Home ஆய்வுகள் ஐ.நா தீர்மானத்தை பலப்படுத்த வேண்டிய தேவை ஒன்று எமக்குண்டு – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஐ.நா தீர்மானத்தை பலப்படுத்த வேண்டிய தேவை ஒன்று எமக்குண்டு – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தமிழ் மக்களிடம் ஏற்பட்டுவரும் ஒருங்கிணைவு எமது விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்து வருவதை அண்மைக்காலமாக காண முடிகின்றது. ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை’ என சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு எதிராக சிறீலங்கா அரசு அதிகளவான தடைகளை ஏற்படுத்தி, மிரட்டல்களை விடுத்திருந்ததுடன், சிறீலங்காவின் கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகங்களும் அதனை இருட்டடிப்பு செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தன.

சிறீலங்கா அரசு சார்ப்பு ஊடகங்களின் இந்த புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனாவும் கேள்வி எழுப்பியிருந்தார். அது மட்டுமல்லாது போராடுவது மக்களின் உரிமை எனவும் அவர் தெரிவிக்கத் தவறவில்லை.

இந்த போராட்டத்திற்கு உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர் தமிழ் சமூகம் தனது ஆதரவுகளை வழங்கி பேராட்டங்களை முன்னெடுத்த போதும், சுவிஸ் நாட்டில் உள்ள சைவ ஆலயங்கள் அதில் இணைந்து கொண்டது எமக்கு ஒரு செய்தியை கூறியுள்ளது. அதாவது எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் அந்தந்த நாடுகளில் உள்ள ஆலயங்கள், சமூக அமைப்புக்கள், பாடசாலைகள், வர்த்தக அமைப்புக்கள் என எல்லாவற்றையும் நாம் இணைப்பதன் மூலமே அந்த அந்த நாடுகளின் கவனத்தை ஈர்க்க முடியும்.

அதற்கு சிறந்த உதாரணமாக பிரித்தானியாவில் உள்ள அமைப்புக்கள், வர்த்தக மையங்கள், ஆலயங்கள், பாடசாலைகள் என 514 அமைப்புக்கள் இணைந்து கையொப்பமிட்டு, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரித்தானியா காத்திரமான தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்ற கடிதத்தை பிரித்தானிய பிரதமருக்கு அனுப்பியுள்ளதை குறிப்பிடலாம்.

இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் தொடர்பில் சிறீலங்கா அரசு தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள அதேசமயம், தமிழ் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் தென்னிலங்கை ஊடகங்கள் தற்போது சிறீலங்காவுக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவரும் மேற்குலக நாடுகள் மீது சேறடிக்கும் பணியையும் ஆரம்பித்துள்ளன.

கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் தற்போது காலனித்துவ ஆட்சியில் பிரித்தானிய படையினர் இந்தியாவில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களையும் தேடி எடுத்து எழுதுகின்றன.

அதேசமயம், தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு தேவையான நாடுகளின் ஆதரவுகளை திரட்டுவதற்கு சிறீலங்கா அரசு தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. எதிர்வரும் வாரம் சிறீலங்கா வரும் பாகிஸ்தான் பிரதமர் ஊடாக அரபு நாடுகள், சீனா மற்றும் ரஸ்யாவின் ஆதரவுகளை பெறுவதற்கும் அது முயற்சி செய்கின்றது. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குப் பகுதி கொள்கலன் கையாளும் விவகாரத்தில் இந்தியா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளை இழந்த சிறீலங்கா, தற்போது பாகிஸ்தானை அணுகியுள்ளது.

imran khan212 1576741346 ஐ.நா தீர்மானத்தை பலப்படுத்த வேண்டிய தேவை ஒன்று எமக்குண்டு - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

அதற்கு அமைவாகவே கோவிட்டினால் இறந்த முஸ்லீம் மக்களின் உடல்களை புதைப்பதற்கும் சிறீலங்கா அரசு தற்போது சம்மதித்துள்ளது.

அது மட்டுமல்லாது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான போராட்டத்தில் தமிழ் மக்களுடன் முஸ்லீம் மக்கள் இணைந்தது தொடர்பில் அதிர்ச்சியடைந்த அரசு தற்போது அதனை தடுக்கும் நோக்கத்துடன் இந்த தடை நீக்கத்தை மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சிறீலங்கா இடையே பல விடயங்களில் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் முற்றான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. பாகிஸ்தானின் 2020 ஆம் ஆண்டு கடன் சுமை 270 பில்லியன் டொலர்கள், இது அதன் மொத்த வருமானத்தில் 106 விகிதம் சிறீலங்காவின் கடன் தொகை 51 பில்லியன் டொலர்கள் இது அதன் மொத்த வருமானத்தில் 98 விகிதம். சிறீலங்காவை போலவே சீனாவின் கடன் சுமையில் தான் பாகிஸ்தான் தப்பி பிழைத்து வருகின்றது. 62 பில்லியன் டொலர் கடன் பரிமாற்றம் மற்றும் வர்த்தக பிணைப்புக்களை இரு நாடுகளும் கொண்டுள்ளன.

எனவே தான் உகுர் இன முஸ்லீம் மக்களுக்கு எதிராக சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் பாகிஸ்தான் மௌனம் காத்து வருகின்றது.

இதனிடையே, உகுர் இன மக்களுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மறுசீரமைக்கப்பட வேண்டும் அதன் மூலம் தான் அது தனது இலக்கை அடைய முடியும் எனவும் அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிங்கன் கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.

பைடன் தலைமையிலான அரசு மீண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணைவதுடன், அதனை வழிநடத்துவதில் முன்நிற்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், கனடா, ஜேர்மனி, வட மசெடோனியா மற்றும் மொன்ரோநீக்ரோ ஆகிய உறுப்பு நாடுகளுடன் இணைந்து புதிய தீர்மானம் ஒன்றை சிறீலங்கா விவகாரம் தொடர்பில் கொண்டுவரவுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானமும் இந்த நாடுகளால் தான் கொண்டுவரப்பட்டிருந்தது.

ஆனால் இந்த முறை கொண்டுவரப்படும் தீர்மானம் பெரும்பாலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் சரத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதையும் பிரித்தானியா கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஆணையாளரின் அறிக்கையில், சிறீலங்காவுக்கான பரிந்துரைகள், உறுப்பு நாடுகளுக்கான பரிந்துரைகள் மற்றும் அனைத்துலக சமூகத்திற்கான பரிந்துரைகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பயணத்தடை, பொருளாதார முடக்கம், ஐ.நா அமைதிப்படையில் சிறீலங்கா படையினரை இணைப்பதை மீளாய்வு செய்தல் என்பன உள்ளடங்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

ஆனால் சபையில் வாக்களிக்கும் நாடுகள் தமது நாடுகளின் நலன்களின் அடிப்படையில் தான் வாக்களிப்பதுண்டு. தீர்மனாத்தை கொண்டுவருபவர்களும் தமது நலன்கள் சார்ந்தே அதன் மீதான அக்கறைகளை செலுத்துவதுண்டு. ஏனைய நாடுகளை கட்டுப்படுத்தும் ஒரு மென்மையான ஆயுதமாக அவர்கள் அதனை பயன்படுத்துவதுண்டு.

எனவே 47 நாடுகளை கொண்ட இந்த சபையில் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு 24 நாடுகளின் ஆதரவுகள் தேவை தற்போது கிடைக்கப்பட்ட உள்ளகத் தகவல்களின் அடிப்படையில் 17 நாடுகளின் ஆதரவுகள் உண்டு, எனவே மேலும் குறைந்தது 7 நாடுகளின் ஆதரவுகள் தேவை. அதனை திரட்டுவதே தற்போது தமிழ் மக்களின் முதன்மையான பணியாக உள்ளது.

நாம் ஒன்றை கவனிக்க வேண்டும், தீர்மானத்தை முன்வைக்கவுள்ள இணைக்குழு நாடுகளில் உள்ள கனடா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் பெருமளவான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் அந்த நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளிலும் பங்கெடுக்கின்றனர். எனவே இந்த நாடுகள் மூலம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உள்ள உறுப்பு நாடுகளுக்கு தீர்மானத்தை ஆதரிக்குமாறு அழுத்தங்களை நாம் மேற்கொள்ளலாம்.

அதேசமயம் நேரிடையாகவும் உறுப்பு நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு எமக்கான நீதி கோரலுக்கு உதவிகளை வழங்குமாறு கோரிக்கைகளை விடுக்கலாம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் உடனடியான தீர்வோ அல்லது நீதியோ கிடைக்குமா என்பதற்கு அப்பால் எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை வலுவாக பலப்படுத்தி நகரவேண்டிய தேவை ஒன்று எமக்கு முன் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஐ.நா சபையோ அல்லது அதன் அமைப்புக்களோ பல விடயங்களை அதனை வழிநடத்தும் நாடுகள் சார்ந்து மேற்கொண்டு வருகின்றபோதும், காலத்துக்கேற்ப மாறிவரும் பூகோள நிலமை அவர்களின் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதுண்டு. அதன் மூலம் பல புதிய நாடுகள் உருவாகிய வரலாறுகளையும் நாம் அறிவோம்.

தற்போது சிறீலங்காவுக்கு எதிரான புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ள இணைத்தலைமை நாடுகளின் குழுவில் உள்ள மொன்ரோநீக்குரோவும் அவ்வாறான பூகோள அரசியல் மாற்றம் ஊடாக உருவாகிய புதிய நாடு தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

Exit mobile version