Home ஆய்வுகள் சிறுதோட்டக் கனவு சாத்தியமாகுமா? – துரைசாமி நடராஜா

சிறுதோட்டக் கனவு சாத்தியமாகுமா? – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.உழைப்புக்கேற்ற ஊதியமின்றி அவர்கள் அல்லல்படுகின்றனர்.இந்நிலையில் அம்மக்களின் பொருளாதாரச் சுமைக்கு பரிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும், காணியுரிமைக் கனவை மெய்ப்பிக்கும் நோக்கிலும் அம்மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றவேண்டியதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாக கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன.ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி போன்ற பெரும்பான்மைக் கட்சிகளும் சமகாலத்தில் இது குறித்து ஆழமான வலியுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளன.எனினும் இது வெறும் வாக்குறுதியாக அல்லாது செயல்வடிவம் பெற வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

upcountry11 சிறுதோட்டக் கனவு சாத்தியமாகுமா? - துரைசாமி நடராஜாபெருந்தோட்ட மக்கள் இந்நாட்டின் தேசிய வருமானத்தில் கணிசமான வகிபாகத்தைக் கொண்டுள்ளனர்.வெளிநாட்டு வேலைவாய்ப்பின் ஊடான அந்நியச் செலாவணி உழைப்பு, ஆடைத்தொழிற்சாலை, தேயிலைத் தொழிற்றுறை என்று பல்வேறு மட்டங்களிலும் பெருந்தோட்ட மக்களின் வகிபாகத்தை குறைத்து மதிப்பிட முடியாது.1959 இல் இலங்கை அந்நியச் செலாவணி உழைப்பில் தேயிலையின் பங்கு 59.6 வீதமாக அமைந்திருந்தது.1969 இல் 57.8, 1976 இல் 43.6, 1978 இல் 48.5, 1982 இல் 29.6, 1986 இல் 27.2, 1987 இல் 25.9, 1988 இல் 26.2, 1990 இல் 24.9 வீதமாக இலங்கையின் அந்நியச் செலாவணி உழைப்பில் தேயிலையின் பங்கு அமைந்திருந்தது.இதில் பெருந்தோட்டங்களின் மூலமான வருவாயும் அதிகமாகும்.

இதேவேளை தேயிலை உற்பத்தியைப் பொறுத்தவரையில் 1945 இல் இலங்கையின் தேயிலை உற்பத்தி125.6 மில்லியன் கிலோ கிராமாகும்.1955 இல் 172.5, 1965 இல் 228.6, 1972 இல் 213.9, 1976 இல் 196.6, 1978 இல் 198.9, 1982 இல் 187.8, 1986 இல் 211.3, 1988 இல் 227.2, 1989 இல் 207.0, 1990 இல் 233.0 மில்லியன் கிலோ கிராமாக தேயிலை உற்பத்தி காணப்பட்டது.பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் 1995 இல் 168.8, 2000 இல் 100.1, 2005 இல் 111.5, 2010 இல் 100.8, 2017 இல் 104.0 மில்லியன் கிலோ கிராம்களாக தேயிலை உற்பத்தி அமைந்திருந்தது.இவற்றினூடாக இலங்கை அதிகளவு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அபிவிருத்தியின் பிரதிபலிப்பு

பெருந்தோட்ட தேயிலைத் தொழிற்றுறை நாட்டின் முதுகெழும்பாக இருந்தபோதும் இத்தொழிற்றுறையை பாதுகாப்பதில் அரசாங்கம் காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.இலங்கையில் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான சிற்றுடைமைகள் காணப்படுகின்றன.1983 ம் ஆண்டில் இலங்கையின் மொத்த தேயிலை நிலப்பரப்பில் 75,769 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சிற்றுடைமை காணப்பட்டது.

இது மொத்த தேயிலை நிலப்பரப்பில் 36 வீதமாகும்.இந்நிலையில் 31 வருடங்களின் பின்னர் அதாவது 2014 இல் சிற்றுடைமை நிலப்பரப்பு ஏறக்குறைய இரண்டு மடங்கை நெருங்கிய நிலையில் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 335 ஹெக்டேயராக விஸ்தரிக்கப்பட்டதுடன் மாவட்ட ரீதியான பரம்பலிலும் கணிசமான மாற்றங்கள் இடம்பெற்றன.1983 இல் கண்டி மாவட்டத்திலும், 1994 இல் காலி மாவட்டத்திலும், 2005, 2014 ஆகிய ஆண்டுகளில் இரத்தினபுரி மாவட்டத்திலும் சிறுதோட்டங்களின் பரப்பு அதிகமாக காணப்பட்டது.இதனடிப்படையில் 2014 இல் இரத்தினபுரி மாவட்டத்தில் 30,447 ஹெக்டேயர் நிலப்பரப்பு சிற்றுடைமைகளுக்கு சொந்தமானதாக இருந்தது.

இன்று சிறுதோட்டங்களின் நிலப்பரப்பில் சுமார் 62 வீதமானவை இரத்தினபுரி, மாத்தறை, காலி ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே காணப்படுகின்றன.இம்மாவட்டங்கள் யாவும் தாழ்நில வலயத்தில் அமைந்துள்ள மாவட்டங்களாகும்.இந்நிலையில் தேயிலை உற்பத்தியில் தாழ்நில வலயத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பெருமளவில் சிறுதோட்டங்களில் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்தியின் பிரதிபலிப்பாக காணப்படுவதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை இலங்கையில் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான சிறுதோட்ட உடைமைகள் காணப்படும் நிலையில் அரசாங்கம் சிறுதோட்டங்களின் அபிவிருத்தி கருதி பல்வேறு சலுகைகளை மேற்கொண்டு வருகின்றது.நிவாரணங்கள் மற்றும் கடன் வசதிகள் எனப்பலவும் இதில் உள்ளடங்கும்.இதனால் இத்தொழிற்றுறை அதிகரித்த தேசிய வருவாயை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிற்றுறையாக மாற்றம் பெற்றுள்ளது.

சிற்றுடைமைகளின் தேயிலை உற்பத்தியைப் பொறுத்தவரையில் 1995 இல் 111.3, 2000 இல் 183.8, 2005 இல் 205.7, 2010 இல் 230.1, 2017 இல் 244.0 மில்லியன் கிலோ கிராம்களாக அமைந்திருந்தது.இக்காலப்பகுதியில் இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தி முறையே 280.1, 280.9, 317.2, 330.9, 348.0 மில்லியன் கிலோ கிராம்களாக அமைந்திருந்த நிலையில் அண்மைகாலமாக சிறுதோட்டங்களின் தேயிலை உற்பத்தியானது, பெருந்தோட்டங்களின் தேயிலை உற்பத்தியினை முந்திச் செல்வதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.அரசாங்கம் பெருந்தோட்டங்களை புறக்கணித்துச் செயற்படும் மாற்றாந்தாய் மனப்பான்மையும் இதற்கொரு காரணமாகும் என்பதை மறுப்பதற்கில்லை.

பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் போன்றே பெருந்தோட்டங்களும் இன்று பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றன.இதேவேளை கம்பனியினர் தோட்டங்களை கொண்டு நடாத்துதில் தாம் சிக்கல்கள் பலவற்றையும் எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் உள்ள தோட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து ஆயிரம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களே பணியாற்றி வந்தாலும் இத்தொழிலோடு மறைமுகமாக இணைந்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 20 இலட்சமாகும்.

இத்தனைபேரின் வாழ்வாதாரம் தங்கியிருக்கும் இத்துறையை தாம் மிகவும் நெருக்கடிக்கு மத்தியிலேயே கொண்டு நடத்துவதாக கம்பனிகள் தெரிவிக்கின்றன.மேலும் வேதன முறையை மாற்றியமைக்க வேண்டுமெனவும் வருமான பங்கீட்டு முறையை கொண்டு வருமாறும் தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்தபோதும் அவர்கள் அதுகுறித்து அக்கறை செலுத்தவில்லை என்றும் கம்பனிகள் தொழிற்சங்கங்களின்மீது குற்றம் சுமத்தி இருந்தன.இந்நிலையில் வெளியார் உற்பத்தி முறைக்கு கம்பனியினர் அழுத்தம் கொடுத்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

பெருந்தோட்டங்களில் இப்போது விரைவாக விஸ்தரிக்கப்படும் கட்டமைப்பு மாற்றம் என்பது இருக்கின்ற தேயிலைச் செடிகளை தொழிலாளர்களே பராமரித்து , அதன் அறுவடையை அதாவது தேயிலையில் இருந்து பறிக்கப்படும் கொழுந்தினை கம்பனிகளுக்கு வழங்கி தமது வாழ்வாதாரத்தை பராமரித்துக் கொள்ளும் நடவடிக்கையாகும்.இந்த ஏற்பாடுகள் என்பது தோட்டங்களில் நிரந்தரமாக பதிவு செய்து கொண்டு தோட்ட முகாமைத்துவம் வழங்கும் வேலைகளை அதாவது அவர்களால் கட்டளையிடப்பட்ட  வேலைகளை மட்டும் நிர்ணயிக்கப்பட்ட வேதனத்திற்காக மேற்கொள்ளப்படும் வேலைகளில் இருந்து விடுபெறுகின்ற செயன்முறையாகும் என்று பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஷ் குறிப்பிடுகின்றார்.

விசேட ஜனாதிபதி செயலணி

பெருந்தோட்ட மக்கள் பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் நிலையில் பல்வேறு துறைகளின் பின்னடைவிலும் இது தாக்கம் செலுத்துவதாக உள்ளது.இதனிடையே பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றியமைப்பதன் மூலம் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிசமைக்க முடியும் என்ற கருத்து வெளிப்பாடுகளும் இருந்து வருகின்றன.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகின்றார்.இந்நிலையில் மலையக மற்றும் தென்பகுதி பெருந்தோட்ட சமூகங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வழங்கி பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது சஜித் பெருந்தோட்ட மக்களின் நலன் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளார்.ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் ஸ்தாபிக்கப்படும் விசேட ஜனாதிபதி செயலணியின் ஊடாக பெருந்தோட்ட மக்களின் பொருளாதார,சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுவதோடு,பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரிமை மாத்திரமின்றி பயிர்ச்செய்கை, வீட்டு உறுதி , சிறுதோட்ட உரிமை என்பவற்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இதன்போது உறுதியளித்துள்ளார்.

இதேவேளை 2019 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் முற்போக்கு கூட்டணி  ‘கொள்கை விளக்கமும் கோரிக்கைகளும்’ என்ற தலைப்பில் வெளியிட்ட பிரசுரத்தில் மலையக மக்களின் நலன் கருதி பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இருந்தது.இதில் நாட்டில் தற்போது இயங்கிவரும் பெருந்தோட்ட நிர்வாகக் கட்டமைப்பினை இதே நாட்டில் இயங்கிவரும் சிறுதோட்ட உடைமைக் கட்டமைப்புக்கு மீளமைப்பு செய்ய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதன் மூலம் தொழில்துறை பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, சிறந்த வேலைச் சூழல், அதிக உற்பத்தித்திறன், சுயதொழில் அம்சங்களைக் கொண்டு பெருந்தோட்ட சமூகத்தின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கங்களை அடைதல்.மற்றும் இதன் மூலம் ஒரு தொழிலாளியாக அல்லாமல்  ‘தமிழ் விவசாயியாக’ 1500/- ரூபா அளவில் நாளொன்றுக்கான வருமானமாக கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியிலே பெறக்கூடியதான ஏற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்களும் பிரசுரத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

மைத்திரியின் வாக்குறுதி

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் தொழிலாளர்களாகவே வைத்திருக்க முடியாது.தோட்ட ஒப்பந்தங்களுக்கமைய காணித்துண்டொன்றை வழங்கி சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிகராக அம்மக்களை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இதனிடையே பெருந்தோட்ட மக்களுக்கு காணியுறுதியை பெற்றுக் கொடுக்கும் திட்டத்திற்கு ஜனாதிபதி 4000 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளமை தெரிந்ததேயாகும்.ஜனாதிபதியின் இந்நடவடிக்கைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது நன்றியினையும் தெரிவித்திருந்தார்.

மலையக மக்களை லயன் வாழ்க்கையில் இருந்து மீட்டெடுத்து காணியுரிமையுடன் கூடிய சகல வசதிகளும் கொண்ட நவீனமயமான கிராமியச் சூழலில், தனிவீடுகளை அமைத்துக் கொடுத்து வாழவைக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்திருந்தார்.எனினும் எதிர்பார்த்த சாதக விளைவுகள் கிடைக்காது போனமை யாவரும் அறிந்ததாகும்.எவ்வாறெனினும் பெருந்தோட்டத் தேயிலைத் தொழிற்றுறை மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலம் என்பன கேள்விக்குறியாகிவரும் நிலையில் தொழிலாளர்களை அதிலிருந்தும் மீட்டெடுத்து சிறுதோட்ட உடைமையாளர்களாக வாழச்செய்வதற்கு வித்திடுதல் வேண்டும்.இது அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உந்துசக்தியாகும் என்று கருதப்படுகின்றது.

Exit mobile version