Home செய்திகள் கட்சி தாவிய எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – பொது ஜன பெரமுன தீா்மானம்

கட்சி தாவிய எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – பொது ஜன பெரமுன தீா்மானம்

WhatsApp Image 2024 04 10 at 10.24.45 AM கட்சி தாவிய எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - பொது ஜன பெரமுன தீா்மானம்கட்சியின் ஒழுக்கத்தை மீறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை ஒழுக்காற்றுக் குழுவுக்கு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி, வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள மற்றும் உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரசியல் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் அரசியல் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பொதுஜன பெரமுனவில் வெற்றிடமாகக் காணப்படும் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளுக்கு விரைவில் பொருத்தமானவர்களை நியமிக்கவும் அதன் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, அனைத்து மாவட்டங்களுக்கும் மகளிர் ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பதற்கும் அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடி ஆராய்ந்தது.

Exit mobile version