Tamil News
Home செய்திகள் இரண்டு தோ்தல்களுக்கும் இரண்டாயிரம் கோடி ரூபா தேவை – தோ்தல்கள் ஆணையாளா் அறிவிப்பு

இரண்டு தோ்தல்களுக்கும் இரண்டாயிரம் கோடி ரூபா தேவை – தோ்தல்கள் ஆணையாளா் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு 20 பில்லியன் ரூபாய் (இரண்டாயிரம் கோடி ரூபா) தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய் (ஆயிரம் கோடி) நிதி ஒதுக்கீடு அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் ஊடகத்துறை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்த கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வருடம் அரச தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான மதிப்பீடு ஏற்கனவே நிதியமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுத் தேர்தலுக்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஆரம்ப மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச தலைவர் தேர்தல் தொடர்பான மதிப்பீடு ஏற்கனவே கடந்த வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு வழங்குவதற்கு நிதியமைச்சு கட்டுப்பட்டிருப்பதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் பொதுத் தேர்தலும் அரச தலைவர் தேர்தலும் நடத்தப்படுமாயின் அண்ணளவாக இரண்டாயிரம் கோடி ரூபாய் அவசியமானது எனவும், அது தொடர்பான மதிப்பீடுகள் தற்போதுள்ள தேவைகளுக்கு ஏற்ப முறையான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தியதாக சிங்கள வார ஏட்டின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version