Tamil News
Home உலகச் செய்திகள் இஸ்ரேல் தேர்தலில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த பிரதமர்

இஸ்ரேல் தேர்தலில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த பிரதமர்

இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி உட்பட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து எதிர்க் கட்சியான புளு அன்ட் வைற் கட்சியுடன் கூட்டணி வைத்து தேசிய அரசை அமைக்க பென்ஜமின் நெதன் யாஹு முயற்சி செய்தார். ஆனால் புளு அன் வைற் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பென்னி கான்ட்ஸ் கூட்டணிக்கு மறுத்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆட்சியமைக்க வரும்படி பென்ஜமின் நெதன்யாஹுவிற்கு அந்நாட்டின் அதிபர் ருவென் ரிவ்லின் அழைப்பு விடுத்தார். 28 நாட்களுக்குள் அமைச்சரவையை அமைக்க அவருக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆட்சியமைக்க 61 உறுப்பினர்களின் தேவை என்ற நிலையில் நெதன்யாஹு சிறிய கட்சிகளின் ஆதரவை பெற கடுமையாக முயற்சித்தார்.

எனினும் அவரால் 55 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற முடிந்தது. இதனால், அவர் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தார். ஆட்சியமைப்பதற்கான காலக்கெடு முடிய இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் நெதன்யாஹு முன்னதாகவே தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். அதிபர் ருவென் ரிவ்லின் உடனான சந்திப்பிற்கு பின்னர் நெதன்யாஹு இதனை அறிவித்தார்.

இதனையடுத்து, ஆட்சியமைக்க வரும்படி புளு அன் வைற் கட்சியின் தலைவர் பென்னி கான்ட்சிற்கு அதிபர் ருவென் ரிவ்லின் அழைப்பு விடுப்பார். அவருக்கும் 28 நாட்கள் காலக்கெடு வழங்கப்படும். அவரும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பை இழக்கும் பட்சத்தில் பெரும்பான்மையை பெறுவார் என நினைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஆட்சியமைக்க அதிபர் அழைப்பார்.

Exit mobile version