Home செய்திகள் இளைஞர் அபிவிருத்தி – துரைசாமி நடராஜா

இளைஞர் அபிவிருத்தி – துரைசாமி நடராஜா

மலையக சமூகம் சமகாலத்தில்  பல துறைகளிலும் பல்வேறு அடைவுகளை பெற்றுக் கொண்டு முன்னோக்கிய நகர்வினை மேற்கொண்டு வருகின்றது.இது ஒரு சிறப்பம்சமாகும் என்ற நிலையில் இவற்றை மேலும் சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு இளைஞர்கள் சமூக அபிவிருத்தி கருதி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.இதிலிருந்தும் விலகிச் செல்ல எவரும் முற்படுதல் கூடாது.

kida malayakam இளைஞர் அபிவிருத்தி - துரைசாமி நடராஜாஇளைஞர்கள் சமூக மாற்றத்தின் அச்சாணியாக விளங்குகின்றார்கள்.உழைக்கும் படை என்ற ரீதியில் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய கதாபாத்திரங்களாகவும் அவர்களே விளங்குகின்றார்கள்.இளைஞர்களால் தேசம் செழுமையுறும் அதேவேளை உலகவரலாறுகளை நல்லபடியாக மாற்றியமைத்த பெருமைக்குரியவர்களாகவும் இளைஞர்களே விளங்குகின்றனர்.

இந்நிலையில் இளைஞர்களை புறந்தள்ளும் எந்தவொரு சமூகமோ அல்லது நாடோ எதிர்பார்த்த வெற்றி இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது என்பது திண்ணமாகும்.இதனை கருத்தில் கொண்டே உலக நாடுகள் இளைஞர் அபிவிருத்தி கருதி விசேட பல திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றன.இளைஞர்களை அரவணைத்து நாட்டின் அபிவிருத்திக்கு வலுசேர்ப்பது இதன் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகின்றது.எல்லாச் சமூகங்களிலுமே இளைஞர்கள் பலம் வாய்ந்த ஒரு சமூக, பொருளாதார குடித்தொகைப் பிரிவினராக காணப்படுகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இளைஞர்கள் அவர்களுடைய விசேட பண்புகள், தேவைகள்,சமூக மற்றும் உளவியல் ரீதியான நடத்தை முறைகள் என்பன காரணமாகவே தனிப்பட்ட ஒரு சமூகப் பிரிவினராக கருதப்படுகின்றனர்.15 வயதுவரை பெற்றோரில் தங்கியிருக்கும் பிள்ளைகள் அடுத்த சுமார் 7 தொடக்கம் 8 ஆண்டுகளில் தொடர்ந்தும் பெற்றோருடனேயே தங்கியிருந்த போதும்கூட ஓரளவு சுதந்திரமாக வாழத் தொடங்குகின்றனர்.

இக்காலப்பகுதியில் அவர்கள் தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட முயல்வதோடு தம்மிடமிருக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரவும் முயல்வர். அத்தோடு தீர்மானங்களை மேற்கொள்வதில் தமக்கு பங்கிருக்க வேண்டுமென அவர்கள் விரும்புவார்கள்.மேலும் தனிநபர் அபிவிருத்தி, சமூகப் பங்கெடுப்பு என்பன தொடர்பாகவும் இக்காலப்பகுதி அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே இளமைப் பருவத்தை மனிதனது வாழ்வில் வெறுமனே ஒரு காலப்பகுதியாக மட்டும் கருதமுடியாது.உண்மையில் அது அவர்களது குறிப்பிட்டதொரு மனோநிலையினை குறிப்பதாக கருதுவதே சரியானதாகும் என்பதோடு இளமைப் பருவமானது பெரும் மாற்றங்களை கொண்ட காலப்பகுதி என்பதே பொருத்தமானதாகும் என்பது புத்திஜீவிகளின் கருத்தாக உள்ளது.

இந்த வகையில் மலையக இளைஞர்கள் குறித்து நாம் நோக்குகின்றபோது அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருவதனை எம்மால் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.வறுமை, வேலையின்மை, இனரீதியானதும், அரசியல் ரீதியானதுமான பாரபட்சங்கள், அரசியல் பழிவாங்கல்கள், புறக்கணிப்புக்கள், போன்ற பல பிரச்சினைகளுக்கும் மலையக இளைஞர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.மேலும் இவர்களின் திறமைகளுக்கு உரிய இடம் வழங்கப்படுகின்றதா? அவர்களுக்கான வாய்ப்புக்கள் சமூகத்தில் எந்தளவில் காணப்படுகின்றன? என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.

மலையக இளைஞர்கள் முன்னைய காலங்களைக் காட்டிலும் கல்வித் துறையில் அதீத ஈடுபாடு காட்டி வருவது ஒரு சிறப்பம்சமாகும்.2012/13 ம் ஆண்டு தகவலொன்றின்படி இலங்கை மக்களின் கல்வி மட்டம் பின்வருமாறு அமைந்துள்ளது. பாடசாலைக்கு செல்லாதோர் நகர்ப்புறத்தில் 2.2 வீதமாகவும், கிராமப்புறத்தில் 3.5 வீதமாகவும், பெருந்தோட்டத்தில் 12.2 வீதமாகவும் காணப்பட்ட அதே நிலையில் தேசியளவில் இது 3.7 வீதமாகக் காணப்பட்டது.

ஐந்தாம் தரம்வரை கல்வி கற்றோர் வீதமானது நகர்ப்புறத்தில் 19.2, கிராமப்புறத்தில் 25,பெருந்தோட்டத்தில் 42 என்றவாறு காணப்பட்ட நிலையில் தேசியளவில் இது 24.7 வீதமாகக் காணப்பட்டது.இதேவேளை 6 தொடக்கம் 10 ம் தரம் வரை பெருந்தோட்டத்தில் 38.07 வீதமானவர்களும்,க.பொ.த.சாதாரண தரம் வரை 4.09 வீதமானவர்களும், க.பொ.த.உயர்தரம்வரை 2.2 வீதமானவர்களும் சித்திபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலைக்குச் செல்லாதோர் நகரம், கிராமத்தைக் காட்டிலும் 4 தொடக்கம் 6 மடங்கு அதிகமாகும் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் நகர்ப்புறங்களிலேயே திறக்கப்பட்டதால் அத்துறையைச் சார்ந்தோரே இதன் ஆகக்கூடுதலான நன்மைகளைப் பெற்றதாகவும்,தொடர்ந்து வந்த ஆண்டுகளில் கிராமப் புறங்களில் இவ்வசதிகள் ஓரளவிற்காவது விஸ்தரிக்கப்பட்டதால் கிராமிய துறையைச் சேர்ந்தோரும் கல்வியில் முன்னேற்றம் காணமுடிந்தது.

ஆனால் பெருந்தோட்டத் துறையைப் பொறுத்தவரையில் இவ்வசதிகள் செய்து கொடுக்கப்படாததன் காரணமாக ஆரம்பக்கல்வி பெறுவோரின் விகிதாசாரம் திருப்திகரமானதாக இருந்தபோதும், இரண்டாம் நிலை கல்வியையும், இரண்டாம் நிலைக்குப்பின் கல்வியையும் பெறுவோரின் விகிதாசாரம் மிகவும் குறைவாகவே இருந்ததாகவும் கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன.எவ்வாறாயினும் சமகாலத்தில் மலையக இளைஞர்களின் கல்வித்துறை ஈடுபாடு அதிகரித்துள்ளது.

வினைத்திறன் மேம்பாடு

இதேவேளை வருடாந்தம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தை முடித்துவிட்டு பாடசாலைகளில் இருந்து வெளியேறுகின்ற நிலையில் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை விரிவுபடுத்த வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது. தொழிற்பயிற்சி எதுவும் இல்லாத நிலையில் காணப்படும் இவர்களின் அபிவிருத்தி கருதி மலையகத்தில் தொழிற்பயிற்சி  நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாகவே விடுக்கப்பட்டு வருகின்றமையும் தெரிந்ததாகும்.

தொழிற்பயிற்சியின்மை மற்றும் குறைவான கல்வித் தகைமைகளைக் கொண்ட நிலையில் பல இளைஞர்கள் நகர்ப்புறங்களில் கீழ்நிலைத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் வருமானக்குறைவு ஏற்படுவது ஒரு புறமிருக்க கலாசார ரீதியான சிக்கல்கள் பலவற்றுக்கும் இளைஞர்கள் முகம் கொடுத்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது .

இந்த வருடம் தேர்தல் வருடமாக உள்ளது.இவ்வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்கள் இடம்பெறலாம் என்று நம்பப்படுகின்றது.இந்நிலையில் மலையக அரசியல்வாதிகள் இளைஞர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திவிட்டு பின்னர் கைகழுவி விடுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.தேர்தல் காலங்களில் இளைஞர்கள் மீது காட்டும் ஆர்வத்தை பின்னர் இவ்வரசியல்வாதிகள் வெளிப்படுத்துவதில்லை.

இளைஞர்களின் நலன்களுக்கு வலுசேர்க்காத நிலையில் செல்லாக்காசாக இளைஞர்களை அரசியல்வாதிகள் கருதுகின்றனர்.தமது வாரிசுகளை அரசியலில் உள்நுழைக்க ஆர்வம் காட்டும் இவர்கள் இளைஞர்களின் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதாக இல்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன.இக்குற்றச்சாட்டுகளில் நம்பகத்தன்மையும் இல்லாமலில்லை.

தீர்மானம் மேற்கொள்ளும் இடங்களில் இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பளிப்பதில்லை.இளைஞர் குறித்த தீர்மானங்களை முதியோர்களே மேற்கொள்கின்றனர்.இதனால் இளைஞர்களின் உண்மையான கருத்துக்கள் மற்றும் அபிலாஷைகள் பிரதிபலிக்காத நிலையில் அது பல்வேறு முரண்பாடான சூழ்நிலைகளுக்கும் வித்திடுவதாக உள்ளது.இளைஞர்களிடையே அதிருப்தி மேலோங்குவதற்கும் அது உந்துசக்தியாகி இருக்கின்றது.

இளைஞர் அதிருப்தி நிலை காரணமாக எமது நாடு கடந்த காலத்தில் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது.சர்வதேசம் இலங்கையை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதற்கும் இந்நிலைமை ஆதிக்கம் செலுத்தியது. இலங்கையின் அபிவிருத்தி தடைப்பட்டதோடு இருதரப்பிலும் உழைக்கும் படையைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்ட வரலாறு கறைபடிந்த அத்தியாயமேயாகும். இத்தகைய நிலைமைகளை படிப்பினையாகக்கொண்டு இளைஞர்களுக்கு உரிய இடமளிப்பதோடு அவர்களின் கருத்துக்களை முறையாக உள்வாங்கிக்கொண்டு செயற்படுவதும் மிகவும் அவசியமாகும்.இளைஞர் தலைமைத்துவமும் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.

மலையக பெருந்தோட்ட இளைஞர்களின் பல்துறை தேவைகளுக்கும் முறையாக முன்னுரிமையளித்து பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிலையில் அவர்களின் மனிதவள அபிவிருத்தி தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டியதன் அவசியப்பாட்டினை பேராசிரியர் மு.சின்னத்தம்பி வலியுறுத்தி இருக்கின்றார். இதேவேளை இளைஞர்களின் மனிதவளத் தேவைகளை இனங்காண்கையில் இளைஞர்களின் அபிலாஷைகளுக்கு மட்டுமன்றி தோட்டங்களின் தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இவ்வாறான மனிதவள அபிவிருத்தி தேவைகளில் சிலவற்றை பட்டியல்படுத்தியுள்ளார்.

தோட்டத்திற்கு வெளியே வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு தேவையான வினைத்திறன்களை அவர்களிடையே அபிவிருத்தி செய்தல், தோட்டங்களுக்கு வெளியே சுயதொழில்களில் ஈடுபடுவதற்கும், வருமானம் உழைப்பதற்குமான அவர்களது முயற்சியாண்மையை அபிவிருத்தி செய்தல், தோட்டங்களுக்குள்ளேயே மேலதிக வருமானத்தை உழைத்துக் கொள்வதற்குத் தேவையான வினைத்திறனை உருவாக்குதல், தோட்ட விவசாயத்திற்கும் வேறு உற்பத்தித்துறை நடவடிக்கைகளுக்கும் தேவையான வினைத்திறன்களை மேம்படுத்துதல், தோட்டங்களோடு தொடர்பான ஆதாரத்தொழில் சார்ந்த வினைத்திறன்களை மேம்படுத்துதல், தோட்ட இளைஞர்களின் மனப்பாங்குகளை மாற்றுவதன் மூலமும் , பெண்களின் பங்கெடுப்பு, பால் தொடர்பான பிரச்சினைகள், மேலதிக வருமானத்தை உழைத்தல் என்பன குறித்த அவர்களது அறிவினை வளர்ப்பதன் மூலமும் தோட்டக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்.

இத்தகைய மனிதவள அபிவிருத்தி தேவைகளை பூர்த்தி செய்யும் விதமான புதிய பயிற்சி நெறிகள் உருவாக்கப்பட வேண்டும்.ஏற்கனவே இருக்கும் பயிற்சி நெறிகளை தரமுயர்த்துவதன் மூலமும் இளைஞர்களின் தொழிற்சார் பயிற்சி, தொழில்நுட்ப வினைத்திறன்,பொதுஅறிவு என்பன உயர்த்தப்பட வேண்டும் என்று குறிப்பிடும் பேராசிரியர் சின்னத்தம்பி ஐந்து வகையான பயிற்சி நெறிகளையும் இனங்கண்டுள்ளார்.அவையாவன:-

அறிவுசார் பயிற்சித் திட்டங்கள்,மைய வினைத்திறன் அபிவிருத்தி பயிற்சித் திட்டங்கள், தொழில்சார் பயிற்சித் திட்டங்கள், முயற்சியாண்மையை அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சித் திட்டங்கள், தோட்ட வேலைகளுக்கு பயன்படக்கூடிய பயிற்சித் திட்டங்கள் என்பன அவை ஐந்துமாகும்.எனவே மேற்கண்ட விடயங்களை கருத்தில் கொண்டு மலையக இளைஞர்களுக்கான அபிவிருத்தி செயற்றிட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பதோடு சமூகத்தில், நாட்டில் உரிய இடம் அவர்களுக்கு வழங்கப்படுதலும் வேண்டும்.இதைவிடுத்து இளைஞர் புறக்கணிப்பு நிலைகள் மேலோங்குமிடத்து அதனால் ஏற்படும் பாதக விளைவுகளை சமூகமும், நாடும் சந்திக்க வேண்டியேற்படும்.இதேவேளை இளைஞர்களும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்.

 

Exit mobile version