Tamil News
Home செய்திகள் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக சபாநாயகர் செயற்பட்டார் – சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக சபாநாயகர் செயற்பட்டார் – சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

அரசியலமைப்பின் 123 (4) இன் பிரகாரம், ஏதேனும் சட்டமூலம் அல்லது ஏதேனும் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்பிற்கு ஒவ்வாததாக உள்ளதெனத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றவிடத்து,அல்லது தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுமிடத்து,அத்தகைய சட்டமூலம் அல்லது அத்தகைய ஏற்பாடு உயர்நீதிமன்றத்தின் தீர்மானிப்பில் கூறப்பட்டுள்ள முறையில் தவிர, நிறைவேற்றப்படுதல் ஆகாது என குறிப்பிடப்பட்டுள்ளது.உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் மூலம் இச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் 9 சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு முரணாக தமது சொந்த தேவையின் நிமித்தம் நிறைவேற்றும் செயலில் ஈடுபட்டனர். அவ்வாறான குறைபாடு ஏற்பட்டுள்ளதாக சபாநாயகரும் ஒப்புக்கொண்டார். நிகழ்நிலை காப்பு சட்டம் இந்த சபையில் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு நடக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபாநாயகருக்கு சரியான அறிவுரைகளை வழங்குவது அதிகாரிகளினதும் பொறுப்பாகும். இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும். எனவே இந்த குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Exit mobile version