Home ஆய்வுகள் இலங்கை அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை – துரைசாமி நடராஜா

இலங்கை அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.சமகால விலைவாசி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பவற்றுக்கு மத்தியில் தொழிலாளர்கள் அதிகரித்த பொருளாதார நெருக்கீட்டினை எதிர்கொள்ளும் நிலையில் குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபாவையாவது வழங்குவதற்கு கம்பெனிகள் முன்வருதல் வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இதேவேளை கம்பெனிகள் 150 வருட வேதன முறையை மாற்றியமைத்து வருமான பங்கீட்டு முறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

malaiyakam இலங்கை அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை - துரைசாமி நடராஜாபெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு வருகை தந்து 200 வருடங்களாகிவிட்டது.இக்காலப்பகுதியில் இம்மக்கள் சிற்சில அடைவுகளை கொண்டுள்ளபோதும் இன்னும் பல விடயங்களில் பின்தங்கிய நிலைமையினையே வெளிப்படுத்தி வருவது யாவரும் அறிந்ததாகும்.இவற்றுள் பொருளாதாரத்துறை என்பது முக்கியமானதாகும்.ஒரு சமூகம் மேலெழும்புவதற்கும் பல்வேறு சாதக விளைவுகளை பெற்றுக் கொள்வதற்கும் பொருளாதார அபிவிருத்தி மிகவும் இன்றியமையாததாகும்.எனினும் மலையக சமூகத்தின் பொருளாதார நிலைமைகள் ஆரம்பகாலம் தொட்டே பின்நிலையில் இருந்து வருவது வருந்தத்தக்கதாகும். இந்நிலைமையானது  இம்மக்கள் பல்துறை பின்னடைவை சந்திப்பதற்கு உந்துசக்தியாகியுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படுகின்றார்கள்.இலங்கைக்கு தேசிய வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும்.தேயிலைத் தொழிற்றுறை, ஆடைத் தொழிற்றுறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்று பல துறைகளிலும் ஈடுபடும் பெண்கள் தம்மை வருத்திக் கொண்டு நாடுயர பாடுபடுகின்றார்கள்.எனினும் இம்மக்களின் நலன்கள் எவ்வாறு பேணப்படுகின்றன?

தேசிய நீரோட்டத்தில் இவர்களுக்கான வாய்ப்புகள் எவ்வாறுள்ளன? இம்மக்களின் தொழில் உரிமைகள் உரியவாறு உறுதிப்படுத்தப்படுகின்றனவா? அரசதுறை தொழில் வாய்ப்புக்களில் எம்மவர்கள் உரியவாறு உள்ளீர்க்கப்படுகின்றனரா?என்றெல்லாம் வினவுகையில் விடை திருப்தியானதாக இல்லை.இந்நிலையில் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே வழிநடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சிறுதோட்ட அபிவிருத்தி

தேயிலைத் தொழிற்றுறையைப் பொறுத்தவரையில் அரசாங்கம் சிறுதோட்ட அபிவிருத்தியில் காட்டும் அக்கறையை பெருந்தோட்ட அபிவிருத்தியில் காண்பிக்கத் தவறி விடுகின்றது.இலங்கையில் சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான சிறுதோட்ட உரிமையாளர்கள் காணப்படும் நிலையில் சிறுதோட்டங்களின் அபிவிருத்தி கருதி அரசாங்கம் கடன் உதவிகள், சலுகை விலையில் உரப்பகிர்வு உட்பட பல்வேறு மானியங்களையும் வழங்கி வருகின்றது.இதனால் சிறுதோட்டங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதோடு உரிமையாளர்களின் வாழ்க்கைத் தரமும் அதிகரித்துள்ளது.எனினும் பெருந்தோட்டங்களின் மீதும், தொழிலாளர்களின் மீதும் அரசாங்கம் பாராமுகம் காட்டி வருவதாக கண்டனங்கள் மேலெழுந்து வருகின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள நிலைமைகள் ஆரம்ப காலத்திலிருந்தே திருப்தியானதாக காணப்படவில்லை.இம்மக்களின் வருமானத்துக்கும், செலவுக்கும் இடையே பாரிய விரிசல் நிலை காணப்படுவதையே அவதானிக்க முடிந்தது. 1944 க்கு முன்னர் ஆண்தொழிலாளி ஒருவருக்கு நாட்சம்பளமாக 41 சதமும், பெண் தொழிலாளி ஒருவருக்கு 37 சதமும்,சிறுவர்களுக்கு 25 சதமும் வழங்கப்பட்டது.

1967 இல் ஆண் தொழிலாளர்களுக்கு 3 ரூபா ஒரு சதமும்,பெண் தொழிலாளர்களுக்கு 2 ரூபா 45 சதமும்,சிறுவர்களுக்கு 2 ரூபா 13 சதமும் வழங்கப்பட்டன.1987 இல் ஆண், பெண் இருபாலருக்கும் சமசம்பளமாக ரூபா 33.92 உம்,1989 இல் 37 ரூபாவும் வழங்கப்பட்டது. இவற்றோடு தொழிலாளர்களின் வருமானம் பற்றிய ஆய்வில் 1979 க்கு முன்னர் கிடைத்த உணவு மானியங்கள் முக்கியமானவை.1979 இல் வறுமை நிவாரண முறையாக ‘உணவு முத்திரை ‘ அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1965 ம் ஆண்டு வரை அரசாங்கம் தொழிலாளர்களுக்கு அரிசி மானியத்தை வழங்கியது.அரசாங்கம் அரிசியின் உண்மை விலையில் ஒரு பகுதியினை செலுத்தியது.இச்சகாய விலை காரணமாக 1960 இல் தொழிலாளியொருவருக்கு ரூபா 61.36 உம், 1965 இல் ரூபா 65.52 உம் இலாபமாகக் கிடைத்தது.1967 முதல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. இதேவேளை 1970 முதல் 1978 வரை அரிசி இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்ட நிலையில் ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட தொழிலாளர் குடும்பமொன்று மாதாந்தம் 1974 இல் ரூபா105 ஐயும், 1979 இல் ரூபா 53.33 இனையும் இலாபமாக பெற்றுக் கொண்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கருதி கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னதாகதொழிலாளர்களின்  சம்பளம், சம்பள நிர்ணய சபையின் மூலமாகவே தீர்மானிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு ஆகக் குறைந்த சம்பளத்தை தீர்மானிப்பதே சம்பள நிர்ணய சபையின் வரம்புக்குட்பட்ட அதிகாரம் ஆகுமென்று மூத்ததொழிற்சங்கவாதி எஸ்.இராமநாதன் சுட்டிக்காட்டுகின்றார்.

மேலும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொள்வதில் எதிர்கொள்ளப்பட்ட அனுபவ ரீதியான பிரச்சினைகள் காரணமாகவே இதற்கு மாற்றீடாக கூட்டு ஒப்பந்த முறை சிறந்ததாகக் கருதப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார். எவ்வாறெனினும் பின்னர் கூட்டு ஒப்பந்த முறையும் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானமை தெரிந்ததேயாகும். கூட்டு ஒப்பந்தத்தை அடிமைச் சாசனம், மரணப்பொறி என்றெல்லாம் முக்கியஸ்தர்கள் விமர்சித்திருந்தனர்.

அத்தோடு கூட்டு ஒப்பந்தத்தின் சில சரத்துக்கள் தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளதால் இச்சரத்துக்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததது.மேலும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென்றும் தொழிற்சங்கவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில் தோட்ட நிர்வாகங்கள் மற்றும் கம்பெனிகள் கூட்டு ஒப்பந்தத்தை மீறிய பல நிகழ்வுகள் அடிக்கடி பதிவாகும் நிலையில் தொழிலாளர்கள் இதனால் கொதித்தெழுந்த சம்பவங்களும் அநேகமுள்ளன.

இதனிடையே கூட்டு ஒப்பந்தம் நன்மைகள் பலவற்றுக்கு வித்திட்டுள்ளதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் தேசிய மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கமைய செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்த முறை தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாதவிடத்து, அதைவிட சிறந்த முறையிலான கூடிய தன்மை தரக்கூடிய வழிமுறையைப் பின்பற்ற தொழிற்சங்கங்கள் ஆலோசிக்க முடியும் என்றும் பதிவுகள் உள்ளன.

பங்கீட்டு முறை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயமானது தொடர்ச்சியாக இழுபறியாகவே இருந்து வருகின்றது.தொழிலாளர்கள் தமது சம்பள அதிகரிப்பு கருதி பல்வேறு போராட்டங்களிலும் கடந்த காலங்களில் ஈடுபட்டனர்.மெதுவாக பணி புரிதல், கொழும்புக்கு தேயிலையை கொண்டு செல்லவிடாது தடுத்து நிறுத்துதல், வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல போராட்டங்களும் இதில் உள்ளடங்கும்.எனினும் இப்போராட்டங்களின் மூலமாக தொழிலாளர்கள் எதிர்பார்த்த நியாயமான சம்பள உயர்வு கிடைக்காத நிலையில் சொற்ப சம்பள அதிகரிப்புகளே பெற்றுக்கொள்ளப்பட்டமையும் கசப்பான உண்மையாகும்.

தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் அதிகளவு இலாபத்தை பெற்றுக் கொள்கின்றபோதும் தொழிலாளர் நலன்களில் அவை கிஞ்சித்தும் அக்கறை செலுத்துவதில்லை.உழைப்புக்கேற்ற ஊதியத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில்லை என்று தொழிற்சங்க தரப்பினர் கூறி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.எனினும் கம்பனியினர் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

‘பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழுள்ள தோட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து ஆயிரம் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களே பணியாற்றி வந்தபோதும் இத்தொழிலோடு மறைமுகமாக இணைந்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 20 இலட்சமாகும்.இத்தனை பேரின் வாழ்வாதாரம் தங்கியிருக்கும் இத்துறையை நாம் மிகுந்த நெருக்கடிக்கு மத்தியிலேயே கொண்டு நடாத்துகின்றோம்.

150 வருட வேதனை முறையை மாற்றியமைக்க வேண்டுமெனவும், வருமான பங்கீட்டு முறையை கொண்டு வருமாறும் தொழிற்சங்கங்களை வலியுறுத்தினோம்.ஆனால் அவர்கள் அது குறித்து அக்கறை செலுத்தவில்லை.தொழிலாளர்களை அதே நிலையில் வைத்திருக்கவே தொழிற்சங்கங்கள் ஆசைப்படுகின்றன. எமது திட்டத்தின் கீழ் பல தோட்டங்களில் மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா வேதனம் பெறும் தொழிலாளர்கள் உள்ளனர்’ என்று கலாநிதி ரொஷான் ராஜதுரை அண்மையில் தெரிவித்திருந்தார்.இதேவேளை தேயிலை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிநிலை, உற்பத்தி செலவு அதிகரிப்பு என்பன தொடர்பிலும் கம்பனி தரப்பு செய்திகள் வலியுறுத்தியுள்ளன.2020 இல் 300 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் 2022 இல் 251 மில்லியன் கிலோகிராம் தேயிலையே உற்பத்தி செய்யப்பட்டது.என்றபோதும் தொழிலாளர்களின் நலன்களுக்கு தொடர்ந்தும் வலுசேர்த்து வருவதாக  கம்பனிகள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்டக் கம்பனிகள் வெளியார் உற்பத்தி முறை தொடர்பில் அதிகமாக வலியுறுத்தி வருகின்றன.இம்முறையின் மூலமாக அதிகரித்த வருவாயை தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கம்பனிகளின் கருத்தாக உள்ளது. இதேவேளை தொழிலாளர்கள் காணியுரிமையை பெற்றுக் கொள்வதற்கு அடித்தளமாக வெளியார் உற்பத்தி முறை அமையும் என்று புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே வெளியார் உற்பத்தி முறை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரன் பின்வருமாறு கருத்து தெரிவிக்கின்றார்.’தோட்டக் கம்பனிகள் அவுட்குரோ முறைமையில் செல்வதற்கு முற்படுகின்றன.அதாவது ஆயிரம் தேயிலைப் செடிகளை கொடுத்துவிட்டு தொழிலாளர்களிடமிருந்து 50 ரூபாவுக்கு கொழுந்து வாங்கும் முறையை ஏற்கமுடியாது.பெருந்தோட்டக் காணிகள் குத்தகை அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.10 நாட்கள் ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) என்பவற்றுடன் தோட்டத்தில் வேலை அவசியம். எஞ்சியுள்ள நாட்களில் அவுட்குரோ முறைமைக்கு செல்லலாம். தனியார் உரிமையாளர்களிடமிருந்து வாங்கும் விலைக்கே தொழிலாளர்களிடமிருந்தும் கொழுந்து வாங்கப்பட வேண்டும்’ என்று ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள விடயம் இப்போது மீண்டும் பேசுபொருளாகி இருக்கின்றது.சமகால விலைவாசி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கை செலவு மேலோங்குகை என்பவற்றுக்கு மத்தியில் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 1000 ரூபா வழங்கப்படுவது எவ்வகையிலும் நியாயமாகாது.இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் அவர்களுக்கு 2000 ரூபாவினை வழங்குவதற்கு உரிய தரப்பினர் முன்வர வேண்டும் என்று முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் கோரிக்கை

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான புதிய கூட்டு ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவை வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து தமக்கு  அறியத்தருமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோட்டக் கம்பனிகளின் பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.எனினும் கம்பெனிகள் இக்கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் 1700 ரூபா சம்பள உயர்வை வழங்குவது சாத்தியமற்றது என்றும் தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறெனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கீடு உச்சமடைந்து வரும் நிலையில் ஏனைய துறைகளின் பாதிப்பும் இதனால் மேலோங்கியுள்ளது.இவைகளை கருத்தில் கொண்டு நியாயமான சம்பள அதிகரிப்பை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசியல், தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியமாகும்.

 

Exit mobile version