Tamil News
Home உலகச் செய்திகள் கல்வான் தாக்குதலில் 5 பேர் மரணம்: முதல் முறையாக ஒப்புக் கொண்ட சீனா

கல்வான் தாக்குதலில் 5 பேர் மரணம்: முதல் முறையாக ஒப்புக் கொண்ட சீனா

சீனாவின் அரசு நாளிதலான குளோபல் டைம்ஸ், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் அதிகாரபூர்வ நாளிதழ் பி.எல்.ஏ டெய்லியை மேற்கோள் காட்டி, சீனா முதல் முறையாக கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களைக் குறிப்பிட்டிருக்கிறது.

சீனாவின் மத்திய இராணுவ ஆணையம், காரகோரம் மலைத் தொடரில் ஐந்து சீன இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களைக் அடையாளம் கண்டு கெளரவித்திருக்கிறது என பி.எல்.ஏ டெய்லி பத்திரிகையில் இன்று குறிப்பிட்டுள்ளது.

முதல் முறையாக சீனா கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதல் தொடர்பாக அவ்வறிக்கையில் விரிவாக விளக்கம் கொடுத்திருக்கிறது.

அதோடு இந்திய இராணுவம் எப்படி அதிக அளவில் துருப்புகளை அனுப்பியது என்றும், இந்திய துருப்புகள் மறைந்து கொண்டு சீன இராணுவத்தை பின்வாங்கக் கட்டாயப்படுத்தியது எனவும் குறிப்பிட்டிருக்கிறது.

கடந்த 2020 ஜூன் 15-ல் கிழக்கு லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இந்தியா மற்றும் சீன துருப்புகளுக்கு இடையில் ஒரு பெரிய கைகலப்பு நடந்தது.

கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியா சீன எல்லை விவகாரத்தில் நடந்த மிகப் பெரிய கைகலப்பு அது. இதில் 20 இந்திய இராணுவ வீரர்கள் இறந்து போனார்கள். இந்தியா தன் தரப்பில் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்பு குறித்த விவராங்களை அப்போதே வெளியிட்டது. ஆனால் சீனா தன் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு கைகலப்பில் ஐந்து வீரர்கள் இறந்திருப்பதை தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறது சீனா.

நன்றி -பிபிசி

Exit mobile version