Tamil News
Home உலகச் செய்திகள் இஸ்ரேல் புதிய பிரதமராக பென்னட் பதவியேற்பு

இஸ்ரேல் புதிய பிரதமராக பென்னட் பதவியேற்பு

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 54 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.

2009ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்தார். பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி புகார்கள் கடந்த சில வருடங்களாக எழுந்து வந்தன. அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்தன. இஸ்ரேலில் அரபு கட்சி தலைமையில் 8 அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து நெதன்யாகுவின் ஆட்சிக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளன.

இந்தக் கூட்டணிக் கட்சிகள் சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ள உள்ளன. இதன்படி வலதுசாரி கட்சியான யாமினா கட்சியின் தலைவர் நப்தாலி பென்னட் பிரதமராகப் பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பெனட் வெற்றி பெற்றார். இதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டார்.

Exit mobile version