Tamil News
Home செய்திகள் சிங்கள பௌத்த பேரினவாதம் தொடர்ந்தும் இயங்கு சக்தியாக உள்ளது – போ்ள் அமைப்பு

சிங்கள பௌத்த பேரினவாதம் தொடர்ந்தும் இயங்கு சக்தியாக உள்ளது – போ்ள் அமைப்பு

இலங்கை அரசாங்கத்தை தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பு கூறச்செய்வதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறுபவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள் என்ற செய்தியை சர்வதேச சமூகம் தெரிவிக்க முடியும் என இலங்கையில் சமத்துவம் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு (பேர்ள்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையின் பின்னர் இடம்பெற்ற பொதுவிவாதத்தில் பேர்ள் அமைப்பு இலங்கை 15 வருடங்களுக்கு முன்னர் இழைத்த யுத்த குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இனப்படுகொலை போன்றவற்றை நினைவு கூர்ந்தது. இந்த அநீதிகளுக்கு இதுவரை நீதியோ பொறுப்புக்கூறலோ இல்லை. 169,796 தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. அவர்கள் உயிரிழந்துவிட்டனர் என கருதப்படுகின்றது என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல், நீதி ஆகியவற்றை முன்னெடுப்பதில் இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்த அரசியல் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ள பேர்ள் அமைப்பு, தற்போதைய அரசாங்கம் வெற்று நல்லிணக்க பொறிமுறைகளையே முன்வைக்கின்றது. இந்த பொறிமுறை கடந்த கால உள்நாட்டுப் பொறிமுறைகளை போல பாதிக்கப்பட்டவர்களின் கரிசனைகளை தீர்க்கப்போவதில்லை. மோதல்களின் அடிப்படைகளுக்கு தீர்வை காணப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை சிங்கள பௌத்த பேரினவாதமே தொடர்ந்தும் இலங்கையில் முக்கிய இயங்கு சக்தியாக காணப்படுகின்றது. மனித உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன எனவும் பேர்ள் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் ஒடுக்குமுறை சாதனங்களால் தமிழர்களும் முஸ்லிம்களும் தொடர்ந்தும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள பேர்ள் அமைப்பு, கடந்தகால குற்றங்களுக்கு அப்பால் பாரிய இராணுவ மயப்படுத்தல், நினைவு கூரலை ஒடுக்குதல், தமிழர் தாயகப்பகுதிகளில் அதிகளவு சிங்களமயப்படுத்தல் போன்றவை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version