Home செய்திகள் எங்களது உறவுகளைத் தேடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது-அ.அமலநாயகி

எங்களது உறவுகளைத் தேடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது-அ.அமலநாயகி

“எங்களது உறவுகளை தேடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது,எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது“ என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

மேலும் வீதியோரங்களில் இருந்து தங்களது உறவுகளை தேடமுடியாத நிலையிலேயே தாங்கள் இன்று கண்ணீர்விட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

IMG 0224 எங்களது உறவுகளைத் தேடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது-அ.அமலநாயகி

மட்டக்களப்பு,மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் புதன்கிழமை ஆரம்பமான போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.

 

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப் போவதில்லையெனவும் சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்தப்பட்டு தமக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தில் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள், வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்,தமிழரசுக்கட்சியினன் வாலிப முன்னணி தலைவர் கி.சேயோன்,தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி உறுப்பினர் திருமதி ரஜனி பிரகாஸ் மற்றும் வாழைச்சேனை பிரதேசசபையின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version