Tamil News
Home செய்திகள் சிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கவே வடக்கில் கைது நடவடிக்கை -சார்ள்ஸ் நிர்மலநாதன்

சிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கவே வடக்கில் கைது நடவடிக்கை -சார்ள்ஸ் நிர்மலநாதன்

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் ஐந்து பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், “சிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் இளைஞர், யுவதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படுகின்றனர்.

தற்போதைய கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்கம் சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறியபோதும் இப்போது, அந்த மக்களின் கடும் எதிர்ப்புக்கு முகங்கொடுக்கின்றது.

இதனால், சிங்கள மக்கள் அரசாங்கத்தை எதிர்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் பௌத்தத் துறவிகளும் முழுமையான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இலங்கையின் முக்கிய ஸ்தானங்களை தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளுக்குத் தாரை வார்க்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதே  முக்கிய காரணம்.

இந்நிலையில், வடக்குக் கிழக்குப் பகுதியில் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்குவதற்கு எத்தணிக்கின்றார்கள் என்றுகூறி இளைஞர், யுவதிகள் கைதுசெய்யப்படுகிறார்கள். இது, சிங்கள மக்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கான  திட்டமிடலே” என்றார்.

மேலும் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மீள உருவாகிறார்கள் எனவும், கோட்டாபய அரசாங்கத்தினால் மாத்திரமே புலிகளின் உருவாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் தென்னிலங்கை மக்களிடம் கோட்டாபய அரசாங்கம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, அரசாங்க எதிர்ப்பை இல்லாமல் செய்யவே இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாகவும்  அவர் கூறியுள்ளார்.

Exit mobile version