாங்கத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள நிலையிலும் முக்கிய எதிர்கட்சியிடமிருந்து தேசியபட்டியல் ஆசனங்களை பெறுவதில் சிறுபான்மை கட்சிகள் ஏமாற்றத்தை சந்தித்துள்ள நிலையிலும் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளதை ஆளும் கட்சியின் முக்கிய அரசியல்வாதியொருவர் உறுதிசெய்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் உள்ள நிலையில் அரசாங்கம் ஏன் சிறுபான்மை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாடுகின்றது என்ற கேள்விக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version