Tamil News
Home செய்திகள் சரணடைந்தவர்களை இராணுவம் கொன்றது; உறுதியாகக் கூறுகின்றார் எரிக் சொல்ஹெய்ம்

சரணடைந்தவர்களை இராணுவம் கொன்றது; உறுதியாகக் கூறுகின்றார் எரிக் சொல்ஹெய்ம்

“பிரபாகரனின் 12 வயது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார். இதில் எமக்கு மிக மிக உறுதியான சந்தேகம் உண்டு. இது இலங்கை இராணுவத்தின் பொறுப்பற்ற மிகத் தீய செயலாகும். துரதிர்ஷ்டவசமாக, இலங்கை இராணுவம் ஏன் சரணடைய வந்தவர்களை ஏற்று அவர்களை நீதிமன்றின் முன்னிலையில் நிறுத்தாமல் கொலை செய்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார் இலங்கைக்கான முன்னாள் விசேட தூதுவரும், 2002 – 2006 காலப்பகுதியில் புலிகள் – அரசு சமாதானப் பேச்சை முன்னின்று நடத்தியவருமான எரிக் சொல்ஹெய்ம்.

இந்தியாவின் ‘வியோன்’ சனல் என்று அழைக்கப்படும் ‘வேர்ள்ட் இஸ் வன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், வெள்ளைக்கொடி விவகாரத்தில் புலிகளின் மூத்த தலைவர்களான நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிகள் சரணடைவது அரசுக்கு நன்கு தெரியும். இவர்களின் சரணடைதல் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரான பஸில் ராஜபக்ஷவுக்குத் தெரியப்படுத்தினோம். நாங்கள் மட்டுமல்ல, சில முக்கியமான தமிழர்கள் மற்றும், நான் நினைக்கிறேன்… சில இந்தியத் தொடர்பாளர்கள் மூலமாகப் புலிகளும் இலங்கையின் அரசியல் தலைமைகளுக்குச் செய்தி அனுப்பினர்.

பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதும் தெரியாது. ஆனால், பிரபாகரனின் 12 அகவையுடைய மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டார் என்று எமக்கு மிக மிக உறுதியான சந்தேகம் உண்டு. இது இலங்கை இராணுவத்தின் பொறுப்பற்ற மிகத் தீய செயலாகும். துரதிர்ஷ்ட வசமாக, இலங்கை இராணுவம் ஏன் சரணடைய வந்தவர்களை ஏற்று அவர்களை நீதிமன்றின் முன்னிலையில் நிறுத்தாமல் கொலை செய்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று கூறினார்.

மேலும், இந்த நேர்காணலில் தலைவர் பிரபாகரன், கூட்டாட்சியை ஏற்கவில்லை என்றும், அவர் தொடர்பிலும் – அவருடனான தனது உறவு பற்றியும், இந்தியாவுக்கும் தமக்கும், இலங்கை தலைவர்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும், சமாதான விடயத்தில் தாம் எதிர்கொண்ட சவால்கள் – நெருக்கடிகள் தொடர்பிலும் – அக்காலத்தில் இந்தியாவின் பங்களிப்பு – தலையீடு பற்றியும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version