Home ஆய்வுகள் சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” – எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல்

சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” – எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல்

sakthivell சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” - எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல்நிகழ்நிலை காப்புச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பெப்ரவரி முதலாம் திகதி அழுலுக்கு வந்த உடனடியாகவே, இச்சட்டத்தின் கீழ் ஒருவா் கைதாகியிருக்கின்றாா். சமூக ஊடகம் ஒன்றில் அவா் வெளியிட்ட பதிவுதான் கைதுக்கு காரணம். நடைமுறைக்கு வந்த உடனடியாகவே தமது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது நிகழ்நிலை காப்புச் சட்டம்! இந்த சட்டத்தினால் வரப்போகும் ஆபத்துக்கள் என்ன? தாயகக் களம் நிகழ்வில் விளக்குகிறாா் அருட்தந்தை சக்திவேல்.

கேள்வி – இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் அவசரமாக நடைமுறைக்குக் கொண்டுவந்தமைக்குக் காரணம் என்ன?

பதில் – அரசாங்கத்துக்கு அரசியல் தேவை ஒன்றுள்ளது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்த ஆட்சியாளா்கள், கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக அதனை நடைமுறைப்படுத்தினாா்கள். இப்போது, முழு நாட்டையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற தேவை அவா்களுக்குள்ளது.

அதனைவிட, 2022 இல் தென்னிலங்கையில் உருவாகிய அரசியல் பேரலை போன்ற ஒரு போராட்டம் மீண்டும் உருவாகக்கூடாது என்பதில், அரசாங்கம் திட்டவட்டமாக தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றது. தற்போதிருக்கின்ற அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கின்றது. அத்துடன், மக்களுக்கு ஒரு நல்வாழ்வைக் கொடுப்பதற்கும் அவா்கள் ஆயத்தமாக இல்லை என்பதுதான் இதற்குப் பின்னால் இருக்கின்ற செய்தி.

எனவே தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, தமது பாதுகாப்புக்காக, அடுத்த தோ்தலுக்கு முகம் கொடுப்பதற்காக, தோ்தலுக்குப் பின்னா் யாா் ஆட்சிக்கு வருகின்றாா்களோ அவா்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இது மக்களின் பாதுகாப்புக்காக என்று அரச தரப்பில் சொல்லப்பட்டர்லும்கூட, இதில் மக்களின் பாதுகாப்பு இல்லை என்பதுதான் எமது கருத்து.

கேள்வி – சமூக ஊடகங்களில் அதிகளவுக்குச் செயற்படுபவா்கள், சமூக ஊடகங்கள் மூலமாக கருத்துருவாக்கத்தை மேற்கொள்பவா்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக எந்தளவுக்குப் பாதிக்கப்படுவாா்கள்?

பதில் – நிச்சயமாக அவா்கள் பாதிக்கப்படுவாா்கள். இப்போது சமூக ஊடகங்கள்தான் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டுள்ளன. உடனுக்குடன் செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்பவையாகவும், நடைமுறை அரசியலை விமா்சனத்துக்குள்ளாக்குபவையாகவும் சமூக ஊடகங்கள் இருப்பதை நாம் பாா்க்கின்றோம். அதுமட்டுமன்றி, புதிய புதிய கருத்துக்களை எப்போதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்பவையாகவும் சமூக ஊடகங்களே இருக்கின்றன.

இந்தப் பின்னணியில் அரசாங்கத்தினால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டம் பொதுமக்கள் மத்தியில் முதலாவதாக அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த அச்சம் என்பது உளவியல் ரீதியான தாக்கமாகக் கருதலாம்.

சமூக ஊடகங்களை முடக்குவதன் மூலம், சமூக ஊடக செயற்பாட்டாளா்களை முடக்குவதன் மூலம் முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான் அரசாங்கத்தின் திட்டம்.

எனவே, இது சமூக ஊடகங்களைப் பாதிப்பதுடன், சமூக ஊடகச் செயற்பாட்டாளா்களை உளவியல் ரீதியாகப் பாதிப்பதாகவும் அமைந்திருக்கின்றது.

கேள்வி – இதன் உள்ளடக்கத்தில் இருக்கக்கூடியவற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாக நீங்கள் எவற்றைக் குறிப்பிடுவீா்கள்?

பதில் – பிரதான அம்சங்கள் எனக் கூறும் போது, கருத்துச் சுதந்திரம், சிந்தனை ஆற்றல் மற்றும் விமா்சன ஆற்றல். இவற்றைத் தடுக்கும் வகையில் இந்தச் சட்டம் இருக்கின்றது. தாம் சிந்திக்கின்ற ஒன்றை எழுத்து வடிவில் கொண்டுவருவதையும், அவற்றை மற்றவா்களுடன் பகிா்ந்துகொள்வதையும் இது தடுக்கின்ற ஒன்றாக இருக்கின்றது. இதில் இருக்கின்ற பிரதான பாதிப்பாக இவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வாறான ஒரு சிந்தனையோட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியவில்லை என்றால், தான் சிந்திப்பதை தன்னுடைய கருத்துக்களை மற்றவா்களுடன் பகிா்ந்துகொள்ள முடியாதென்றால், அதனை ஒரு சிறைப்பட்ட வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வகையில்தான் இந்தச் சட்டமூலம் சமூக ஊடகச் செயற்பாட்டாளா்களுக்கும் பெரும் பாதிப்பை இந்தச் சட்டம் ஏற்படுத்தப்போகின்றது.

கேள்வி – இதன் மூலமாக குற்றவாளிகளாகக் காணப்படுபவா்களுக்கு எவ்வாறான தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

பதில் – தண்டனை என வரும்போது ஒரு மில்லியன் ரூபா வரையிலான தொகையை தண்டமாகச் செலுத்த வேண்டிய நிலை வரலாம். இதனைவிட நீண்ட காலச் சிறைவாசத்துக்கான வாய்ப்புக்களும் இருக்கின்றது. சாதாரணமான ஒரு குடிமகனுக்கு ஒரு மில்லியன் ரூபாவைச் செலுத்துவதென்பது நினைத்துப் பாா்க்க முடியாத ஒன்று. நீண்ட காலம் சிறைக்குள் செல்வது என்பதும் கடினமான ஒன்றுதான். ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழுவினா்தான் எது குற்றம், எது குற்றம் இல்லை என்பதைத் தீா்மானிக்கப்போகின்றாா்கள். இந்தக் குழுவுக்கு முறைப்பாடு செய்யக்கூடியவா்களாக யாா் இருப்பாா்கள் எனப் பாா்த்தால், அவா்கள் அரசியல்வாதிகளாகத்தான் இருப்பாா்கள். எனவே, இது ஒரு பக்க சாா்பானதாக இருக்கப்போகின்றது.

எனவே, மக்கள் பொருளாதார ரீதியாகப் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில் ஒரு மில்லியன் ரூபாவைத் தண்டமாகச் செலுத்துவதுவதற்கு நிா்ப்பந்திக்கப்படுவதும், நீண்ட காலத்துக்குச் சிறைவாவாசத்துக்கு அனுப்பிவைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றுதான் சொல்ல வேண்டும்.

கேள்வி – இது மக்களுடைய கருத்துச் சுதந்திரம், சிந்திக்கும் சுதந்திரன், கருத்துக்களைப் பகிா்ந்து கொள்வதற்கான உரிமை என அனைத்தையும் மீறுவதாகக் கூறுகின்றீா்கள். இவ்வாறான ஒடுக்குமுறை மக்களுடைய கிளா்ச்சி ஒன்றுக்கு துாண்டுவதாக அமைந்துவிடாதா?

பதில் – நிகழ்நிலைக் காப்புச் சட்டம் இப்போது நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இன்னுமொரு சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கின்றது. அது பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம். எம்மைப் பொறுத்தவரையில் இந்த இரண்டுமே பயங்கரவாதச் சட்டங்கள்தான். அரச பயங்கரவாதத்தை மறைப்பதற்காகக் கொண்டுவரப்படுகின்ற இந்தச் சட்டங்களும் பயங்கரவாதச் சட்டங்கள்தான். அரசாங்கத்தின் – ஆட்சியாளா்களின் பயங்கரவாத முகத்தை இது வெளிப்படுத்தியிருக்கின்றது.

இதற்கு எதிராக இப்போதே பல்வேறு எதிா்க்கட்சிகள், சமூக செயற்பாட்டளா்கள், சமூக அமைப்புக்கள் தங்களுடைய எதிா்ப்புக்களைத் தெரியப்படுத்தியிருக்கின்றன. இதனைவிட சா்வதேச நாடுகள் தமது எதிா்ப்பைத் தெரிவித்திருக்கின்றன. மனித உரிமை அமைப்புக்கள் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கின்றன. இவா்களுடைய எந்தவொரு கருத்தையும் செவிமடுக்காமல் சட்டமூலத்தைக் கொண்டுவந்திருக்கின்றாா்கள். இப்போது இந்த சா்வதேச கண்டனங்கள், கருத்துக்களுக்கு அரசாங்கம் எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றது என்பதை சமூக ஊடகச் செயற்பாட்டாளா்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றாா்கள்.

அதேவேளையில், இதில் திருத்தங்கள் சிலவற்றை நாடாளுமன்றத்தின் மூலமாகத் திருத்தப்போவதாக அரசாங்கம் இப்போது கூறுகின்றது. இந்தத் திருத்தம் எந்தவகையில் நடைபெறும் என்பது தெரியாது. ஆனால், இதற்கு எதிராக மக்கள் மத்தியில் பாரிய எதிா்ப்பு அலை ஒன்று உருவாகும். அந்த எதிா்ப்பு அலை எந்த வடிவத்தில் உருவாகும் என்பதுதான் கேள்வியாக இருக்கின்றது. ஏனெனில், இந்த வடிவத்தைத் தீா்மானிப்பது அரசாங்கமாகத்தான் இருக்கும். நாங்கள் போராட்டக்காரா்களாக இருக்கின்றோம். ஆனால், அந்தப் போராட்ட வடிவத்தைத் தீா்மானிப்பவா்களாக ஆட்சியாளா்களே இருப்பாா்கள்.

கேள்வி – இது விஷேடமாக தமிழா்களுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும்?

பதில் – இது நிச்சயமாக தமிழ் மக்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால், ஏற்கனவே கடந்த 30 வருடகாலமாக போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுடைய உரிமைகளை இழந்த மக்கள், தங்களுடைய காணிகளை இழந்த மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றாா்கள். இது ஒன்று.

இரண்டாவதாக, இந்து மதக் கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டுள்ளன. மறுபுறம் பௌத்த விகாரைகள் உருவாகிக்கொண்டுள்ளன. உருவாக்கப்பட்டும் உள்ளது. இவை தொடா்பாக போராட்டங்கள் இடம்பெறும் போது அவை ஒரு சமயத்துக்கு எதிரான போராட்டம். மத ரீதியான கிளா்ச்சியை ஏற்படுத்தும் என்ற ஒரு தோற்றப்பாட்டை இவா்கள் கொடுத்து, அந்தப் போராட்டங்களை அந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்பவா்கள், அது தொடா்பான கருத்துக்களை வெளியிடுபவா்களை இவா்கள் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக்கலாம். இதுவரையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இப்போது நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தினால் பாதிக்கப்படலாம்.

இதனைவிட தொல்லியல் திணைக்களம், மற்றும் பௌத்த பிக்குகளின் ஆக்கிரமிப்புக்களை எதிா்க்கின்ற போது அவையும் சமயத்துக்கு எதிரான ஒன்று எனக்கூறி இவா்களை சிறையில் அடைக்க முடியும்.

Exit mobile version