Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவின் ஆயுதக் கொள்வனவு: தெற்காசியாவில் பெரும் ஆயுதக் குவிப்பிற்கு வழிவகுக்கும்

இந்தியாவின் ஆயுதக் கொள்வனவு: தெற்காசியாவில் பெரும் ஆயுதக் குவிப்பிற்கு வழிவகுக்கும்

இந்தியா அளவுக்கு அதிகமாக ஆயுதங்களை வாங்குவதாகவும், இது இந்தியாவின் ஆயுதக் குவிப்பை வெளிப்படுத்துவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கருத்து வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா 36ரஃபேல் விமானங்களை  வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதுடன், நேற்றைய தினம் அதில் 5 விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. பிரான்ஸ் நாட்டின் அதி நவீன 4.5ஆம் தலைமுறையைச் சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள் இவையாகும். இது ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானத் தளத்திற்கு வந்தடைந்துள்ளன. இந்நிகழ்வை மக்கள் திருவிழா போல கொண்டாடினார்கள்.

இதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத் தொடர்பாளர் ஆயிஷா ஃபாரூகி கருத்து வெளியிட்டுள்ளார். சில முன்னாள் மூத்த இந்திய அதிகாரிகள் மற்றும் பல சர்வதேச தகவலின்படி, இந்த ரஃபேல் ஜெட் விமானங்கள் இரட்டைத் திறன் கொண்ட அமைப்புகள் ஆகும்.

அவை அணு ஆயுத விநியோக தளங்களாக மாற்றப்படலாம். வகை மற்றும் விநியோக முறைகளின் அடிப்படையில் இந்தியா தனது அணு ஆயுதங்களை விரிவுபடுத்தி நவீனமயமாக்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இது தவிர இந்தியப் பெருங்கடலை அணுசக்தி மயமாக்கியுள்ளதுடன், ஏவுகணை அமைப்பு தளமாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் அதன் ஆயுதக் களஞ்சியத்தை அதிகரித்து வருகின்றது.

தனது பாதுகாப்புத் தேவைக்கு அப்பால் இராணுவத் திறன்களைத் தொடர்ந்து சேகரித்து வருவது கவலைக்குரியது. இந்தியாவின் இந்த நடவடிக்கையானது தெற்காசியாவில் பெரும் ஆயுதக் குவிப்பிற்கு வழிவகுக்கும். நம்பகமான மற்றும் புகழ் பெற்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களின் கருத்துப்படி, இந்தியா இப்போது உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version