Home ஆய்வுகள் உச்சத்தில் சவால்கள் – துரைசாமி நடராஜா

உச்சத்தில் சவால்கள் – துரைசாமி நடராஜா

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.இவ்வாண்டின் முதல் பத்து மாத காலத்துக்குள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

child Gaza உச்சத்தில் சவால்கள் - துரைசாமி நடராஜாஇதேவேளை கடந்த இரண்டு வருட காலத்துக்குள் 16 அப்பாவி சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.இந்நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் நாம் நோக்குகையில் அண்மைகாலமாக மலையக பகுதிகளிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.அத்தோடு சில சிறுமிகள் பாடசாலைக் காலத்திலேயே கர்ப்பம் தரித்துள்ள விரும்பத்தகாத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலைமை மிகவும் பாரதூரமானதாகும் என்பதோடு சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரையும் சார்ந்ததாகும்.

எந்தவொரு நாட்டைப் பொறுத்த வரையிலும் சிறுவர்கள் முக்கியத்துவம் மிக்கவர்களாக விளங்குகின்றனர்.சிறுவர்களின் பல்துறைசார் அபிவிருத்தியில் குடும்பம் காத்திரமான பங்களிப்பினை வழங்குகின்ற நிலையில் அரசாங்கமும் பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.நாட்டிற்கு பொருத்தப்பாடுடைய, சிறந்த ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட சிறுவர்களை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை காணப்படும் நிலையில் இதனை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு முனைதல் வேண்டும்.

இதனிடையே உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் நெருக்கீடுகள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றார்கள்.போர் உள்ளிட்ட நடவடிக்கைகள் சிறுவர்களை வெகுவாக பாதித்து வருகின்றன.போர் நடவடிக்கைகளுக்கு சிறுவர்கள் அதிகளவில் உள்ளீர்க்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற அதேவேளை போர் நடவடிக்கைகளில் சிக்குண்டு அப்பாவி சிறுவர்கள் பலர் உயிரிழக்கும் அபாயமும் இடம்பெற்று வருகின்றது.குறிப்பாக கடந்த ஒக்டோபர் முதல் இஸ்ரேலிய படையினர் காசாவில் நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 5500 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 13,300 க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இஸ்ரேலிய தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள்  பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை நடந்த குண்டுத் தாக்குதலின் அடிப்படையில் காஸாவில் ஒவ்வொரு மணிநேரமும் 6 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாவதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.300 க்கும் அதிகமான சிறுவர்களின் கல்வி நிலையங்களும் குண்டுத் தாக்குதலினால் அழிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகின்றது.

இதேவேளை இலங்கையிலும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு குறைவில்லை.இங்குள்ள சிறுவர்கள் வெவ்வேறு வடிவங்களில் சவால்களை அன்றாடம் எதிர்கொண்டு வருகின்றார்கள்.

கொரோனாவுக்கு பிந்திய காலகட்டம் போஷாக்கு ரீதியாக சிறுவர்களை பாதிப்படைய செய்துள்ளது.இலங்கையில் கடந்த 2021 ம் ஆண்டில் 12.2 சதவீதமாகக் காணப்பட்ட எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 15.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.அதேபோன்று தமது பிள்ளைகளுக்கு அவசியமான நிறையுணவை வழங்குவதில் பெருமளவான குடும்பங்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததுடன் , பொதுப் போக்குவரத்து சேவை குறைபாட்டின் விளைவாக சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

இத்தகைய நடவடிக்கைகள் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வழிகோலியதுடன் அவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியதாக யுனிசெப் அமைப்பு ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்தது.இதேவேளை இலங்கையில் குறைந்தபட்சம் 6.3 மில்லியன் மக்கள் தீவிர உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், அவசியமான உயிர்காக்கும் உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கப்படாவிட்டால் இவ்வருடத்தில் அவர்களின் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் ஆய்வுகள் வலியுறுத்தியுள்ளமையும் தெரிந்ததேயாகும்.தீவிர உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கு மலையக மக்கள் அதிகமாக உள்ளாகி இருக்கும் நிலையில் சிறுவர்கள் பலரும் இதில் உள்ளடங்குகின்றனர். நிறையுணவு என்பது பெரும்பாலான மலையக சிறுவர்களுக்கு கனவாகவே உள்ளது.

இது இவ்வாறிருக்க இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 16 அப்பாவி சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்படாமல் இன்னும் நிலுவையில் உள்ளது.இதேவேளை கடந்த செப்டம்பர் மாதத்தில் 16 வயதுக்கும் குறைந்த 168 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானார்கள்.இவர்களுள் 22 பேர் ஒரே மாதத்தில் கர்ப்பம் தரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஒக்டோபர் மாதத்தில் 131 பேர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான நிலையில் இவர்களுள் 10 பேர் கர்ப்பம் தரித்துள்ளனர்.சிறுவயதிலேயே கர்ப்பம் தரிப்பதன் விளைவாக பிள்ளை வளர்ப்பு, வறுமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கும் இவர்கள் முகம் கொடுக்க வேண்டி நேரிடுகின்றது.வாழ்க்கை பலருக்கு நரகமாகின்றது.பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கான உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உடல் ரீதியான சிகிச்சைகளுக்கு புறம்பாக உளவியல் ரீதியான சிகிச்சைகளையும் வழங்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.சமூகத்துக்கு பயந்து பல சிறுவர்கள் தமக்கெதிரான துஷ்பிரயோகங்களை அல்லது உரிமை மீறல்களை வெளியில் சொல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் துஷ்பிரயோகம் காரணமாக பாதிப்படைகின்றன.நாட்டில் வருடாந்தம் சிறுவர்கள் தொடர்பான 5 ஆயிரம் குற்றச்செயல்கள் பதிவாவதாக அரசதரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன.போதைப்பொருள் பாவனை மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை என்பன இத்தகைய குற்றச்செயல்களின் அதிகரிப்பிற்கு உந்துசக்தியாகியுள்ளன.

வேலியும் பயிரும்

இதனிடையே மலையக பகுதிகளில் சிறுவர் உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பன அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை யாவரும் அறிந்த விடயமாகும்.பெருந்தோட்ட சிறுவர் மீதான உரிமை மீறல்கள் காலனித்துவ காலம் தொட்டே இடம்பெற்று வரும் நிலையில் இதன் தொடர்ச்சி இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.19 ம் நூற்றாண்டிலேயே பிரித்தானியர்கள் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதில் ஈடுபாடு காட்டி இருந்தனர்.

இக்காலகட்டத்தில் சுமார் 8000 சிறுவர்கள் தொழிலாளர்களாக பெருந்தோட்டத் துறையில் பணிபுரிவதற்காக தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.பெருந்தோட்டத்துறையில் தேயிலை பயிர்ச்செய்கை அறிமுகமானதையடுத்து பெருந்தொகையான சிறுவர் ஊழியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.1944 க்கு முன்னர் 25 சதம் சிறுவர்களுக்கான நாளாந்த ஊதியமாக வழங்கப்பட்டது.1947 இல் ரூபா 1.12, 1954 இல் ரூபா 1.63, 1967 இல் ரூபா 2.13, 1977 இல் ரூபா 3.23 என்ற வகையில் சிறுவர்களுக்கான நாளாந்த ஊதியங்கள் வழங்கப்பட்டன.சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தும் நடவடிக்கை காரணமாக அவர்களின் கல்வியுரிமைகள் பெரும்பாலும் மறுதலிக்கப்பட்டன.

பெருந்தோட்ட சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக அதிகரிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில் பிள்ளை வேறொருவரின் பராமரிப்பில் தனித்து விடப்படுதல், பாமரத்தன்மை, போக்குவரத்து பிரச்சினைகள், லயத்து வாழ்க்கை முறை, நோய்கள் போன்ற பலவும் இதற்கு ஏதுவாக அமைகின்றன.’

வேலியே பயிரை மேய்ந்தாற்போல’ பாதுகாப்பு வழங்க வேண்டிய தரப்பினரே சில வேளைகளில் பிள்ளைகளுக்கு இடையூறு விளைவித்து துஷ்பிரயோக நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.மலையகத்தில் இது அதிகமாகும்.ஒரு பிள்ளையின் ஆளுமை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திகளுக்கும் பெற்றோரின் அன்பு, காப்பு, கணிப்பு என்பன அவசியமாக தேவைப்படுகின்றது.இவை உரியவாறு கிடைக்காத பிள்ளைகளை இலக்கு வைத்து விஷமிகள் தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் மலையகத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.

மலையகத்தில் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் நிலைமை அதிகமாக காணப்படுகின்றது.அண்மைய தகவலொன்றின்படி பெருந்தோட்டத்துறையில் 06 தொடக்கம் 14 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களில் 10.3 வீதமான ஆண் பிள்ளைகளும், 14.6 வீதமான பெண் பிள்ளைகளுமாக மொத்தம் 12.4 வீதமான சிறுவர்கள் முழுநேரத்  தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அத்தோடு 4.5 வீதமான சிறுவர்கள் பாடசாலைக்கும் செல்லாது எதுவிதமான தொழிலிலும் ஈடுபடாது வெறுமனே சுற்றித்திரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறாக தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுவர்களும், வெறுமனே சுற்றித் திரியும் சிறுவர்களும் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் உள்ளீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை மறுப்பதற்கில்லை.

பெற்றோரின் அன்பினையும் பாதுகாப்பினையும் வேண்டி நிற்கும் சிறுவர்களுக்கு வெறுமனே அவர்களின் எஜமானர்களின் துன்புறுத்தல்களும், துஷ்பிரயோகங்களும் ஆதிக்கங்களும் பாரபட்சங்களுமே கிடைப்பதாக புத்திஜீவிகள் விசனப்பட்டுக் கொள்கின்றனர்.அத்தோடு சிறுவர்களின் சுயமான சிந்தனை,செயற்பாடுகளுக்கு எவ்வித இடமும் வழங்கப்படாது  அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் நடவடிக்கைகளே தொடர்வதாகவும் இவர்கள் மேலும் விசனப்பட்டுக் கொள்கின்றனர்.

இன்றைய சிறுவர்கள் நாட்டின் எதிர்கால தலைவர்களாவர்.இந்நிலையில் அவர்களுக்கு முறையாக கல்வி புகட்டி, சிறந்த ஒழுக்க விழுமியம் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கப்படுதல் வேண்டும்.அத்தோடு சிறுவர்களை பாதுகாப்பதற்கும், சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை அரச தரப்பினர் துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.ஆரோக்கியமான பாலியல் கல்வி தொடர்பாக சிறுவர்களை தெளிவூட்டுவதும் அவசியமாகும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எந்த தரப்பினராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உச்சகட்ட தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.மேலும் புதிய சட்டங்களை உருவாக்குவது ஒருபுறமிருக்க நடைமுறையிலுள்ள சட்டங்களை உரியவாறு அமுல் படுத்துவதால் சாதக விளைவுகள் அதிகமாகும்.இந்நிலையில் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் பெற்றோர் கண்டிப்பாக வீட்டில் சிறுவர்களின் கையடக்க தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனின் கருத்தும் சிந்திக்கத் தக்கதாகும்.கையடக்க தொலைபேசிகள் அனர்த்தங்கள் பலவற்றுக்கும் வித்திட்டு வருகின்றமை நீங்கள் அறிந்ததேயாகும்.

 

Exit mobile version