Home ஆய்வுகள் இலங்கை இனமோதலில் இலங்கை வரலாற்றின் முக்கியத்துவமும் இலங்கை அரசின் வரலாற்று பாடவிதானங்களில் பொய்களும் திரிபுகளும் மறைப்புக்களும்

இலங்கை இனமோதலில் இலங்கை வரலாற்றின் முக்கியத்துவமும் இலங்கை அரசின் வரலாற்று பாடவிதானங்களில் பொய்களும் திரிபுகளும் மறைப்புக்களும்

இலங்கை இனமோதலின் அடிஅத்திவாரமாக விளங்குவது இலங்கை வரலாறு தொடர்பான தமிழர்களின் உண்மைகளுக்கும் சிங்களவர்களின் பொய்களுக்குமிடையிலான மோதலாகும். இலங்கையின் புராதன நாகரீகம் என்பது சைவத்தமிழ் நாகரீகமாகும். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள சிங்கள ஆட்சியாளர்கள், இராணுவ பொலிஸ் பலத்துடன் அனைத்து வளங்களையும் இலங்கை முழுவதிலும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வந்து இலங்கையை முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்களை காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாள் முதல் செயற்படுத்தி வருகின்றனர்.Kurunthoormalai Buddha 5 1 இலங்கை இனமோதலில் இலங்கை வரலாற்றின் முக்கியத்துவமும் இலங்கை அரசின் வரலாற்று பாடவிதானங்களில் பொய்களும் திரிபுகளும் மறைப்புக்களும்இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள பௌத்த மயமாக்கும் பல்முறை வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு தமிழர்களின் போராட்டம் தடையாக அமைந்ததால் அவர்களது வேலைத் திட்டமென்பது சமாந்தரமாக இரண்டு பெரும் பிரிவாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர்களின் இருப்பை, அடையாளங்களை, தொன்மையை அழித்தொழிப்பது.மற்றையது வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் செயற்திட்டங்களை தொடர்ச்சியாக செயற்படுத்துவது. இதில் தமிழ் மக்களின் இருப்பை ஒழிப்பதில் அவர்களது உயர்கல்வி வாய்ப்புக்களைப் பறிப்பது, அவர்களுடைய வேலைவாய்ப்புக்களைப் பறிப்பது இவற்றின் மூலம் மக்களை நாட்டை விட்டு ஓடச் செய்தல் என்பது ஒரு வழிமுறையாக 70களிலிருந்து செயற்படுத்தப்படுகிறது.இவற்றை செயற்படுத்த சிங்கள மக்களை தயார் செய்ய வேண்டும். அதற்கு சிங்களத் தேசியவாதத்தை கட்டி எழுப்ப வேண்டும். உண்மையில் சைவத்தமிழ் நாகரீகமே புராதன நாகரீகம் என்பதாலும் தமிழ் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதாலும் சிங்கள தேசியவாதத்தைக் கட்டியெழுப்புதல் இலகுவானதல்ல. ஏனெனில் தேசியவாதத்துக்கான உள்ளீடுகளில் அவர்களது பூர்வீகம், தனித்துவமான கலாச்சாரம், வரலாற்றுச் சான்றுகள், பெருமைகள் போன்ற பலவிடயங்கள் அவசியமாகின்றன.எனவே சிங்களவர்களின் தொன்மை பற்றியும் பௌத்தத்தின் பெருமை பற்றியும் பொய்களையும், கட்டுக்கதைகளையும், மாயைகளையும் வரலாற்று உண்மைகள் போல சிங்கள மக்களுக்கு போதித்து சிறுவயதிலிருந்தே அதனை நம்பவைத்து சிங்கள பௌத்த தேசியவாதத்தை கட்டியெழுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிங்கள பௌத்த தேசியவாதம் செயலாற்றி வருகின்றது. காலனித்துவத்தின் பின் ஆட்சி அதிகாரம் சிங்களவர்களின் கைகளுக்கு மாறியதாலும் ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி ( துஸ்பிரயோகம் செய்து) வரலாற்று பாடவிதானங்களில் தமிழர்களின் தொன்மையையும், இலங்கையை பாதுகாப்பதிலும் இலங்கையை கட்டியெழுப்புவதிலும் காலனித்துவ்வாதிகளிடமிருந்து விடுவிப்பதிலும் அவர்களது பங்களிப்பையும் மறைத்து பொய்யான வரலாறு கற்பிக்கப்படுகிறது.தமிழ் மன்னர்களின் பெயர்களை சிங்களப் பெயர் போல் மாற்றுவது உ+ம் தேவநம்பியதீசன் என்ற சைவத்தமிழ் மன்னன் அவனது தந்தை பெயர் மூத்தசிவன். கி.மு. 300ஆம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்தான். அவனது காலத்திலேயே அசோகச்சக்கரவர்த்தியின் மகன் மகிந்தாவும் மகள் சங்கமித்திரையும் இலங்கைக்கு வந்து தேவநம்பியதீசனை மதமாற்றம் செய்தனர். ஆனால் அவனது பெயரை திஸ்ஸ என வரலாற்று நூல்களில் குறிப்பிடுகின்றனர்.

இதுபோன்றே யாழ்ப்பாண இராட்சியத்தை ஆண்ட செண்பகப் பெருமாள் என்ற தமிழ் மன்னரின் பெயரை சப்புமல்குமார என சிங்களப்பெயர் போல வரலாற்று நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இது போன்றே யாழ்ப்பாணத்தை யாப்பாபட்டுன என்றும் பல்வேறு தமிழ் ஊர்களின் பெயர்களை விரும்பியவாறு சிங்களக் குடியேற்றங்கள் மூலமும் பெயர் மாற்றம் செய்து நூல்களில் இடம்பெறச் செய்துள்ளனர். தமிழ் மக்களைச் சிறுமைப்படுத்தும் விதத்தில் தாழ்ந்தவர்கள், வந்தேறு குடிகள் என்ற சாரப்பட பல இடங்களில் வரலாற்று பாடவிதானங்களில் பதியப்பட்டு மாணவர்கட்கு கற்பிக்கப்படுகிறது.இந்தியாவையும் தமிழர்களையும் எதிரிகளாகக் காட்டும் வகையில் சிங்கள தேசத்துக்கெதிராக 24முறை தென்னிந்தியப் படையெடுப்பு நடந்ததாகவும் அதன் மூலம் வந்தவர்களே தமிழர்கள் என்றும் வரலாறு புனையப்படுகின்றது. வெகுசிலவே நாடு பிடிக்கும் படையெடுப்பினடிப்படையில் நடைபெற்றன. பெரும்பாலானவை இரு சிங்கள மன்னர்கள் யுத்தம் புரியும்போது ஒருவர் சோழனின் உதவியை நாடுவதும் எதிர்த்தரப்பு பாண்டியனின் உதவியை நாடுவதும் இவர்களுக்கு ஆதரவாக படைகள் வருவதுமே நடந்தது. வந்தவர்களில் பெரும்பாலான படையினரை இங்கேயே தங்க வைத்ததும் உண்டு. சோழன், பாண்டியன் தமிழர் என்பதால் தமிழர்களை இந்தியர் என்றும் சிங்கள விரோதிகள் என்றும் சித்தரிக்கும் வரலாறுகள் சாதாரண மக்கள் மத்தியில் ஜனரஞ்சக எழுத்தாளர்களால் பரப்பப்படுகின்றது.இனமோதலுக்கு தீர்வு காண்பதில் முன்னெடுப்புக்கள் நடைபெறும் போதெல்லாம் இன ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் பல வெளிநாடுகள் பாடநூல்களில் தமிழர்களுக்கெதிராக, அவர்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்த மற்றும் தவறான வரலாற்றுப் பதிவுகளை நீக்குவதற்கான திட்டங்களை முன்னிலைப்படுத்தி பெருமளவு நிதியை செலவழித்த போதும் சிங்கள கல்விச் சமூகம் அந்த நிதியை ஏப்பம் விட்டு இவற்றைச் செய்து முடிக்காமல் ஏமாற்றிய வரலாறும் உண்டு.

உ+ம் சந்திரிக்கா ஆட்சியில் ஒருபுறம் தீர்வுப்பொதி வேலைகளும் மறுபுறம் தமிழ் மக்களுக்கான தீர்வை சாதாரண சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள வைக்கின்ற நோக்கிலான செயற்பாடுகளைக் கொண்ட வெண்தாமரை இயக்கம், சிங்களவர்களால் எரிக்கப்பட்ட யாழ் பொது நூலகத்தை எரியூட்டியது தவறு என்பதை சராசரி மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ‘புத்தகமும் செங்கல்லும்’ என்ற இயக்கம் என பல நடந்தன. சமாந்தரமாக நோர்வேயின் பெருமளவிலான நிதியுதவியுடன் நீதி அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டு செயற்திட்டம் (National Integration Program Unit) என்ற அமைப்பு பல வருடங்கள் செயற்பட்டது.

அதில் ஓர் முக்கிய திட்டம் பாடநூல்களில் மேற்கண்ட மாற்றங்களைச் செய்வது. இதற்கான பெருமளவு சிங்களவர்களைக் கொண்ட கல்விச்சமூக வல்லுனர்கள் தெரிவு செய்யப்பட்டு பலமாதங்கள் கூடினர் . இதற்கான பெருமளவிலான கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொண்ட பின்னால் பின் வாங்கினர். இதேபோல் 2001-2002களில் கொழும்பில் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி நீரா விக்கிரமசிங்க வழிகாட்டலில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு உறுப்பினர்களும் கொஞ்சக்காலம் கொடுப்பனவுகளைப் பெற்று அனுபவித்து விட்டுப் பின்வாங்கினர். இதுபற்றி கலாநிதி நீரா விக்கிரமசிங்க விரக்தியடைந்திருந்தார். ஆக சிங்கள அரசியல் சமூகம் இத்தகைய நாடகங்களை அரங்கேற்றுவதும் சிங்கள கல்விச்சமூகம் இது தேசியவாதத்துக்கு எதிரானது என்று பின்வாங்குவதும் வரலாறு.இவற்றின் நீட்சியே இன்று இராவணன் சிங்களவன் என சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரகடனம் செய்வதும் பௌத்த மதவெறி அமைப்பு “ராவணபலய” எனத் தமது அமைப்புக்கு பெயர் சூட்டுகின்ற கோமாளித்தனமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வரலாற்றாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூற்றுப்படி இராமர் – ராவணன் வாழ்ந்த காலமெனக் கருதப்படும் காலம் இற்றைக்கு 7000 ஆண்டுகளாகும். பௌத்தம் உருவானது இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர். சிங்களமொழி உருவாகத் தொடங்கியதே கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகள். அது ஒரு முழுமையான மொழியாக வளர்ச்சியடைந்தது சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே.

இராமாயானத்தின்படி இராவணன் ஓர் சிவபக்தன். அவன் ராவணன். ராவனேஸ்வரன், இலங்கேஸ்வரன் எனப்படும் பெயர்களால் அழைக்கப்பட்டான். அனைத்தும் தமிழ்ப் பெயர்களே. பௌத்தம் உருவாவதற்கு 4500 ஆண்டுகள் முன்னரும் சிங்களம் உருவாவதற்கு 5500 ஆண்டுகள் முன்னரும் வாழ்ந்த சைவத்தமிழ் மன்னனான ராவணனை சிங்கள மன்னன் என்று பெருமை கொள்ள வேண்டிய அளவுக்கு சிங்களத் தேசியவாதம் பலவீனமாக இருப்பதும் சைவத்தமிழ் நாகரீகத் தொன்மையை தமதாக்கி சிங்கள தேசியவாதத்தை கட்டியெழுப்ப வேண்டிய பரிதாபத்திற்குரிய நிலையிலும் இன்று சிங்களத் தேசியவாதம் இருக்கின்றது.ஆனால் இத்தகைய பொய்கள், திரிபுகள், மாயைகள் அனைத்தையும் ஆட்சி அதிகாரம், இராணுவ, பொலிஸ் பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி உண்மையாக்க முயலும் செயற்திட்டங்களும், இப்பொய்களின் அடிப்படையில் வடக்கு – கிழக்கையும் சிங்கள பௌத்த மயமாக்கும் இனமத மேலாதிக்க செயற்திட்டங்களிலுமே யுத்த முடிவுக்கு (2009) பின்னரான ஆட்சியாளர்கள் வேகமாக செயற்பட்டு வருகின்றனர். இச்செயற்பாடுகளுக்கு சட்ட அடிப்படைகளை தொல்லியல் திணைக்களம் இவர்களுக்கு சட்ட விரோதமாக வழங்கி வருகின்றது. தொல்லியல் திணைக்களம் இராணுவத்தையும் புத்த பிக்குகளையும் வைத்தே செயற்படுகின்றது.

அதன் எந்த செயற்பாடுகளிலும் சட்ட திட்டங்களை பின்பற்றுவதோ, வெளிப்படைத் தன்மையோ கிடையாது. கண்டுபிடிக்கப்படும் பொருட்கள், ஆதாரங்களை carbon dating செய்வதோ அவை பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வெளியிடுவதோ கிடையாது. தொல்லியல் இடமென்றால் அது பௌத்தர்களுக்கான/ சிங்களவர்களுக்கான இடம் என்பது எழுதாத விதியாக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி செய்ய முன்னரே அங்கு இராணுவ, பொலிஸ் பாதுகாப்புடன் புத்த கோவில்கள் கட்டப்படுகின்றன. கட்டப்பட்ட பின்னால் அது பௌத்த இடமெனப் பிக்குகள்/அரசியல்வாதிகள் அறிவிப்பார்கள்.ஆகவே இலங்கை இனமோதலின் ஊற்றுக்கண்ணாகவும் இன்றுவரை அதன் நீட்சிக்குமான அடிப்படைக் காரணமாகவும் இருப்பது இலங்கையின் உண்மையான வரலாற்றுக்கும் புனையப்படும் வரலாற்றுக்கும் இடையிலான மோதலே. இலங்கை இனமோதலின் ஊற்றுக் கண்ணான வரலாற்றின் பல்வேறு அம்சங்களையும் வெளிக்கொணர்வதும், பாதுகாப்பதும், உலகறியச் செய்வதும் அவசியமும் அவசரமுமாகும். கல்வியை தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்கான சரவதேச தினமான செப்ரெம்பர் 9இல் உலகம் வாழ் வரலாற்றாளர்கள், தொல்லியலாளர்கள் இலங்கையின் உண்மை வரலாற்றை வெளிக்கொணர உறுதியேற்க வேண்டும்.கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்முன்னாள் விரிவுரையாளர் அரசியல், சர்வதேச அரசியற்துறை – கொழும்பு பல்கலைக்கழகம்முன்னாள் கல்வி அமைச்சர் – வடக்கு மாகாணசபை

Exit mobile version