Tamil News
Home செய்திகள் கப்டன் பண்டிதா் – இன்று நினைவு தினம்

கப்டன் பண்டிதா் – இன்று நினைவு தினம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெற்றது.

அச்சுவேலியிலுள்ள எமது கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள இராணுவப் படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை வீரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் மத்தியில், பயங்கரச் சண்டை மூண்டது. நீண்ட நேரமாக நடைபெற்ற இச்சண்டையில் கப்டன் ரவீந்திரன் இறுதிவரை போராடி, விடுதலை இலட்சியத்திற்காகத் தனது உயரைத் தியாகம் செய்தார். கப்டன் ரவீந்திரனுடன் நான்கு இளம்புலிகள் வீரமரணம் அடைந்தனர். ஏனைய போராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பினர்.

கப்டன் ரவீந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராவார். அத்துடன் புலி இயக்கத்தின் நிதியமைப்பிற்கும் ஆயுதப் பராமரிப்பிற்கும் பொறுப்பாக இருந்தார்.

வல்வெட்டித்துறைக்கு அருகேயுள்ள கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவருக்கு வயது 24. 1977ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இயக்க வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். கடமையுணர்வு, கடும் உழைப்பு, இலட்சியப்பற்று ஆகிய சீரிய பண்புகள் நிறைந்த கப்டன் ரவீந்திரன், விடுதலைப் போராளிகளின் அன்புக்கும் மதிப்பிற்கும் பாத்திரமாக விளங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராக, அவரது வலது கையாகத் திகழ்ந்தார். இயக்க நிர்வாகப் பொறுப்புக்களைச் சுமந்து வந்ததோடு மட்டுமல்லாது, கெரில்லாத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் இவர் பங்குபற்றி வந்தார்.

அச்சுவேலியிலுள்ள சிறிய கெரில்லாத் தளமொன்றே இம்முற்றுகைக்கு இலக்காகியது. அதுவும் 500ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கனரக ஆயுதங்களுடன், எமது 15 கெரில்லா வீரர்களைத் திடீரென – எதிர்பாராமல் சூழ்ந்து கொண்டனர். இந்தச் சண்டையில் 10 புலிக் கெரில்லா வீரர்கள் வீரமுடன் போராடி முற்றுகை அரண்களை உடைத்துக் கொண்டு மீண்டாா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கப்டன் பண்டிதர் (இளங்கோ)

சின்னத்துரை ரவீந்திரன்

கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரப்பிறப்பு:25.12.1959

வீரச்சாவு:09.01.1985

Exit mobile version