Tamil News
Home செய்திகள் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 66 பேர் தடுத்துவைப்பு 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் விசாரணை

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 66 பேர் தடுத்துவைப்பு 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை நடத்திய நபர்களுடன் தொடர்புகளை மேற்கொண்ட 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 7 பெண் சந்தேக நபர்கள் உட்பட 66 பேர் தற்பொழுது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, கடந்த ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகள் வேறு நபர்களுடன் நடத்திய தொலைபேசி அழைப்புக்களின் அடிப்படையில் இந்த இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 7 பெண் சந்தேக நபர்கள் உட்பட 66 பேர் தற்பொழுது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2 பெண்கள் உட்பட 21 சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

தற்கொலை தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளது 1800க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் குறித்து பரிசீலனை நடத்தப்பட்டு வருகின்றது.

பயங்கரவாதிகள் மற்றும் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களின் விபரங்களையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது வெளியிட்டார்.

இதன்படி 142 சிம் அட்டைகள், 23 மடி கணினிகள், 03 கணினிகள், 138 கையடக்கத் தொலைபேசிகள், 30 வன்தட்டுக்கள், 12 பென்டிரைவ், 67 இருவட்டுக்கள் என்பன இவ்வாறு கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

Exit mobile version