Home ஆய்வுகள் இஸ்லாமிய கடும்போக்கு செயற்பாடுகளை இலங்கை புலனாய்வுத்துறையே திட்டமிடுகின்றது – மட்டு.நகரான்

இஸ்லாமிய கடும்போக்கு செயற்பாடுகளை இலங்கை புலனாய்வுத்துறையே திட்டமிடுகின்றது – மட்டு.நகரான்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல்வேறு கருத்துருவாக்கங்கள் தற்போது வெளியிடப்பட்டுவருகின்றன. பல்வேறு சந்தேகங்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள்,சந்தேகங்கள் போன்றவற்றினை யாராவது இலகுவில் கடந்துசெல்வதற்கு முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

1586875007 easter 2 இஸ்லாமிய கடும்போக்கு செயற்பாடுகளை இலங்கை புலனாய்வுத்துறையே திட்டமிடுகின்றது - மட்டு.நகரான்குறிப்பாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் என்பது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல், உலக நாடுகளை எச்சரிப்பதற்காகவும் இலங்கை அரசாங்கத்தினை எச்சரிப்பதற்காகவும் பௌத்தர்களை எச்சரிப்பதற்காகவும் நடாத்தப்பட்ட தாக்குதல் என்று பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும் இந்த தாக்குதல் மட்டக்களப்பில் நடாத்தப்பட்டமையானது இந்த நாட்டில் இனவாத முதலீடை கொள்வதற்காகவே என்பதை அன்றே தமிழர்கள் புரிந்துகொண்டார்கள்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மூலம் இந்த நாட்டில் மற்றுமொரு சிறுபான்மை சமூகம் அடக்கப்பட்டதுடன் பெரும்பான்மையினம் தனது கோரமுகத்தினை தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருந்தது.

உண்மையில் உணர்வுரீதியான விடயங்களை விதைத்து இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்தினை பெரும்பான்மை சமூகத்தினையும் பிரித்தாளும் தந்திரமும் சிறுபான்மை இனங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்படும் பிரித்தாளும் தந்திரங்களும் காலத்திற்கு காலம் வெற்றிபெறவே செய்கின்றது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலானது கிழக்கில் பிள்ளையானையும் தெற்கில் கோத்தபாயவினையும் அரியாசனம் ஏற்றியது.ஈஸ்டர் தாக்குதலானது கிழக்கில் அதிலும் மட்டக்களப்பில் இரண்டு அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கியது. இதற்கான பிரதான காரணமாகயிருந்தது ஈஸ்டர் குண்டுத்தாக்குதலும் அதன் மூலமாக சிறுபான்மை சமூகத்திற்குள்ளும் சிறுபான்மை –பெரும்பான்மை சமூகத்திற்குள் முன்னெடுக்கப்பட்டுவந்த இனவாத பிரசாரங்களுமே காரணமாக அமைந்தன.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் இலங்கையில் இனவாத பிரசாரங்களுக்கும் இனங்களிடையே குரோதங்களை ஏற்படுத்தி சுயலாபம் தேடும் முயற்சிகளும் தொடர்ச்சியாகவே முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்பதை நாங்கள் கடந்த காலத்தில் பல்வேறு கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.
கிழக்கில் இந்த நிலைமையானது யுத்தகாலத்தில் கடுமையானதாகயிருந்தது. கிழக்கில் உள்ள தமிழர்களையும் முஸ்லிம்களையும் எதிரிகளாகவே மாற்றிவைத்திருந்தனர். அதன்மூலம் தெற்கில் தங்களது அரசியலையும் முஸ்லிம்கள் மூலமும் தமிழர்களிலிருந்த அதிர்ப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சூழ்நிலையும் பெரும்பான்மையின சிங்கள பௌத்த அரசுகளிடமிருந்துவந்தது.

யுத்தம் மௌனிக்கப்பட்டன் பின்னர் இந்த நிலைமையானது மாறுபட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.அரசியல் ரீதியாக இரு இனங்களையும் மோதவிடுதல், இனங்களிடையே அபிவிருத்தி தொடர்பில் வேறுபாடுகளை ஏற்படுத்தல் என பல்வேறு வழிகளை கையாண்டுவந்த அரசுகள் இறுதியாக எடுத்துக்கொண்ட விடயமே ஈஸ்டர் குண்டுத்தாக்குதலாகும்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் குறித்து பல்வேறு கருத்துகளும் தகவல்களும் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பில் பிள்ளையானும் தெற்கில் கோத்தபாயவும் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளமையானது பல்வேறு சந்தேகங்களையும் அனைத்துதரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தேர்தல்கள் இந்த நாட்டில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் இவ்வாறான புத்தகங்கள் வெளியிட்டுள்ளமையானது எதிர்காலத்தில்இனங்களிடையே விரிசல்களை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளாகயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.அதிலும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பிள்ளையானும் கோத்தபாயவும் இந்த புத்தகத்தினை வெளியிட்டுள்ளமை கிழக்கு தமிழர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கிழக்கில் முஸ்லிம் எதிர்ப்பினை வைத்து தமது அரசியலை வளர்க்கமுற்படும் பிள்ளையானின் செயற்பாடுகள் குறித்து இங்கு வெளிப்படுத்தவேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.அரசியலுக்காக முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பினை வெளிக்காட்டும் பிள்ளையான் தமது சொந்த தேவைகளுக்காகவும் தமது கஜானாவினை நிரப்புவதற்காகவும் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் பலர் அறியாத விடயங்கள் பல உள்ளன.

குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் இருந்தபோது வாகரை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அப்போதைய அமைச்சராகயிருந்த ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்டது.இதற்கு பின்னணியாகயிருந்து அவருக்கு காணியை வழங்கியவர் பிள்ளையான்.ஆனால் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் அந்த பல்கலைக்கழகத்தினை வைத்து இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்தவரும் இந்த பிள்ளையான்தான்.

இதேபோன்று தமிழர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அக்காலப்பகுதியில் இஸ்லாமிய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது. இவற்றிற்கெல்லாம் பின்னணியாகயிருந்து செயற்பட்டவர் இந்த பிள்ளையானாகும்.

பிள்ளையானின் கட்சிகளில்மிக பொறுப்புமிக்க பதவிகளை வகித்து உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ள அசாத் மௌலான என்பவர் வழங்கிய வாக்குமூலங்கள் பிள்ளையானை இலங்கை சிங்கள பௌத்தபேரினவாதம் எவ்வாறு பயன்படுத்திவருகின்றது என்பது புலனாகின்றது.

இலங்கையினைப்பொறுத்த வரையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் என்பது மட்டு தமிழர்களின் உரிமைக்காக நடாத்தப்பட்டபோராட்டமாகயிருக்கின்றது. ஏனைய அனைத்தும் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தினை மழுங்கடிப்பதற்காகவும் சிறுபான்மை மக்களிடையே ஒற்றுமையினை சீர்குலைப்பதற்காகவும் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளாகவே பார்க்கப்படுகின்றது.

கிழக்கினைப்பொறுத்த வரையில் இங்கு வளர்க்கப்படும் இஸ்லாமிய வாபிஸ கொள்கை, இஸ்லாமிய கடும்போக்கு செயற்பாடுகள் என்பது எல்லாம் வேறு எங்கும் திட்டமிடப்படுவது அல்ல. இவை முற்றுமுழுதாக இலங்கை புலனாய்வுத்துறை மூலமே திட்டமிடப்பட்டு கொண்டுவரப்படுகின்றது. இவற்றினை பரவலாக்கல் செய்யும் செயற்பாடுகளை பிள்ளையான் போன்றவர்களை வைத்து அரசுகள் செய்கின்றது. அதற்காகவே பிள்ளையான் போன்றவர்களை செல்லப்பிள்ளைகளாக வளர்த்துவிடப்படுகின்றார்கள்.

இதனை கிழக்கில் உள்ள தமிழர்கள் புரிந்துகொள்வது மிக முக்கியமாகும்.
கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கைகளை விதைத்து தாங்கள் முன்னெடுத்த குற்றச்செயல்களை மறக்கச்செய்யலாம் என்று முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தமிழர்கள் உணர்ந்துகொள்ளும்போதே இவ்வாறான வேடதாரிகளின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இல்லாமல்போகும்.

தற்போது தேர்தலுக்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனால் எதிர்காலத்தில் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது.அதன் ஆரம்பமே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான புத்தக வெளியீடாகவுள்ளது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் மகிந்த குடும்பத்தின் மீதும் பிள்ளையான் மீதும் இலங்கை புலனாய்வுத்துறை மீதும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்துஇதுவரையில் எந்தவிதமுறையான விசாரணைகளும் முன்வைக்கப்படவில்லை.

இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் இன்று உயர்பதவிகளில் உள்ளனர். அவ்வாறான நிலையில் எவ்வாறு அவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற சந்தேகம் உள்ளது.

இந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானா வெளியிட்டுள்ள தகவல்கள் பொய்யா இருப்பதற்கான சாத்தியம் இல்லையென அண்மையில் கருணா குறிப்பிட்டிருந்தார். அவர் அவ்வாறு குறிப்பிட்டதை யாரும் வெறும் கருத்து என்று மறுத்துச்செல்லமுடியாத நிலையுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கான அழுத்தங்கள் என்பது தற்போது இலங்கையிலும் சர்வதேச ரீதிலும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் மௌனிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் மீண்டும் கிழக்கில் இனமுறுகல்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் கிழக்கினைப்பொறுத்த வரையில் பிள்ளையான் போன்றவர்கள் வெளியிடும்,வெளிப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் எதிர்காலத்தில் அவதானமாக செயற்படவேண்டியது அவசியமாகும். கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன் வாழும்போது வடகிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்டுவாழமுடியும்.

Exit mobile version